வருடத்திற்க்கு இரண்டு மூன்று முறையாவது வீட்டுச்சிறையிலிருந்து விடுபடத் தவிக்கும் மனது சரியான தருணத்திற்க்காக காத்திருந்தது. அப்படிக் கிடைத்த ஐந்து நாட்களில் செய்த பயணம்தான் இது.
திட்டம் உருவான போது, மே மாதம் பதினைந்தாம் தேதியளவில் நண்பர்களுடன் சேர்ந்து செல்லலாம் என்பதே எண்ணம். என்னுடைய விடுமுறை நாட்கள் என் கட்டுபாட்டில் இல்லாததால் அது நிறைவேறவில்லை. அதனால் இம்முறையும் வழக்கம் போல தனியனாகவே பயணம்.
விடுப்பு, பயணம் என்றதுமே இமாலயாதான் நினைவுக்கு வருகிறது. Himalaya is calling! முதலில் Dharamsala செல்வதாகத்தான் திட்டமிட்டேன். அங்குள்ள triund trek ஐ முடித்துவிட்டு அருகிலுள்ள உலகிலேயே அபாயகரமான சாலைகளில் முதல் இடத்தில் இருக்கும் “killar -kishtwar” ஐ மோட்டார் சைக்கிளில் கடக்கலாம் என ஆசைப்பட்டேன். அதைப்பற்றி படிக்க ஆரம்பித்த போதுதான் தெரிந்தது அந்த சாலை ஆறு மாதங்கள் பனியில் மூடி இருக்கும் - மே மாதம் இறுதியில்தான் திறக்கப்படும் என்று. அடுத்து, ஹிமாச்சல்மாநிலத்தில் வேறு எங்கு செல்லலாம் என்று இணையத்தில் ஆராய்ந்தேன். மனாலி பற்றிய விபரங்கள் வந்தது. வருடம் முழுதும் செல்லக்கூடிய இடம். அருகில் பல இடங்கள் trekks செல்லவும் மோட்டார் சைக்கிளில் சுற்றுவதற்க்கும் இருந்தன. மனாலிக்கு அருகில் beas Kund trek ( மனாலியில் ஓடும் பியாஸ் நதியின் மூல ஊற்றை அடையும் இடம்) மிகப்பிரபலமானது. முதல் இரண்டு நாட்கள் அங்கு சென்றுவிட்டு மீதம் இரண்டு நாட்கள் spiti or lahaul valley செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் போதுதான் அதிலுள்ள சிக்கல் புரிந்தது. விமான நிலையம் மனாலியிலிருந்து 50 கிலோமீட்டர்கள் தொலைவில் குலுவிற்க்கு( kullu) அருகில் உள்ளது - Bhuntar விமான நிலையம். சுற்றிலும் உயரமான மலைகள் சூழ்ந்தது. அதில் விமானங்கள் தரை இறங்க நிறைய சவால்கள் உள்ளன - ஒரு கிலோமீட்டரே தூரமுள்ள ஓடுகளம் உட்பட. அதனால் டிக்கெட் விலை அதிகமாக இருந்தது. நடுத்தர வர்க்க சுற்றுலாப்பயணிகள் சண்டிகர் அல்லது டெல்லியில் இருந்து சாலை வழியாகவே மனாலி செல்வர். நாங்கள் லே லடாக் சென்றபோதும் டெல்லியிலிருந்து மனாலி சென்றது நினைவிற்க்கு வந்தது.
நான் சண்டிகர் வழியை தேர்வு செய்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தேன். சண்டிகரிலிருந்து HRTC volvo பேருந்து. தூரம் முன்னூறு கிலோமீட்டர்கள். பெரும்பாலும் மலைப்பாதை என்பதால் எட்டு மணி நேர பயணம். இரவுப் பேருந்துகள் இருந்தன. மலைப்பாதை என்பதால் பகல் நேரத்தில் முன்பதிவு செய்தேன்.
29 ம் தேதி ஏப்ரல் - சனிக்கிழமை
உத்ராகண்ட் பயணத்தின் போது செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள முயற்ச்சித்தேன். குளிருக்கான உடைகளையும் சேர்த்து சூட்கேஸில் திணித்தேன். மோட்டார் சைக்கிளில் சுற்றும்போது அதில் வைத்து கட்டுவதற்க்கு ஏற்ற ஒரு பையையும் எடுத்துக் கொண்டேன்( அப்படி போகும்போது சூட்கேஸை விடுதியிலேயே வைத்துவிடலாம்). மோட்டார் பைக் ரைடிங் கியர்ஸ் மற்றும் ஹெல்மட் இவைகளே பெரும்பகுதி இடத்தை அடைத்துக் கொண்டன. இந்த முறை சாமான்கள் அதிகம் இருந்தாலும் சூட்கேஸில் எடுத்துச் செல்வதால் சுலபமாக இருந்தது. சென்ற முறை saddle bag ( செக் இன் போது அது ஒரு பையா இரண்டு பையா என்று விசாரணை வேறு !) ஐ வைத்துக் கொண்டு சிரமப்பட்டேன்.
இரவு ஒன்பது மணிக்கு சென்னை- சண்டிகர் விமானம்.
சென்னையிலிருந்து நேரடி விமானம் இல்லை. புனேயில் நான்கு மணி நேரம் லே ஓவர். ஓய்வு அறையில் சோபாவில் காலை நீட்டி தூங்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன். புனே- சண்டிகர் விமானத்தில் அமர்ந்ததும் நன்றாக தூக்கம் வந்தது. காலை ஆறு மணிக்கு சண்டிகர் சென்று சேர்ந்தேன்.
30ம் தேதி ஏப்ரல்
எட்டு மணிக்கு மனாலி செல்ல பேருந்து. செக்டர் 43 செல்லவேண்டும். சண்டிகருக்கு வருவது இதுதான் முதல் முறை. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம்; பல செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி இல்லாமல் தாராளமான இடத்துடன் வீதிகள் தென்பட்டன. நேர் கோட்டில் நீளமான சாலைகள். போக்குவரத்து நெரிசல் இல்லை. நிறைய மரங்கள். சில இடங்கள் காடு போல காட்சியளித்தன. அழகான நகரம்.

பேருந்து நிலையம் பழைய நாட்களை நினைவிற்க்கு கொண்டுவந்தது. காலை சிற்றுண்டிக்கு உணவகத்தில் அமர்ந்திருக்கும் போகு ஒரு வித்தியாசமான நிகழ்வைக் கண்டேன். எல்லாக்கடைகளும் lays போன்ற நொறுக்குத்தீனிகளாலும் pepsi, coca cola போன்ற பானங்களாலும் நிரம்பி வழிந்தது. வருபர்கள் அனைவரும் அவைகளை மட்டுமே வாங்கிச் சென்றனர். பெரும்பாலான இள வயதினர் சற்று பருமனாக இருந்தது ஆச்சரியமளிக்கவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்தில் பயணம். ஜன்னலோர இடம் கிடைக்கவில்லை. இருக்கையில் சீட் பெல்ட் வசதி இருந்தது ஆச்சரியமளித்தது. அதை அணிந்து கொள்ளலாம் என முயற்ச்சிக்கும் போது தான் தெரிந்தது - அதை சீட்டிற்க்கு பின் நுழைத்து வைத்திருந்தனர் -வெளியே எடுக்க முடியாத படி. உயரமான volvo பேருந்து மலைப்பாதைகளில் பயணிக்கும் போது சாய்ந்து சாய்ந்து இருபுறமும் அலைந்து semicircular canals ஐ தூண்டியது . சிறிது நேர சிரமத்திற்க்கு பின் பழகிவிட்டது. பிலாஸ்புர், மண்டி, குலு என்று தூரங்களைக் கடந்து பேருந்து சென்று கொண்டிருந்தது. பகல் நேர மலைப் பாதை பயணத்தை அனுபவிக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் அப்படி ஒரு அனுபவம் ஏற்படவில்லை. மேக மூட்டம் மலைத்தொடர்களை மறைத்திருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். மனாலி சென்று சேர மாலை ஆறறை மணி ஆகி விட்டது.
மனாலி பற்றி…
இந்து புராண கதைகளின் படி மனுவின் வீடே( Manu - Alaya ) மனாலி. வரலாற்றில் பெரும் வெள்ளம் அல்லது ஊழி வெள்ளத்தின் போது( great deluge or flood) மக்களையும் மற்ற உயிரினங்களையும் தன்னுடைய பெரிய படகு போன்ற ஒன்றில் காப்பாற்றி மனு கரையேரிய இடம்தான் மனாலி ( இதே போன்ற புராணக் கதைகள் உலகின் எல்லா முக்கியமான நாகரிகத்திலும் இருப்பதால் அப்படி ஒரு நிகழ்வு வரலாற்றில் உண்மையில் நிகழ்திருக்க வாய்ப்புள்ளதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். Netflix ல் இதைப்பற்றி ஒரு தொடர் உள்ளது).
மனாலி , குலு இரண்டும் குலு பள்ளத்தாக்கில் ( Kullu Valley) அமைந்துள்ளது. பியாஸ் ( beas ) நதிக்கரையில் அமைந்துள்ள மனாலி பழங்காலத்தில் வணிகத்திற்க்காக திபெத் செல்லும் பாதையில் சிறிய கிராமமாக இருந்துள்ளது. மனாலி கடல் மட்டத்திலிருந்து 2050 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதற்க்கு வடக்கில் பிர் பாஞ்சல்( pir panjal) இமய மலைத்தொடரும் தெற்க்கில் தெளலாதர் (Dhauladhar) மலைத்தொடரும் உள்ளது.
பேருந்தை விட்டு இறங்கியதும் வாடகைக் கார் ஓட்டுனர்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். ஒருவனிடம் நான் முன்பதிவு செய்திருந்த தங்குமிடத்தின் விலாசத்தை சொல்லி வண்டியில் ஏறிக்கொண்டேன். அவன் மெதுவாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். எங்கிருந்து வருகிறேன். என்ன திட்டம். சுற்றி பார்க்க வாடகைக் கார் வேண்டுமா? என்று. நான் beaus kund trek பற்றி சொன்னவுடன் அது பனியால் மூடி உள்ளதாகவும் பனி உருகி பாதை சரியாக இன்னும் பத்து பதினைந்து நாட்கள் ஆகும் என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தான். நான் சென்னையிலிருந்தே ஒரு trek guide உடன் பேசி வைத்திருந்தேன். அவன் இந்த மாதிரி பிரச்சனைகள் எதுவும் சொல்லவில்லை. ஒரு வேளை அந்த டாக்ஸி ஓட்டுனர் என்னை வேறு இடத்திற்க்கு தன்னுடைய டாக்ஸியில் அழைத்துச் செல்ல பொய் சொல்கிறானோ என்ற ஐயம் எழுந்தது. உடனே Trek guide ஐ போனில் அழைத்து பனி மூடிய பாதை பற்றி விசாரித்தேன். அவன் அது உண்மைதான் எனவும் இருந்தாலும் மலை ஏற முடியும் என்றும் தெரிவித்தான். குழப்பமாக இருந்தது. பனிமூடிய வழியில் மலை ஏறுவது உயிருக்கு ஆபத்து - சறிக்கிவிடும் -என்று டாக்ஸி ஓட்டுனர் சொன்னான். சிக்கலிலிருந்து காப்பாற்றிய அவனுக்கு ஒரு நன்றியை தெரிவித்துவிட்டு அந்த trek திட்டத்தை ரத்து செய்தேன்.
புதிதாக இன்னொரு பிரச்சனை முளைத்தது. முன் பதிவு செய்திருந்த தங்குமிடம் எனக்குப் பிடிக்கவில்லை. நகரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்தது. அறைகள் உபயோகிக்கப்படாமல் இருந்தால் வரும் பூஞ்சை மணத்துடன் இருந்தன. வேறு இடம் - மால் ரோடிற்க்கு( அதுதான் மனாலியின் மையப்பகுதி) அருகில் தேட ஆரம்பித்தோம். ஒரு மணி நேரம் அலைந்து, நாலைந்து இடம் ஏறி இறங்கி, முடிவில் ஒரு சுமாரான இடத்தில் தஞ்சம் புகுந்தேன். கூகுளில் தேடி Biker Point என்ற இடத்தில் வாடகை மோட்டர் சைக்கிளை முன்பதிவு செய்தேன்.
இருக்கும் குழப்பத்தை எல்லாம் தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு மால் ரோடில் உலவச் சென்றேன்.சுகமான குளிர். சூடான சுவையான உணவு பறிமாறும் பல வீதிக் கடைகள் மற்றும் உணவகங்கள். சென்னை உணவகங்களின் சுவையற்ற உணவை உண்டு சலித்த எனக்கு இந்த பகுதிகளுக்கு வரும்போது பெரிய விருந்துதான். குறிப்பாக பஞ்சாபி உணவு வகைகள் சிறப்பு ( என்னைப்பொறுத்த வரை சென்னை உணவகங்களின் உணவுதான் இந்தியாவிலேயே மிக மோசம். சுவையும் இருக்காது. சாப்பிட்டால் வயிறு கெட்டுப்போவதும் உறுதி). இரவு உணவை முடித்து விட்டு இலக்கின்றி சுற்றினேன். ஏதோ பண்டிகை. கடவுள் உருவத்தை தோளில் சுமந்து ஊர்வலமாகச் சென்றனர்.
அந்த சாலை - மால் ரோட்- முழுதும் மகிழ்ச்சியான மக்கள் திரளால் நிறைந்திருந்தது.அவர்களின் சந்தோசமும் உற்ச்சாகமும் எனக்கும் தொற்றிக்கொண்டது.மனாலியில் முதன் முதலாக night club என்று ஒரு ஹோட்டலில் பேனர்
வைக்கப்பட்டிருந்தது. சுற்றி முடித்துபிட்டு பதினோரு மணி வாக்கில் அறைக்குத்திரும்பினேன். நாளை எங்கு செல்லலாம், என்ன செய்யலாம் என்பதை இனிதான் முடிவு செய்ய வேண்டும்.
பயணம் தொடரும்…

No comments:
Post a Comment