Sunday, December 13, 2015

ஒரு மழை நாள் இரவில் ... சிறு கதை


அடர்ந்த காடு.

அமேசான் காடுகளை National Geography ல் பார்த்திருப்பீர்களே, அதைப்போல ஒன்றை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நான் அந்த காட்டிற்குள் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன். ஏன்???....

ஏன் ,கேட்க மாட்டீர்கள், புலி துரத்தினால் ஓடாமல் என்ன செய்வது!

நான் ஏன் தனியாக வந்து இப்படி மாட்டிக்கொண்டேன்?

ஒரே குழப்பமாக இருந்தது.

என்னுடைய வேகம் எனேக்கே ஆச்சரியமாக இருந்தது. மூச்சு வாங்கவில்லை. ஆனால், எனக்கும் அந்த விலங்குக்கும் உள்ள தூரம் குறைந்துகொண்டே வந்தது. வேகத்தை இன்னும் அதிகரிக்க முயற்சிக்கும்போது , ஒரு மரத்தின் வேர் தடுக்கி , இலைகள் சரசரக்க தரைமீது மல்லாக்க விழுந்தேன். புலி என்மீது பாஆஆய்ய்ய்..........யாரோ freeze பட்டனை அமுக்கியதைப்போல அப்படியே அந்தரத்தில் நின்றது புலி. நான் மல்லாக்க இருந்தபடியே நகர முயற்சிக்கிறேன். ஒரு சிறு அசைவு கூட செய்ய இயலவில்லை. வேறு வழியில்லை. இனி தப்பிக்க முடியாது. சாகப்போகிறேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சாகும் தருணத்தில் , நம் முழு வாழ்க்கையையும், ஒரு flash போல, ஒரு கணத்தில் short film ஆக High Definition ல் பார்க்க முடிகிறது. நெஞ்சு படபடவென்று அடித்தது.வேர்த்து கொட்டியது .

திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து விழித்தேன்.









power cut ஆகியிருந்தது.

அப்பாடா! சாகவில்லை !

மறுவாழ்வு கிடைத்த சந்தோசம். அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இரவா , பகலா ? நான் இருப்பது கிராமத்திலா, சென்னையிலா ? வீட்டிலா, hotel லிலா ?- hang ஆன மூளை நல்லவேளை  slow வாக boot ஆகிவிட்டது. பெயரும் மற்ற விவரங்களும் மறக்கவில்லை.

படுக்கை அறையை விட்டு வெளியே வந்ததும் தான் இருட்ட ஆரம்பத்திருந்தது தெரிந்தது .

ஞாயிற்றுக்கிழமை.

சாயந்திரம் ஆறு  மணியிருக்கும். மனைவி மும்பை சென்றிருக்கிறாள். மாமனாருக்கு இருதய பைபாஸ் ஆபரேஷன்  முடிந்து ஒரு மாதமாக இங்குதான் இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் , தன் அக்காவின் வீட்டில் அவரை ஓய்வெடுக்க விட்டு வர த்தான் மும்பை பயணம்.

நீண்ட நாளைக்கப்புறம் கிடைத்த தற்காலிக சுதந்திரத்தை முழுவதுமாக அனுபவித்தேன் . நினைத்த நேரத்தில் சாப்பாடு, உறக்கம் மற்றும் வேண்டும்போது உரக்க ஒலிக்கும் இசை என்று ஒரு நீண்ட பட்டியல்.

ஆனாலும் இரண்டு நாட்களில் போரடிக்க ஆரம்பித்துவிட்டது.

இரவு 11 மணி விமானத்தில் சென்னை திரும்புகிறாள். சென்று அழைத்து வர வேண்டும்.9 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

பசித்தது. சாப்பிட பழங்களைத்தவிர ஒன்றுமில்லை.

fridge லிருந்து எடுத்த apple லை சிறுது நேரம் வெறித்து பார்த்தபடி இருந்தேன்.
ஜூன் மாத வெக்கையில் அதற்க்கும் வேர்க்க ஆரம்பித்திருந்தது! ஒருவேளை கையிலிருந்த கத்தியைப் பார்த்து பயந்திருக்குமோ?!

சட்டென்று திரும்ப வந்த கரண்ட் , ஒளி வெள்ளத்தால் ஒரு கணம் திடுக்கிட வைத்துவிட்டது.

என்னவென்றே தெரியாமல் மனதில் ஒருவித பயம்,படபடப்பு  சூழ்ந்து கொண்டது -அந்த கெட்ட  கனவின் தொடர்ச்சியாக. பல சமயங்களில் இந்த மாதிரி தோன்றும்போது , எதாவது அசம்பாவிதம் நடப்பது நினைவுக்கு வந்து தொலைத்தது.

9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு காரை நோக்கி நடந்தேன்.

தென்மேற்கு பருவக்காற்று ஆரம்பித்திருந்தது . வேகமாக வீசிய காற்றில் மண்வாசனையுடன் , தூசும், குப்பை காகிதங்களும் மிதந்து கொண்டிருந்தன.

காற்று சற்று குளிராக இருந்தது. அருகில் எங்கோ மழை.

என்னுடைய சிறிய தனி வீட்டிற்கு எதிரில் பூதமாக நின்ற , அந்த  புது 11 அடுக்கு குடியிருப்பு கட்டிட வேலை முடியும் தருவாயில் இருந்தது. இதை பார்க்கும் போதெல்லாம் எரிச்சலும் கோபமும் வந்தது. நான் வசிக்கும் இந்த சென்னை புறநகரில் நான்கு அடுக்குக்கு மேல் கட்ட அனுமதி இல்லை. யாரைப்பிடித்து லஞ்சம் தந்து அனுமதி வாங்கினார்கள் என்று தெரிய வில்லை.

எதுவும் தப்பாக நடந்துவிடக்கூடாதே என்ற எச்செரிக்கையுடன் மெதுவாக , வெகு கவனமாக காரை செலுத்தினேன்.

போரூருக்கு அருகில் ஒரு தெருவில்  , நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு ஓலமிட்டுக்கொண்டிருந்தது . வீதியில் யாருமில்லை . ஏதோ செவ்வாய் கிரகத்தில் பயணிப்பதாக உணர்வு .சமீபத்தில் படித்த "உப்புநாய்கள்" நாவல் ஞாபகத்திற்க்கு வந்தது. அதில் நயைக்கொன்று அதை கோழிக் கறி என்று உணவு விடுதிகளுக்கு விற்பார்கள். குமட்டலாக வந்தது.அந்த நாவலைப் படித்ததிலிருந்து  non veg ஐ  restaurant களில் தவிர்த்தேன் .

கசப்பான நினைவுகளிளுருந்து மனதை திசை திருப்ப ராஜாவின் பாடலை ஆன் செய்தேன் .

கிண்டியை நெருங்கும்போது தூறல் ஆரம்பித்திருந்தது.


10 மணிக்கெல்லாம் ஏர்போர்ட்டை நெருங்கிவிட்டேன்.

இன்னும் ஒரு மணி நேரம்.

ஏர்போர்டிற்கு உள்ளே சென்றால் hefty பார்கிங் fee - 5 நிமிடத்தில் வெளியே வராவிட்டால். மிடில் கிளாஸ் mentality தீவிரமாக யோசித்து ஒரு ஐடியா தந்தது.

ஏர்போர்ட்  ரோடில் Radisson Blue க்கு அருகில் வண்டியை  ஓரங்கட்டினேன். மனைவி ஏர்போர்ட் arrival  pick  up இட த்திற்கு வந்தப்புறம் , செல்வதாக plan. அவனைப்போலவே நிறைய taxi கள் பார்க்கிங் fee ஐ தவிர்க்க நின்றுகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

சிறிது நேரத்தில் , அதைப் பொறுக்க  முடியாமல் குச்சான்கள்(police ) , "no parking ...வண்டிய எடு " என்று அவர்களுக்கு தெரிந்த மிக மரியாதையான மொழியில் மிரட்டினர் .

மெதுவாக நகர்ந்தேன்.

Trident Hotel  ஐ தாண்டியதும் இடதுபுறம் நங்கநல்லூர் செல்லும் சிறிய சந்து தெரிந்தது. அங்கு police வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் வண்டியை திருப்பினேன்.

ரோடோரத்தில் நிறுத்தி லைட் டை அணைத்தேன்.

என்ஜின் ஓசை நின்றதும்தான், அந்த மனதை கிலியூட்டும் அமைதியை உணர முடிந்தது.

டப்...டப்...டப்.... என்று மெதுவாக தாள லயத்துடன் மழைத்துளிகள்  காரின் கூரை மீது நடனமாடிக்கொண்டிருந்தது.

ஒரு வேளை , எதாவது adventure or thrill ஆக நடக்க வேண்டும் என்று வேண்டுமென்றே  இந்த மாதிரி தேவை இல்லாத விஷயங்களை செய்கிறேனோ? என் மீதே சந்தேகம் வந்தது.

கண்ணுக்கு தெரிந்தவரை ஆள் நடமாட்டமில்லை.

பணத்திற்காக தாக்கப்படலாம்.

திடீரென்று pizza படத்தில் வருவது போல மோகினி பிசாசு எதாவது வருமோ?

இங்கு நிற்காதே என்று உள்ளுணர்வு சொல்லியது. வண்டியை எடுக்கலாமா என்று யோசித்தபொழுது, ஒருவன் டூ வீலரை தள்ளிக்கொண்டு எதிரில் வந்து கொண்டிருந்தான். அருகில் வந்ததும் , காரின் உள்ளே நோட்டமிட்டான். நெஞ்சு மறுபடியும் பட பட வென்று அடிக்க ஆரம்பித்தது.

ஜன்னலில் knock செய்து ஏதோ சைகை செய்தான்.

திறக்கலாமா ? வேண்டாமா?

பயத்துடன் காரின் ஜன்னலில் ஒரு பகுதியை திறந்தேன்.

"airport க்கு எப்படி போனும்?....மழையில வண்டி வேற மக்கராய்டுச்சு "

அதைக்கேட்டதும் கொஞ்சம் தைரியம் வந்து முழு ஜன்னலையும் திறந்தேன்.

"நேரா போயி...left ல திரும்புங்க....ரெண்டு கிலோமீட்டர் ல ஏர்போர்ட்
வந்துரும் " வலுக்கட்டாயமான புன்னகையால் பயத்தை மறைத்தேன்.

நன்றி தெரிவித்துவிட்டு சென்றுவிட்டான்.

மனம் நிம்மதியடைந்தாலும் , உங்களைப்போலவே எனக்கும் எதிர்பார்த்த twist இல்லாமல் சப் பென்று ஆகிவிட்டது.

சிறிது நேரத்தில், ஆசிரியர் வெளியே சென்றதும் பள்ளி மாணவர்களின் அமைதி மாறி சலலப்பு , கூச்சலாகுமே , அதைப்போல மழை சத்தத்தின் ஆரவாரம் அதிகமானது- ஹோ என்ற இரைச்சலுடன் .

11 மணியாகிவிட்டது. கால் ஒன்றும் வரவில்லை.

விமானத்தின் பாதுகாப்பான தரையிரங்களைப் பற்றிய அடுத்த பயம் தொற்றிக்கொண்டது.

இன்று , அந்த கெட்ட கனவிற்கு அப்புறம் நடப்பது எதுவுமே சரியாக தோன்றவில்லை.

வழக்கம் போல எதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ??

நேரம் செல்ல செல்ல பட பட ப்பு  கூடிக்கொண்டே போனது. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இஷ்ட தெய்வங்களை பிரார்தித்துக்கொண்டேன் .

12 மணியாகிவிட்டது. மழையும் விட்ட பாடில்லை.

டிருங் ....டிருங் ....டிருங் ....

மொபைல் ரிங் டோன் கூட திடிக்கிட செய்தது.

மனைவியிடமிருந்து போன்.

மழையால் லேன்டிங் தாமதம் .

நிம்மதிபெருமூச்சுடன் வண்டியை கிளப்பினேன்.

"rough landing.... bad day "  வீட்டிற்கு திரும்பும்பொழுது மனைவி சொல்லிகொண்டிருந்தாள் .

நான் கமுக்கமாக , எனக்கு நேர்ந்த பயத்தையும் பட பட பையும் காட்டிக்கொள்ளாமல் புன்னகைத்தேன்.

மறுபடியும் வெகு கவனமாக வண்டி ஓட்டினேன்.

இன்னும் சிறிது தூரம்தான். எதுவும் நடக்கக்கூடாது .

 marathon ன் கடைசி சில மைல்களை கடப்பது  போல நிமிடங்கள் சென்றன.
finish line ஐ  தொடும் ஆர்வத்தில் இருந்தேன்.

ஆனால்......


வீட்டை நெருங்கியதும், அந்த வீதி வழக்கித்திற்க்கு மாறாக ,ஏதோ பெரிய இடர்பாடு நடந்த இடம் போல இருந்தது.


மக்கள் கூட்டம்.

அழுகை , கூச்சல் மற்றும் siren களுடன் தீயணைப்பு வண்டிகளும் ஆம்புலென்ஸ்களும்  - அச்சத்தை உண்டாக்கின.

வண்டியை விட்டு இறங்கி , மனித குமபலுக்கிடையில் ஊடுருவினேன்.

அங்கே நான் கண்ட காட்சி.....

அந்த 11 அடுக்கு மாடி குடியிருப்பு என் வீட்டின் மேல் விழுந்து தரை மட்டமாயிருந்தது . என் வீடு இருந்த இடம்  மண் குவியலாக ஒரு சிறு குன்று போல் காட்சியளித்தது.




புத்தன் ராஜரத்தினம் ,

13-12-2005.




Friday, February 20, 2015

மரணம்


                           

                             



இழப்பு உண்டாக்கும் ரணத்திற்க்கு
மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை இன்னமும்.


சோதனை முயற்சிகளாக
ஆறுதல் வார்த்தைகள்
கண்ணீர்
அமைதியற்ற மௌனம்
ஆசுவாசப்படுத்தும் மெல்லிய அணைப்பு...


தாயை இழந்த பிள்ளையை
பிள்ளையை இழந்த தாயை

கணவனை இழந்த மனைவியை
மனைவியை இழந்த கணவனை

நண்பனை இழந்த நண்பியை
நண்பியை இழந்த நண்பனை

நண்பனை இழந்த நண்பனை

எப்படி ஆறுதல் படுத்துவது ?

 இழப்பு உண்டாக்கும் வெற்றிடத்தை
 எதைக்  கொண்டு நிரப்புவது?


காயங்கள் தழும்பாவதை தடுக்க!




Chennai,
20-02-2015.


Friday, January 16, 2015

ரேக்கிங் : Ragging - "Ra..jing...jing..i...n...jing"

சிறுகதை

Yercaud   எக்ஸ்பிரஸ்  சென்னையை நோக்கி - மன்னிக்கவும்  மதராசை நோக்கி - (இந்த கதை நடந்த வருடம் 1990!)- மெதுவாக ஊர்ந்து  கொண்டிருந்தது.
எப்பொழுதும் போல் ஜன்னலோர இருக்கை. பகலின் சூடு தணிந்து இதமான இரவுக் காற்று முகத்தை வருடியது .தொலைவில் முழு  நிலா, ரயில்  நூலின் பட்டமாக(kite ) தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. தூக்கம் வரவில்லை. மனம், சில தினங்களுக்கு முன் நடந்த  அவன் தலை எழுத்தையே மாற்றக் கூடிய அந்த அதிர்ச்சியான விஷயத்தை விட்டு வர சிறு குழந்தையாய் அடம்பிடத்தது. 

அவன் பிறந்து வளர்ந்தது ஒரு  சிறிய கிராமத்தில். பத்தாம் வகுப்பு வரை படித்ததும் அங்குள்ள அரசு பள்ளியில்தான் - தமிழ் மீடியத்தில்  என்று தனியாக  சொல்லத்  தேவை இல்லை. சிறு வயதிலிருந்து படிப்பில் அவனுக்கு போட்டியாக யாருமில்லை. எப்பொழும் முதல் மதிப்பெண். நீ டாக்டர் ஆக வேண்டும் -  என்ற மந்திர சொல்லை திரும்ப திரும்ப கேட்டு - வாழ்க்கையில் வேறு இலக்கு ஏதும் இருந்திருக்கவில்லை.பிளஸ் ஒன் ,பிளஸ் டூ படிக்க சென்ற திருச்சி Bishop Heber  -லும் அதே நிலைமை தொடர்ந்தது. தமிழ் மீடியத்தில் எப்பொழும் அவனே முதல்.

இப்படி வானத்தில் பறந்து கொண்டிருந்த அவனை பூமிக்கு கொண்டுவரும் - இல்லை அதர பாதாளத்தில் தள்ளி விடும்  விதமாக அந்நிகழ்வு அமைந்துவிட்டது. பிளஸ் டூ வேதியியல் பாடத்தில்,மதிப்பெண் எதிர்பார்த்ததை விட குறைவாகக்  கிடைத்தது . அது ஏனென்று இன்றுவரை அவனுக்கு புரியவில்லை.

டாக்டர்  கனவு, நீர்குமிழியாய் நிமிடத்தில் மறைந்து போனது. கணக்கு பாடத்தில்  நல்ல மதிப்பெண் பெற்றும், தரமான  இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், அவன் அப்பாவுக்கு அதில் இவனை சேர்க்க விருப்பமில்லை! அவனுடைய விருப்பத்தை யாரும் கேட்கவில்லை. கேட்டிருந்தாலும் அவனுக்கு அப்படி ஒன்று இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

அவனை veterinary doctor ஆக்குவது என முடிவானது. மெட்ராஸ் வேப்பேரியில்  உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேரத்தான்  இந்தப் பயணம் -  அவன் தந்தையுடன் .

வாழ்கையின் முதல் பாடமே இவ்வளவு கசப்பானதாக இருந்ததின் வருத்தம் அவனுக்கு. இருந்த ஒரே இலக்கும் மறைந்து போனதும் , காரிருளில்  நோக்கின்றி பயணிக்கும் பார்வை அற்ற பறவையாய்  தன்னை உணர்ந்தான்.

அவனுக்கு  கல்லூரி பற்றிய , குறிப்பாக மருத்துவக் கல்லூரி குறித்த அந்த வயதிற்கே உரித்தான வண்ணக்  கனவுகள் நிறைய இருந்தன. நன்றி : கோலிவுட் சினிமா.
இப்போது அவை அழுது வடியும் கருப்பு வெள்ளை  சிவாஜி படமாக மாறிப் போனது. "போனால் போகட்டும் போடா"- விதமாக!

மெட்ராஸ்க்கு வருவது  இது இரண்டாம் முறை. முதல் முறையின் பயண நினைவுகள் மனதில் பதியவில்லை- மிக சிறு வயதில் வந்தது. திருச்சி நகரத்தில் படித்திருந்தாலும், மெட்ராஸ் முற்றிலும் புதுமையானதாக  தெரிந்தது. பல பிரமாண்டமான அடுக்குமாடி கட்டிடங்கள் , பர பரப்பாக எங்கோ விரைந்து செல்லும் மக்கள், நாகரீகமான உடல் பாவனைகள்,  புரிந்தும் புரியாத ஆங்கிலம் - அவனுக்கு ஏனோ மெட்ராஸ்சை சுத்தமாக பிடிக்கவில்லை. அந்நகரம் தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை, மாறாக இழிவுபடுத்துவதாக, ஒருதுரும்பைப் போல்
உணரவைப்பதாக  தோன்றியது.

காலேஜ் மற்றும் hostel  admission முடிய சாயந்திரமாகிவிட்டது. அவன் அப்பா விடைபெற்று செல்லும்போது ஒரு இனம் புரியாத சோகம்,பயம் மனதில் குடிகொண்டது. அவனுடன், புதிதாய் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு ஒரு hostel room தரப்பட்டது. Hostel வாழ்க்கை புதிதில்லை என்றாலும் முதல் கல்லூரி நாளை நினைத்து பரவசமும் ragging பற்றிய பயமும் ஒன்று சேர்ந்து அமைதியின்மை ஏற்பட்டது.அவனுடைய அறை நண்பர்களில் ஒருவன் ragging ன் சில எழுதப்படாத விதிகளை சொல்லிக்கொண் டிருந்தான். மீசையை மழிக்க வேண்டும் , அனைவையும் sir சொல்லி அழைக்க வேண்டும் , military style ல் salute அடிக்க வேண்டும்  என, ஒரு  நீண்ட நினைவில் நிற்க கடினமான rules களை அடுக்கிக் கொண்டே போனான் .

முந்திய இரவின் உறக்கமின்மையும்,மா நகரம் தந்த மிரட்சியும் சேர்ந்து நிம்மதியில்லா, பயங்கர கனவுடன் கூடிய அயர்ச்சியளிக்கும் தூக்கத்தைத் தந்தது.

மறுநாள் காலை -"இளைய நிலா பொழிகிறது, guitar இசை"- கனவா நினைவா என்ற குழப்பத்துடன் கண் விழித்தான். அறை நண்பன் ஒருவன் guitar-ரை இசைத்துக்கொண்டே பாடிக்கொண்டிருந்தான். மற்றவர்கள் மீசை மழித்து அந்நியர்களாக காட்சியளித்தனர்.  அவனும் அந்நியனாக  ரெடி ஆகிக்கொண் டிருந்த பொழுது , மற்றொரு அறை நண்பன் பல சிறிய, பெரிய bottle களுடன் கண்ணாடி முன் நின்று கொண்டு புஸ் புஸ்ஸ் ....என்று புகை கிளப்பிகொண்டிருந்தான். அதன் பெயர்களை தெரிந்து கொள்ளவே சில மாதங்கள் தேவைப்பட்டது- Deodorant ,body lotion , perfume , sun screen lotion...

நண்பர்களுடன் சேர்ந்து முதல் நாள் வகுப்புக்கு சென்றான். Kollywood  பட நாயகனாக தன்னை பாவித்து கடைசி பெஞ்சாக பெண்களை பார்க்க வசதியான இடத்தை தேர்வு செய்தான். பையன்களின் பார்வை பெரும்பாலான நேரம் பெண்களை சுற்றியே தேனீயாய் வட்டமிட்டது.

முதன்முறையாக பல நாட்களுக்கு பின் மகிழ்ச்சியாக உணர்ந்தான்.சினிமா பொய்யில்லை. கால்நடை மருத்துவக்கலூரியும் நன்றாகத்தான் இருந்தது.பெண்களை நோட்டமிடும் அந்த முக்கியமான விஷயத்தை தொடர்ந்து கொண்டே என்ன பாடம் நடத்துகிறார் ஆசிரியர் என்பதைப்  பார்த்தான். ஒன்றுமே புரியவில்லை. அவர் பேசிய ஆங்கிலம், அதன் பொருள் என்று  எல்லாமே வேற்றுலக பாஷையாக காதில் விழுந்தது. அவன் படித்த நுரையீரல்,கல்லீரல்,மண்ணீரல்,தமனி சிரை  - இவைகளுக்கெல்லாம்  என்ன ஆனது???!!!

பெரும்பாலான படிப்பாளி மாணவர்கள்  notes எடுத்துக் கொண்டிருந்தார்கள்.சரி அடுத்த lecture ரைப் பார்ப்போம் என்றால் , எல்லாமே  அப்படித்தான் இருந்தது. இரண்டாவது பேரிடி. தமிழ் mediumத்தில்  படித்த அவனுக்கு ஆங்கிலத்தில் ஏதும் விளங்கவில்லை. முதன் முறையாக படிப்பைப் பற்றிய பயம் வந்தது. தன்னுடைய திறமைப் பற்றிய சந்தேகம் எழுந்தது. என்ன செய்வது?எப்படி சமாளிக்க போகிறோம்?மிகப் பெரும் கேள்விக்குறி பூதமாக பயமுறித்தியது .

Lunch காக  Hostel messக்கு  வந்தனர். சீனியர் மாணவர்கள் நுழைவாயிலிலேயே புள்ளி மானைக் கண்ட புலியாய்ப்  பாய்ந்தனர்.

Ragging ஆரம்பம்....

பெரும்பாலானவர்கள் இரண்டாம் ஆண்டுமானவர்கள். கடந்த ஆண்டு தாங்கள் அனுபவித்ததை வட்டியும் முதலுமாக திருப்பித்  தரும் வேகத்தில் இருந்தனர்.

முதலில் விளையாட்டாய், சிரிப்பை வரவழைக்கும் விதமாகத்தான் தோன்றியது.என்னடா சிரிப்பு என்று கன்னத்தில் பளார் அறை விழுந்ததும்தான் உண்மை நிலவரம் புரிந்தது. அடித்தவன் உயரம் குறைவாக ஒல்லியாக இருந்தான் . இவனை அறைய எம்பி குதிக்க வேண்டியிருந்தது. அடித்தவனை முறைத்தான். என்னடா முறைப்பு என்று மறுமடியும்  - பளார்! மறு கன்னத்தில் எம்பி அறைந்தான் . வாழ்க்கையில் வாங்கிய முதல் மற்றும் இரண்டாம் அறை.


                                              


அடுத்து ஒரு கும்பல் அவர்களை  Basketball  ground க்கு அழைத்து சென்றது.
அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க  இடம். ப - வடிவ Hostel கட்டிடங்களுக்கு நடுவில் அமைந்திருந்தது. அந்த ப-வில் ஒன்று girl 's Hostel ,மற்ற இரண்டும் boy's Hostel .

தன் வீர சாகசங்களை, தான் விரும்பும் கன்னியர்கள்  முன் மேடையேற்றும், senior மாணவர்களின் விளையாட்டு மைதானமாக அது மாறியிருந்தது . Girl's Hostel ஜன்னலிலுருந்து  நிறைய முகங்கள் ஆர்வத்துடன் ஆட்டத்தை ரசித்த வண்ணமிருந்தன . ஒரு வேப்ப மரம் அந்த பெண்களுக்கு  வசதியாக மற்றவர்கள் அவர்களை தெளிவாக பார்க்கா வண்ணம் உதவியது.

அவர்களை ரயில் தொடர் பெட்டியாக மாற உத்தரவிட்டான் அவனை  அறைந்த அந்த senior மாணவன். பிறகு ஒரு பீடியை அவன்  வாயில் பற்றவைத்துவைத்து - நீதான் engine ,  புகை விடு பார்க்கலாம் என்றான்.பல பீடிகளின் சக்தியால் ஊர் ஊராக சென்றது அந்த வண்டி.

அடுத்து ஒருவன் ,"சேர் போடு"என்றான் . அதாவது chair இருப்பதாக கற்பனை செய்து கொண்டு காற்றில் உட்கார வேண்டும். சிறிது நேரத்தில் கால்கள் நடுங்க ஆரப்பித்தன. சிலர் chair ல் இருந்து கீழே விழுந்தனர்.

இன்னொருவன் நீச்சலடிக்க தெரியுமா? - என்றான். எதுக்கு கேட்கிறான் என புரியாமல் தெரியும் என்று  தலை ஆட்டினான்.
அப்போ அடி - என்று தரையைக் காட்டினான். அப்பொழுதுதான் புரிந்தது. நீரில்லா தரையில் நன்றாக நீந்தினான்.

"Ragging குக்கு spelling சொல்லு "- இன்னொருவன்.

'R ...A ...G ...G ...I ...N ...G  '- என்றான்.

அப்படியில்லை. அங்க பார் அவன் எப்படி சொல்லறான்னு- என்று ஒரு ஜூனியர் மாணவனைக் காட்டினான்.

அவன்   "R ...A ...Jing ...Jing ...I ...N ...Jing " என்று jing சொல்லும்பொழுதெல்லாம்  எகிறி எகிறி குத்தித்தான். இவனும் அவனைப்போலவே தாவித் தாவி spelling பயின்றான்.

இப்படி அவர்களின்   குரங்காட்டம் பல மணி நேரம் தொடர்ந்தது. யாரும் lunch சாப்பிடவில்லை.அதை யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
இருட்ட ஆரம்பித்திருந்தது. இனிமேல் ஜன்னல் நாயகிகளுக்கு தெரியாது என்பதால் அங்கிருந்து அவர்களை அப்புறப்படித்தி  தங்கள் ரூமிற்கு அழைத்து சென்றனர் சீனியர் மாணவர்கள்.

ஒரு சில புத்திசாலி மாணவர்கள் அழ ஆரம்பித்திருந்தனர். அவர்களையெல்லாம் போதும் இன்றைக்கு என அனுப்பிவிட்டனர். இதைப்பார்த்து வேண்டுமென்றே சிலர் அழுதனர் .

அவனுக்கு அழுகை வரவில்லை. கோபம், எரிச்சல், இயலாமை என பல உணர்சிகளின் கலவை, வெடிக்க தயாராகும் எரிமலையாக உள்ளுக்குள் சுழன்று கொண்டிருந்தது.

ரூமிற்கு அழைத்து சென்று, முதல் வேலையாக எல்லாரையும்  நிர்வாணமாக்கினர். இசை மிகுந்த இரைச்சலுடன் ஒலிக்க ஆரம்பித்தது. Dance  என்ற கட்டளை பிறந்தது.பல பாடல்களுக்கு நடனமாடினார்கள்.

Hockey , Football என indoor ராக்கிங் பல கற்பனைகளில் தொடர்ந்த படியே இருந்தது.

அவமானம், பசி, அடிவாங்கிய இடங்களில் வலி -  வெகு சிலரே அழாமல் அவனுடன் இருந்தனர்.

சில senior மாணவர்கள் வெளிப்படையாகவே , அழுதால் விட்டுவிடுவோம் என அறிவித்த்தனர். அவனைத்தவிர எல்லாரும் நிஜமாகவோ, பொய்யாகவோ ஒவ்வொருவராக அழுது தப்பித்துவிட்டனர்.

அவனுக்கு முயன்றும் அழுகை வர வில்லை.

"டேய் இவன்தாண்டா என்னைய முறைச்சது'' - அதே சீனியர் மாணவன்.

 மறுபடியும் "பளார்"- அவர் அறை specialist போல - பாவம் வேறு  ragging எதுவும் அவர் செய்ய முயலவில்லை!

"டேய் விடுறா...பாவம் "- எனக்கு  சப்போர்ட்டாக ஒருவன்.

"டேய் நீ எந்த ஊரு"

ஊர் பெயரை சொன்னான்.

"அப்பா பேர் என்ன"- சொன்னான்.மறுபடியும்- "பளார்" .

"தமிழ் நடிகைகளில் புன்னகை  அரசி யார்?"- K R விஜயா என்றான்.

"நடிகைக்கு initial , அப்பாவுக்கு இல்லையா?"- அப்பொழுதுதான் அந்த அறைக்கு காரணம் புரிந்தது.

"தாத்தா பேர் என்ன" - சொன்னான் - "தாத்தாவின் அப்பா பேர் என்ன?"

சாதி பெயரை தெரிந்துகொள்ளத்தான் இந்த பெயர் நாடகம் என்பது பல நாட்களுக்குப்  பிறகுதான் தெரிந்தது. college election க்காக இப்பொழுதிருந்தே குரூப் சேர்க்க ஆரம்பித்திருந்தனர்.

"எந்த school" - Bishop Heber .

இதைக்கேட்டவுடன் சந்தோஷத்தில் ரெண்டுபேர் துள்ளி குதித்தனர்.

  "டேய் நம்ம school s டா " - என்று பாசத்துடன், ragging போதும் என மற்றவர்களை சமாதானப் படுத்தினர். உடை அணியவைத்து தனியாக அழைத்துச்  சென்றனர்.

அவர்களில் ஒருவன் மிக இரக்கமாக ,"சாபிட்டாயாடா " என்று கேட்டான்.
அவனுக்கு பேசக்கூட சக்தியில்லை. இல்லை என்று தலையாட்டினான்.

இரவு பத்து மணியாயிருந்தது. Dinner  முடிந்து messஐ  மூடிவிட்டார்கள்.

"டேய் பாவண்டா , hotel லுக்கு கூட்டிட்டு போவோம் வாடா" - என்று அருகிலுள்ள restaurant க்கு அழைத்து சென்றனர்.

 "யாருடா  அடிச்சது , கன்னம் இப்படி சிவந்து வீங்கியிருக்கு"....  பரிவாக  சகோதரர்களைப்போல பேசினர் .

உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த எரிமலை பொங்கியது.

எவ்வளவு அடக்கியும் முடியாமல் சத்தமாக ஓ வென்று அழ ஆரம்பித்தான்.

ஒன்றும் புரியாமல் திகைத்துபோய் நின்றனர் அந்த senior மாணவர்கள் ரெண்டு பேரும்.

                                                  ***************
(பின்குறிப்பு: இந்த கதை உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதியது. 90%உண்மை. 10% கற்பனை. கதையின் நடுவில் வரும் சித்திரம் internetலிருந்து எடுத்தது. )



Cheers !

16-01-15,
8:36 am,
Chennai.