Friday, October 4, 2024

வாடா போடா நண்பர்கள் Part 2







சீகேவின் 50 வது பிறந்த நாள் - "சிறப்பு" ஏற்பாடு


இதை எழுதும் எனக்கும் 50 வயது ஆகிவிட்டது. கமுக்கமாக சிரிக்கும் உங்களுக்கும்தான். நாம் யாராவது இவ்வளவு "சிறப்பாக" அரை சதத்தை, பேட்டை உயர்த்திக் காட்டி , stadium அதிர கொண்டாடினோமா? 

ம்ம்ம் ...இப்ப வருத்தப்பட்டு என்ன செய்வது. அதனால்தான் ( மனசுக்குள் வந்த கடுப்பால்) சீகேவுக்கு ஒரு "சிறப்பு ஏற்பாடு" செய்ய யோசித்தோம். 

முதலில் பெட்ஷீட் போர்த்துவதாக திட்டம். இது பொன்னாடை போர்த்துவது போல் அல்ல. அதற்க்கு நேர் எதிர். ( இதைப்பற்றி தெரியாதவர்களுக்கு - ஹாஸ்டல் வாழ்க்கையில் இதற்க்கு முக்கிய பங்குண்டு. ஓவராக ஒருத்தன் படம் காட்டினால் அவனுக்கு பெட்ஷீட் போர்த்தப்படும். முதலில், அவன் தன் அறைக்குள் வரும்போது, மற்றவர்கள் கதவுக்கு பின்னால் மறைந்திருந்து எதிர்பாராத விதமாக பெட்ஷீட்டை போட்டு அவனை முழுவதுமாக மூடி விட வேண்டும். அந்த பெட்ஷீட் பல வருடங்களாக துவைக்கப்படாமல் இருந்தால் இன்னும் சிறப்பு!அப்புறம் அவன் மேல் எந்த அளவு அன்பு உள்ளதோ அதற்கேற்றவாறு அடி, உதை. உடனே சில நிமிடங்களில் escape ஆகி விட வேண்டும். அடி வாங்கியவன் பெட்ஷீட்டை விலக்கி பார்க்கும்போது, இது யார் செய்த வேலை என்று தெரியக்கூடாது). 

நாங்கள் எதிர்பார்த்த மாதிரி "தூய்மையான" பெட்ஷீட் கிடைக்காததால் சீகே தப்பினான். 

அடுத்ததாக கேக் வெட்டும்போது முட்டையை உடைத்து முகத்தில் பூசலாமா என யோசித்தோம். அழுகிய முட்டை தேவையென்றால் மூன்று மாதத்திற்க்கு முன்பே ஆர்டர் செய்ய வேண்டுமாம். அவ்வளவு தெளிவாக "ப்ளான்" பண்ணும் திறமையற்றவர்கள் நாங்கள் என்பதால் அதுவும் கேன்சலாகிவிட்டது!!


ஜெயேந்திரனின் தாய்ப்பாசம் 


வழக்கமாக நம்மிடம் அம்மாக்கள் கேட்கும் கேள்விகளை ஆர்கனைசர் ஜெயேந்திரன் கேட்டுக்கொண்டிருந்தான். 


" டேய் மட்டன் சாப்பிட்டயாடா... சிக்கன் சாப்பிட்டயாடா... முட்டை? சாப்பாடு எப்படி இருக்கு"

" இன்னும் கொஞ்சம் சாப்பிட்றா"

"சாப்பாடு மீந்திரும்டா"


மதுவின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க  

இந்த தாய்ப்பாசமும் அதிகரித்தது. அது ஒரு கட்டத்தில் சாரு நிவேதிதான் "அன்பு" நாவல் அளவுக்கு சென்றுவிட்டது. 



ரவிவிவிவியின் சொற்பொழிவு - பாகம் ஒன்று "தவறவிட்ட தக்காளி" 


ரவி இவ்வளவு பெரிய entertainer என்பது எனக்கு முன்னர் தெரியாது. 

இரண்டு , மூன்று மணி நேரம் தொடர்ந்த அவனின் இந்த சொற்பொழிவுதான் இந்த சந்திப்பின் highlight. கேட்ட அனைவரும் முழு நேரமும் சிரித்துக் கொண்டே இருந்தோம். இந்த முதல் பாகத்தில் அவனுக்கு "தக்காளி" எவ்வளவு பிடிக்கும் , ஏன் பிடிக்கும் ஆனால் அதை அவன் எப்படி தவறவிட்டுவிட்டான் என்பதைப்பற்றி ஏக்கத்துடன் பேசினான். ரவி பேசிய அனைத்தும் எனக்கு நினைவில் இருந்தாலும் அவற்றை பகிர முடியாத நிலையில் உள்ளேன். அவன் பேசிய நிறைய விஷயங்களில் பெரும்பாலனவர்களுக்கு மாற்றுக்  கருத்து இருந்திருக்கும். அவ்வளவு ஏன் சரக்கு இறங்கியவுடன் அவனே அவன் பேசியதை ஒத்துக்கொண்டிருக்க மாட்டான். இருந்தும் அனைவரும் இடைமறுக்காமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்க்குக் காரணம் அவன் யாரையும் புண்படுத்தாமல், தன் ஆழ் மனதிலிருந்து-  subconscious mind -லிருந்து சரளமாகப் பேசிக்கொண்டிருந்தான். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல். அது raw வாக இருந்தாலும் அதில் ஒரு honesty- innocence இருந்ததை மறுக்கமுடியாது. 


சங்கரும் வெங்கியும் வாங்கிய ஆசிகள் 


இந்த சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கும் போது இரவு மணி ஒன்பது இருக்கும்.  மழை தூர ஆரம்பித்திருந்தது. இதமான குளிர். Bluetooth speaker ல் "பருவமே" "உறவுகள் தொடர்கதை" போன்ற ராஜாவின் அந்தக்கால classics பாடிக்கொண்டிருந்தது. 

இதே பாடல்களை வெங்கி ஹாஸ்டலில் ஸ்பீக்கரை பானையில் வைத்து அலர விட்ட தினங்களை நினைவு படுத்தினான் ரவி - அடிக்கடி - ஒவ்வொரு பாட்டுக்கும் - தன் சொற்பொழிவிலிருந்து தடம் மாறி. 

உடனே யாரோ வெங்கியையும் சங்கரையும் வீடியோ காலில் அழைத்தார்கள். அவர்கள் போனை எடுத்தவுடன் அவர்கள் மேல் ஒரே வசை மழை...

" டேய் கண்%%#** பு%**# " 

என்று ஒவ்வொருவராக ஆசி வழங்கினர். அதை கேட்கும்போது அவர்கள் முகத்தில்தான் எவ்வளவு மகிழ்ச்சி! 


ரவியின் சொற்பொழிவு Part 2 - "விடாது தக்காளி" 


தக்காளிக்கும் ரவிக்கு அப்படி என்ன ராசியோ தெரியவில்லை. இந்த சொற்பொழிவில் தக்காளியால் தான் பட்ட அவதிகளை எந்த தயக்கமும் இன்றி விளக்கமாக அவன் எடுத்துரைக்க - அடக்க முடியாமல் சிரித்தோம். மன்னிக்கவும் இதைப்பற்றியும் என்னால் எழுத இயலாது. அவனை சந்திக்கும்போது நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளவும் 😜. 


Silent சரவணக்குமார்


என்னை விட அமைதியான ஒருவனைப் பார்க்க வேண்டுமென்றால் அது சரவணக்குமார்தான். சத்தமில்லாமல் சொற்பொழிவைக்கேட்டுக்கொண்டிருந்தான் அவ்வப்பொழுது புன்முறுவலுடன். திடீரென்று அந்த அமைதியான இடத்திலிருந்து "கொர் கொர்" என சத்தம் வர ஆரம்பித்தது. திரும்பிப்பார்த்தால் சரவணக்குமார் உட்கார்ந்து கொண்டே தூங்கிக் கொண்டிருந்தான். சீரான குறட்டை சத்தத்துடன்

உட்கார்ந்து கொண்டே குறட்டை விட முடியுமா ?! 🤔🤔


புயலுக்குப் பின்... 


பனிரெண்டு மணி அளவில் அவரவர் அறைக்கு உறங்கச் சென்றோம். 

இரவு கன மழை. வெளியிலும் கனவிலும் பெரும் சத்தத்துடன். 

காலை ஆறு மணிக்கு தலைவலியுடன் விழிப்பு வந்தது. உடனடித் தேவை ஒரு சூடான டீ. அது கிடைக்காததால் அதைத்தேடி வாக்கிங் சென்றோம். 


காலை வாக்கிங்


ரிசார்ட்டிலிருந்து ஏற்காடு ஏரி ஒரு கிலோமீட்டர்களுக்குக் குறைவான தூரத்திலிருந்தது. கதிர்,ஆனந்த், நான் மூவரும் நடக்க ஆரம்பித்தோம். 

இயற்க்கையை ரசித்துக் கொண்டும் நகரத்து வாழ்க்கையை சபித்துக் கொண்டும். ஏரிக்கு அருகிலுள்ள ஒரு கடையில் கிரிக்கெட் விளையாட நான்கு பந்துகள் வாங்கினோம் - கதிரை ஓரக்கண்ணால் பார்த்து முறைத்துக்கொண்டே. ஒரே பந்து இருக்கும்போது முரட்டுத்தனமாக வெளியே அடித்து ஆடிய அவன் அன்று நான்கு பந்துக்கள் இருந்தும் பொறுமையாக விளையாடினான். டேய் வெளியே அடிடா என்றாலும் கேட்கவில்லை. 


மோடியான கேடி 


திடீரென்று இதுதான் மோடி pose என்று கையை காலை விரித்து யோகா செய்ய ஆரம்பித்தான் கதிர்( பார்க்க கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது). என்ன இது நம்ம ஆள் கட்சி மாறுகிறானே என்று கார்த்தியும் சின்னாவும் கவலையுடன் பார்த்தனர். 


மற்றொருபுறம் ராஜாராம் stretching exercise என்று ஏதோதோ செய்து கொண்டிருந்தான். 


இவை இரண்டையும் மரத்திலிருந்த குரங்குகள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன. 


சின்னாவின் சின்ன சின்ன ஆசை


"டேய் தொப்பைய எப்படி குறைக்கிறது"


"சாப்பாட்ட குறை முதல்ல"


" குறைச்சா பசிக்குதுடா... டயர்டா இருக்கு ...வேலை செய்ய முடில. ஆர்த்தோ இல்ல காலத்தூக்கி பிடிச்சு ஸ்க்ரு போடனும் ( ... தொப்பதான் தூக்கி பிடிக்குதோ)"


" சரி உனக்கு என்ன வேணும்"


" எக்ஸர்சைஸ் ஏதாச்சும் சொல்லுடா... உட்காந்த இடத்துல இருந்தே செய்யிற மாதிரி" 


கதிர் ஆனந்த் கார்த்தி மூவரும் ஏதோதோ சொன்னார்கள். தஸ் புஸ்ஸென்று அதிகப்பட்சம் ஐந்து நிமிடங்கள் தரையில் தவழ்ந்தான். 


" ஸ்ஸ்ஸ் அப்பாடா ... நல்லா இருக்குடா ... 

உடம்பு கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இல்ல" என்று சுற்றும் முற்றும் பார்த்தான் 😀.


பைலட் கதிர் returns


ஏற்காட்டிலிருந்து திரும்ப வரும்போது கதிரை அழவைக்க விரும்பாததாலும், இந்த பயணத்திற்க்கு பிராஞ்சலி evidence கேட்க மறந்ததாலும் - கதிரே வண்டியை Take off செய்தான். பயணத்தின்போது பயங்கர turbulance. நான் பின் சீட்டில் ,பக்கத்தில் சின்னா. வண்டி இடது ,வலது என அலைந்தது. வயிறு கலங்கியது. பேசாமல் கதிரே கெளதமிற்க்கு பைலட் ட்ரெயினிங் கொடுக்கலாம். சேலத்தில் லேண்ட் ஆவதற்க்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. 



சீகே நீ ஏண்டா புரட்டாசியில் பிறந்த? 




எங்கள் சிறப்பு திட்டத்திலிருந்து மயிரிழையில் தப்பி ஆனந்தமாக ரிசார்ட்டில் இரண்டு முறை கேக் வெட்டி தன் 50 வது பிறந்த நாளைக் கொண்டாடினான் சீகே. அதுமட்டுமல்லாமல் அடுத்த நாள் ஒரு பெரிய விருந்து இருப்பதாகவும் அதற்க்கு வருமாறும் அழைப்பு விடுத்தான். சுபாஷினியும் ஏற்கனவே அழைத்திருந்தார்கள். 

அடுத்த நாள் அங்கு சென்று பார்த்தால், ஏற்பாடுகள் ஒரு அரசியல்வாதி அல்லது ஒரு பெரிய நடிகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்க்கு இணையாக இருந்தது. பேனர் மட்டும்தான் இல்லை. இதைப்பார்த்து வாயைப்பிளந்து பந்தியில் சென்று அமர்ந்தால் அங்கு இன்னொரு ஆச்சரியம். அங்கு பரிமாறப்பட்ட விருந்து சமையல் கலையில் பல விருதுகள் பெற்ற சுபாஷினியின் முழுத்திறமையையும் வெளிக்காட்டும் கண்காட்சி போல இருந்தது. 


"ஆட்டுக்கால் சூப் ( மாதிரியே ஒரு வெஜ் சூப்)

Fish Fry ( மாதிரியே ஒரு வெஜ் அய்ட்டம்) 

Prawn fry ( அதே டிட்டோ ) 

Mutton Briyani மாதிரி சேனைக்கிழங்கு பிரியாணி"


இப்படி ஒரே அதகளம். 


புரட்டாசியில் நான்-வெஜ்ஜை மறந்திருந்தவர்களுக்குக் கூட உடனே அதை சாப்பிட வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசை வந்திருக்கும். எனக்கு உடனே மட்டன் பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. சின்னாவையும் கதிரையும் விசாரித்தேன். இதை முடித்துவிட்டு "பராசக்தி" உணவகத்துக்கு செல்லலாம் என சிபாரிசு செய்தார்கள். இது ஒரு புறமிருக்க...


சீகே நீ ஏண்டா புரட்டாசியில் பிறந்த?என்ற கேள்வியும் எழுந்தது என்னுள். 

இந்த புரட்டாசியால் ஒரு தடபுடலான நான்- வெஜ் விருந்து கை நழுவி போய் விட்டதே😤

சீகே நீ என்ன பண்ற ... find out the procedure to change your birth date from பாவப்பட்ட புரட்டாசி to தெய்வீக non புரட்டாசி. அப்புறம் அடுத்த வருஷம் உன்னோட 51 வது பிறந்த நாளையும் இதே மாதிரி தடபுடலாக ஆனால் ஒரிஜினல் நான்- வெஜ்ஜோட நாம கொண்டாடுறோம்... ஓகேவா😀.


மீண்டும் Sadhapdi 


பிற்பகல் 5:20 மணிக்கு சென்னை பயணம், மீண்டும் சதாப்தியில். வண்டியில் அமர்ந்து கண்களை மூடியதும் நிகழ்வுகள் ஒவ்வொன்றாக மனதில் ஓடியது. இருபத்து நான்கு மணி நேரம் இவ்வளவு நீளமானதா. எவ்வளவு  விஷயங்கள்! அவற்றை எழுத நினைவில் வந்தவைகளை ஒவ்வொன்றாக மொபைல் போனில் குறித்துக்கொண்டேன். 

வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது. வெளியே ஜன்னலில் பரந்த வெட்ட வெளி நிலப்பரப்பின் மீது மறையும் சூரியன் வண்ணங்களை தெளித்துக் கொண்டிருந்தான். 


இம்முறை அதிஷ்டவசமாக நான் அமர்ந்திருந்த அதே திசையில் விரைந்தது ரயில். 


********