என்னுடைய பிறந்த நாளுக்கு ஒரு கைக்கடிகாரம் பரிசளிப்பது என இணையாள் முடிவெடுத்தாள். ஷாப்பிங் போகும் போதெல்லாம் உயர்தர கைக்கடிகாரங்களை வெறித்து பார்த்ததன் விளைவு. திருமணத்திற்கு பரிசாக வந்த கடிகாரம் பன்னிரெண்டு வருடங்களாக இன்னும் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் மனசுதான் மாற்றம் வேண்டி அடம்பிடிக்கிறது. சாகும் வரை இதையே கட்டிக்க கொண்டு அழப் போகிறாயா என தத்துவார்த்தமான கேள்வி வேறு.
சென்னையில் ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு செல்வது, நாக்கினால் மூக்கை தொடுவதை விட பெரிய வேலை. கழுத்தை நெருக்கி மூச்சை திணரடிக்கும் போக்கு வரத்து நெரிசலே முக்கிய காரணம். விடுமுறை நாட்களில் -அதுவும் பகல் வேளைகளில் மட்டும் சாலைகள் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளும். அதன்காரணமாகவே வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை பகலை மட்டுமே ஷாப்பிங் செல்ல தேர்ந்தெடுப்போம்.
அன்றும் அப்படித்தான்.
வேளச்சேரியில் உள்ள phoenix mall செல்ல வேண்டும்.
காரை ஸ்டார்ட் செய்யும் முன்னர் google navigation ஐ தட்டினேன். கூகிள் சுலபமான, விரைவான வழியை - போக்கு வரத்து நெரிசல் உட்பட எல்லா விவரங்களுடன் உடனுக்குடன் தருவதால் , எப்பொழுதுமே அதன் துணை இல்லாமல் பயணம் இல்லை. இது மட்டுமல்ல எந்த ஐயம் தோன்றினாலும் மனம் உடனே google ன் துணையை நாடுவதை தவிர்க்க முடியவில்லை.
இப்படி எதற்க்கெடுத்தாலும் கூகுளை நம்புவதைப் பார்த்து சிலர் நக்கலாக சிரிப்பது ஓரக் கண்ணில் தெரிந்தாலும் அதை அலட்சியப் படுத்த கற்றுக் கொண்டேன்.
நீங்கள் நினைப்பது புரிகிறது. இது ஒரு மன நோயல்ல. முற்றிலும் நார்மல்!!!
வேண்டுமானால் நீங்களும் சோதித்துப் பாருங்கள்.
உங்களுக்கு நீங்களே யாரென்று சந்தேகம் தோன்றினாலோ ,உங்களுக்கு எதிரில் செல்லும் சிவப்பு சுடிதாரின் பெயர் மற்றும் விவரம் தேவைப் பட்டாலோ அல்லது மனைவின் மூட் பற்றிய விவரங்கள் தேவைப் பட்டாலோ- எதை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்.
சரியான பதிலுக்கு நான் உத்திரவாதம்.
Google ன் துணையுடன் பயணம் இனிதாக சென்று கொண்டிருந்தது. வேளச்சேரியை நெருங்கிக் கொண்டிருந்தோம்.
கடிகாரம் எங்கு வாங்குவது?
மனைவியுடன் கலந்தாலோசித்து Titan showroomக்கு செல்வது என முடிவானது.
Phoenix ல் Titan showroom எங்குள்ளது என சரியாக நினைவில்லை.
நீங்கள் நினைப்பது சரி. உடனே Googleஐ ஆன் செய்தேன். அதற்க்கு Titan showroom Phoenix mall என்று தேட உத்தரவிட்டேன். விலாசமும் , தொலைபேசி எண்ணும் வந்தது. காரை ஓட்டிக் கொண்டே ப்ளூ டூத் speaker மூலம் call செய்து அந்த கடையை தொடர்பு கொண்டேன்.
“ஹலோ”
“ஹலோ”
“Is it phoenix mall... Titan show room?”
“Yes Sir , How can I help you ” ஒரு இளம் பெண்ணின் கவர்ச்சிக் குரல்.
“ Could you tell me your shop number or nearby landmark please ...so that....”
“ Sure sir. It is in the basement of the mall. Opposite to coffee day cafe”
“ Oh okey ..Thank you”
Mall ஐ அடைந்து basement வந்து சேர்ந்தோம்.
"See எவ்வளவு சுலபமாக கடையை கண்டு பிடித்துவிட்டோம்.
Google இல்லையென்றால் அலைந்திருப்போம்" - என ஓரக் கண்ணால்
பார்த்த நக்கல் சிரிப்புக்கு பதிலடி கொடுத்துக்கொண்டு வந்தேன்.
Coffee day எங்கே ? தேடினோம். பத்து நிமிடங்களாகியும் தென்படவில்லை.
ச்ச்சே இந்த mall களின் உள்ளே கடையை கண்ணுபிடிக்க ஏன் navigation ஏதும் இல்லை என சலித்துக் கொண்டேன்.
சீருடை அணிந்த ஒரு security ஐ அணுகினோம்.
“ coffee day மூன்றாவது தளத்தில்தானே உள்ளது” என்றார்.
“Titan showroom?” என்றோம்.
“ அது முதல் மாடியில் , funky monkey கடைக்கு எதிரில் உள்ளது” என்றார்.
குழப்பமாகிவிட்டது.
முகம் தெரியாத அந்த இளம் பெண்ணின் மீது கோபம் வந்தது. மறுபடியும் அதே எண்ணை தொடர்பு கொண்டேன்.
“ஹலோ”
“Hi sir. How can I help you?” இப்பொழுது ஒரு ஆணின் குரல்.
“We are searching your showroom since last 15 minutes. Few minutes back a lady from your shop told us, it is opposite to coffee day. Is that correct?”சற்று கடுமையான குரலில் வினவினேன்.
“Yes sir. It is bang opposite to coffee day.” என்றான் - வியாபார பணியாளர்களுக்கே உரித்தான போலி மரியாதை மற்றும் போலி பணிவுடன்.
சுர்ரென்னு கோபம் தலைக்கேறியது.
“There is no coffee day shop in the basement. Security person says it is in the third floor. And Titan showroom is in the first floor.எங்கள என்ன லூசுங்கன்னு நினைச்சிட்டீங்களா”
கோபம் அதிகமானாதால் தமிழ் தானாக வந்தது.
“ Sir I don’t understand kannada. I will give the phone to my colleague - he will help you” என்று தப்பித்து ஓடினான்.
வட இந்தியனாக இருக்கும். தமிழுக்கும் கன்னடத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என நினைத்துக் கொண்டே அடுத்தவனுடன் பேச்சை
தொடர்ந்தேன்.
அவர் கன்னடத்தில் ஏதோ சொல்ல வர...
“ Sir could you speak in English or Tamil ” என்றேன் பள்ளி வாத்தியார் போன்ற கறாரான குரலில்.
தமிழ் நாட்டில் கன்னட காரர்களின் தொல்லை தாங்கல என்ற எரிச்சலுடன்.
“ Tamil? .....Sir which phoenix mall you are talking about. This is Bangalore Phoenix”
என்றான் மறுமுனையில்.
***************************
புத்தன் ராஜரத்தினம் ,
21/11/2018.
