Tuesday, March 3, 2026

விழுந்த மனம் (குறுங்கதை)



“வீட்டிற்கு வரும்போது வழியில் உள்ள ATM-ல் பணம் எடுத்து வாருங்கள்” - மனைவி போன் செய்து சொன்னாள். நானும் மறக்கக்கூடாது என்று reminder எல்லாம் வைத்து, பணம் எடுக்க ATM-ல் நுழைந்தேன்.


வழக்கமாக பணம் எடுக்கும் அந்த ATM-ல் debit கார்டை நுழைத்து - பணம் எடுக்கத்தான் வந்தேன் என சத்தியம் செய்து - அதுவும் savings account-லிருந்துதான் என்பதை உறுதி செய்து - 20k-ஐ எடுக்க நான்கு இலக்க PIN-ஐ அழுத்திய பின் - நூறு ரூபாய் மட்டுமே உள்ளதாகவும் - அதற்கேற்ப குறைவான பணத்தை எடுக்கவும் என அறிவுறுத்தப்பட்டபோது… ஸ்ஸ்ஸ் ப்ப்ப்ப்ப்பாஆஆஆ…


மிஷினை ஓங்கி ஒரு உதை உதைத்து விட்டு (மனதிற்குள்) வெளியேறினேன்.


“நம்ம பணத்தை நாம எடுக்க என்ன பாடு படுத்தறாங்கப்பா” என புலம்பிவிட்டு - இரவு உணவை முடித்த பின் வீட்டிற்கு அருகில் உள்ள இன்னொரு ATM-ல் எடுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன்.


இரவு உணவு முடிந்தது.


காரில் போவதா - பைக்கா?


சென்னையின் கலவரமான traffic sense-ஆல் (வானத்தின் மேலிருந்தும், தரைக்கு கீழிருந்தும் தவிர மற்ற எல்லா திசைகளிலிருந்தும் மின்னல் வேகத்தில் வரும் வாகனங்கள்) பைக்கை எடுப்பதே இல்லை.


அதுவுமில்லாமல் வீட்டை சுற்றி உள்ள தெருக்களை எல்லாம் Greater Chennai Corporation ஆட்கள் நோண்டி… sorry, தோண்டி போட்டுள்ளார்கள் - நீண்ட நாட்களாக.


Leh Ladakh செல்ல நினைப்பவர்கள் எங்கள் தெருவிற்கு வந்தால் பைக் ஓட்டி பயிற்சி எடுக்கலாம்.


சில பாதைகளில் காரில் போக முடியாது - பைக் மட்டும்தான். அதுவும் சர்க்கஸ்காரன் கயிற்றின் மேல் நடப்பது போன்ற லாவகத்துடன் ஓட்ட வேண்டும்.


ஆனால் நான் சமீபத்தில் வாங்கிய ஒரு புதிய - பழைய Himalayan பைக் மனதை சஞ்சலப்படுத்தியது.


அதை ஓட்ட ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என ஏங்கியவனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பானது.


ஹெல்மெட் அணிந்தேன்.

பைக்கை எடுத்தேன்.


ஸ்ஸ்ஸ்ஸூம்… முகத்தின் மீது மோதிய இதமான காற்று. ஆஹா… சுதந்திரத்தின் வாசனை. பைக் ஓட்டும் ஒவ்வொரு முறையும் தோன்றும் உணர்வு.


வேகத்தடைகளில் வேகத்தை குறைக்காமல் ஏறி இறங்கினேன். பந்து போல குதித்து சென்றது பைக்.


சட்டென்று நான் அணிந்திருந்த shorts-ன் இடது pocket கணம் குறைந்து ஏதோ ஒன்று இல்லாதது போன்ற உணர்வு.


OMG!!


மொபைல் கீழே விழுந்து விட்டதா? என்ன ஒரு மடத்தனம்!


தொட்டு பார்த்தேன்.

பாக்கெட்டில் மொபைல் இல்லை.


வழக்கமாக மொபைலும் wallet-மும் இல்லாமல் வெளியே செல்வதே இல்லை. அனிச்சை செயல் போல நடக்கும்.


ஒருவேளை வீட்டிலேயே மறந்து விட்டேனோ?


எடுத்து பாக்கெட்டில் வைத்ததாக நினைவில்லையே?


இல்லை… இல்லை… திடீரென்று கணம் குறைந்தது போன்று ஏன் தோன்றியது? மொபைல் இருந்து, பின்னர் அது கீழே விழுந்ததால்தானே?


சாப்பிடும்போது அது பாக்கெட்டில்தானே இருந்தது? இருந்தது போலத்தான் தோன்றியது.


அறுபது, எழுபதாயிரம் போச்சே என மனம் நொந்தது.


யாராவது எடுத்திருந்தால் நாம் கால் பண்ணி பேசி வாங்கிக்கொள்ளலாம். உலகில் நல்லவர்களும் இருக்கிறார்கள். ஏன் தேவையில்லாமல் இப்படி கவலைப்படுகிறோம் எனவும் தோன்றியது.


எடுப்பவர்கள் ஒருவேளை உடனே switch off செய்து விட்டு வேறு யாருக்காவது விற்று விட்டால்?


Find My Phone-ஐ வைத்து track செய்து விடலாமே?


பல வருட photos, videos வேறு அதில் உள்ளது. எவ்வளவு backup ஆகியிருக்கும் என உறுதியாகத் தெரியவில்லை.


மனம் தவியாய் தவித்தது.


நிஜமாகவே கீழே விழுந்ததா? இல்லையா?

என உறுதியாக தெரியவில்லை.


சரி, என்னவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என குருட்டு நம்பிக்கையுடன் ATM சென்று வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன்.

நொடிகள் மணிகளானது.


திரும்பி வரும் வழியில் கண்கள் பாதை முழுவதையும் துளாவியது - கீழே விழுந்த மொபைல் தென்படுமா என்று. அத்துடன் வழியில் மொபைலை பார்த்துக் கொண்டிருப்பவர்களையும் கண்காணித்தபடியே பைக்கை மெதுவாக ஓட்டி வந்தேன்.


படபடப்புடன் பைக்கை நிறுத்திவிட்டு லிப்டிற்கு அருகில் வந்தேன்.

அது வேலை செய்யவில்லை.


வேக வேகமாக மூன்று மாடி படியேறி மூச்சிரைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.


காலணியை கழட்டும்போதே கட்டுப்பாடின்றி கண்கள் டைனிங் டேபிளின் மேல் சென்றது.


அங்கு… மொபைல் இருந்தது.


லாட்டரியில் ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சி. மிகவும் சிரமப்பட்டு அதை மனைவிக்கு தெரியாமல் அடக்கிக்கொண்டேன்!


"மொபைல் மறந்துட்டு போயிட்டீங்களே? கால் வந்தது" என்றாள் மனைவி.


"ஆமா, பைக்கில போகும் போது கீழ விழுந்துரும்னுதான் இங்கயே வச்சுட்டு போயிட்டேன்" என்றேன்!