Bike and Hike
Part 2
ஏன்?
அப்பொழுது மீண்டும் அந்த கேள்வி எழுந்தது.
ஏன் மோட்டார் சைக்கிள் பயணம் இவ்வளவு உற்சாகத்தை தருகிறது?
பலர் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இது.
“ஏன் தனியாக இவ்வளவு தூரம் மோட்டார் சைக்கிளில் செல்கிறாய்?
அதற்க்கு ஒரே வரியில் பதில் சொல்வது கடினம். பைக் ஓட்டுவது மட்டும் காரணமில்லை. அதைவிட ஆழமான ஏதோ ஒன்று.
நம் அன்றாட வாழ்க்கை, திட்டமிடல், பொறுப்புகள், தொலைபேசி அழைப்புகள், கூட்டங்கள், காலக்கெடுக்கள் என்று நிரம்பியிருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒன்றை நினைத்து உயிர்ப்பில்லாமல் இயந்திரத்தனத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
பயணங்கள் இந்த ஓட்டத்தை நிறுத்தி நம்மை யோசிக்கவைக்கிறது.
மேலும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது நாம் நிலப்பரப்பின் ஒரு பகுதியாகிறோம். நடக்கும் நாடகத்தில் பார்வையாளனாக இல்லாமல்
ஒரு கதாப்பாத்திரமாக மாறிவிடுகிறோம்.
காற்று நேரடியாக முகத்தில் மோதுகிறது.
வெயிலின் தீவிரம் உடலில் படுகிறது.
மண்வாசனை.
காட்டின் மணம்.
உலகத்திற்கும் நமக்கும் நடுவில் எந்த கண்ணாடிச் சுவரும் இல்லை.
அடுத்து நிமிடத்திற்கு நிமிடம் மாறும் காட்சிகள்.
நேற்று நடந்த பிரச்சினைகள் நினைவுக்கு வருவதில்லை. நாளை செய்ய வேண்டிய வேலையும் இல்லை.
இந்த கணம் மட்டுமே உண்மை!
இதுவே மோட்டார் சைக்கிள் பயணத்தின் மந்திரம்!
இப்படி மனதில் பலவற்றை நினைத்துக்கொண்டே வளைந்து நெளிந்த மலைப்பாதைகளில் பயணித்து கோத்தகிரி சென்றடைந்தேன்.
ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான சிறிய ஊர். அடிப்படை வசதியுள்ள ஒரு விடுதியில் தங்கினேன். அடுத்த நாள் மலை ஏற்றத்தை நினைத்தவாறே உறங்கிப்போனேன்.
காலைப்பயணம்
கோத்தகிரியிலிருந்து கிரிகையூர் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சென்று சேர ஒரு மணி நேரமாகும்.
இளவெயில். மேகமில்லா வானம்.
காலைப்பயணங்கள் எப்பொழுதுமே புத்துணர்வு ஊட்டுபவை. சூழலும் மனமும் தெளிவாக இருக்கும்.
கொட நாடு செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்று கைகட்டி என்ற இடத்தில் வலப்புறம் திரும்பியது பாதை. வழியில் இரு புறமும் தேயிலைத்தோட்டங்கள். அவ்வப்போது சிறு சிறு ஊர்கள்.
சோலூர்மட்டம் என்ற இடம் வந்ததும் என்னை வழி நடத்திச் சென்ற google map தடுமாற ஆரம்பித்தது. நெட் வொர்க் இல்லை. இருப்பது ஒரு பாதைதானே என்ற குருட்டு தைரியத்தில் முன்னோக்கிச் சென்றேன். சில இடங்களில் செங்குத்தான ஹேர்பின் வளைவுகளில் இறங்கினேன். திரும்ப ஏறும்போது சவாலாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். ஒரு சில பிரிவுப்பாதைகள் குழப்பும்போது உத்தேசமாக ஒன்றை தேர்வு செய்து சென்றேன். வழியை விசாரிக்க ஆட்களும் தென்படவில்லை.
நல்ல வேளை ஒன்பது மணிக்கு சரியான இடத்திற்க்கு சென்றடைந்தேன்.
சீருடையிலிருந்த இரண்டு வனத்துறை இளைஞர்கள் கையசைத்தனர்.
மலையேற்றத்திற்காக மேலும் இரு நடுத்தர வயதினர் காத்துக் கொண்டிருந்தனர்.
மலை விளிம்பிலிருந்தது அந்த வனத்துறை அலுவலகம். எதிரில் கீழ் பவானி அணைக்கட்டின் நீர்த்தேக்கம். அமைதியான இடம்.
யானைகள் உள்ளே வராமலிருக்க சுற்றிலும் முள் வேலி போடப்பட்டிருந்தது. அத்துடன் மின் கம்பிகளும் இருந்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது சட்டப்படி தவறு இல்லையா? கேட்டதற்க்கு இது சூரிய ஒளி பாட்டரியில் இயங்கும். குறைவான DC shock தான் தரும். ஆபத்து இல்லை என்றனர். எனக்கு நம்பிக்கை இல்லை. இணையத்தில் தேடியதில் அவர்கள் சொன்னது உணமைதான் என்பது உறுதியானது.
வித்தியாசமான சாதாரண மனிதர்கள் 01
மலை ஏற்றத்திற்காக வந்திருந்த அந்த இருவரும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள். கோவை வரை பேருந்து - பின்பு வாடகைக் காரில் இங்கு வந்திருந்தனர். அவர்களுக்கு இது முதல் சில மலை ஏற்றங்களில் ஒன்று. அவர்களில் ஒருவர் சாதாரண செருப்பு அணிந்திருந்தார். “இந்த செருப்பிலா?” என்று மனதில் தோன்றியது. ஆனால் பயணம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே என் கணிப்பு தவறு என்று தெரிந்தது. அவர் தான் எங்களை எல்லோரையும் முந்திக்கொண்டு உச்சியை முதலில் அடைந்தார்.
அவர்கள் அதிகம் பேசவில்லை. அதைவிட முக்கியமாக, அடுத்தவர்களின் personal space-ல் நுழைய முயற்சிக்கவில்லை. “என்ன வயசு?”, “என்ன வேலை?”, “எவ்வளவு சம்பளம்?”, “குடும்பத்தில் எத்தனை பேர்?” போன்ற கேள்விகள் எதுவும் இல்லை.
முதல் இரண்டு கிலோமீட்டர்கள் மிகவும் செங்குத்தான ஏற்றம்.சில நிமிடங்களிலேயே மூச்சு வாங்க ஆரம்பித்தது.
நான் மட்டுமே மலையேற்றத்திற்குத் தேவையான எல்லா உபகரணங்களுடனும் இருந்தேன். ஹைக்கிங் ஷூ, ட்ரெக்கிங் கம்புகள்,முதுகுப்பை, தண்ணீர்,மருந்துகள், காபி ஃப்ளாஸ்க்,துண்டு,தொப்பி...
ஆனால் அந்த செருப்பு அணிந்த நண்பன் என்னைவிட வேகமாக மேலே ஏறிக்கொண்டிருந்தான்! ( என்ன தைரியம் - ஒரு மரியாதை இல்லாமல் - ராஸ்கல்!)
காடு
காடு மெதுவாக எங்களை விழுங்க ஆரம்பித்தது.
இது ஒரு இலையுதிர் காடு. முதலில் பாதை தெளிவாகத் தெரிந்தது. சிறிது தூரம் பாதையில் கருங்கற்கள் வேயப் பட்டிருந்தது. பின்னர் அது மரங்களுக்கும் பாறைகளுக்கும் நடுவே இயற்கையாக உருவான ஒரு ஒற்றையடிப் பாதையாக மாறியது.
இந்த ஒற்றையடிப் பாதைகள் முதலில் மழைநீர் உருவாக்கி, பின்னர் வனவிலங்குகள் தலைமுறை தலைமுறையாக நடந்தே அகலப்படுத்திய பாதைகளாக இருக்கலாம் என்று தோன்றியது.
மண்ணின் மீது காய்ந்து விழுந்த இலைகள் மெத்தை போன்று பரவி இருந்தன. ஒவ்வொரு அடியும் வைத்தபோது அவை மெதுவாக நொறுங்கும் சத்தம் கேட்டது.
சில இடங்களில் பாதையின் இருபுறமும் பெரிய பாறைகள். அதன் மீது பாசி படர்ந்திருந்தது. சிலவற்றின் மேல் வெள்ளை நிற லைக்கன்கள் ஓவியம் வரைந்தது போலப் பரவியிருந்தன. இந்தப் பாறைகள் எத்தனை இலட்சம் ஆண்டு பழமையானதோ? எரிமலைக் குழம்புகள் குளிர்ந்து உருவானவை. பூமியின் வரலாற்றின் ஒரு பகுதி இவற்றின் மீது பதிந்திருப்பது போல தோன்றியது.
வானத்தைத் தொடும் உயரமான மரங்கள்.பரந்த தடிமனான வேர்கள். அவை வயோதிகனின் கை நரம்புகள் போலிருந்தன.
சிறிது தூரத்தில் யானைச் சாணம் கிடந்தது.
“இது இரண்டு மாதம் பழசு இருக்கும்,” என்றார் வனக்காவலர்.
பேச்சு இயல்பாக வனவிலங்குகளுக்குத் திரும்பியது.
“யானைகளை அடிக்கடி பார்ப்பீர்களா?” என்று கேட்டேன்.
ஒரு முறை தனியாக நின்ற ஒரு யானையை இந்தப் பாதையில் பார்த்ததாகச் சொன்னார்.
உடனே பின்னால் வந்து கொண்டிருந்த பயணிகளை எச்சரித்து வேறு வழியாக அழைத்துச் சென்றாராம்.
சமீப காலங்களில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
“சிறுத்தை? புலி?” என்று கேட்டேன்.
சிரித்தார்.
“பார்ப்பது ரொம்ப கஷ்டம் சார். கிராமத்தவர்கள் சில சமயம் புலியைப் பார்த்ததாகச் சொல்வார்கள். நம்ம சத்தம் கேட்டாலே அது கண்ணுக்கே தெரியாமல் மறைந்துடும்.”
அதுதான் காடு.
அந்த எண்ணமே காட்டின் மர்மத்தை இன்னும் அதிகப்படுத்தியது.
ஒரு மரத்தின் கீழ் சிறுது நேரம் நின்றேன்.மேலே பார்த்தேன்.
வானமே தெரியவில்லை.
நூற்றுக்கணக்கான கிளைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஒரு பிரம்மாண்டமான கூரையை உருவாக்கியிருந்தன. எங்கும் பச்சை. அந்தப் பச்சைக்குள் எத்தனை அடுக்குகள்! வெளிர் பச்சை, அடர் பச்சை, மஞ்சள் கலந்த பச்சை. இடையிடையே சூரிய ஒளி சிறிய துளிகளாக இலைகளின் இடைவெளியைத் தாண்டி தரையில் விழுந்தது. அந்த ஒளி காற்றோடு சேர்ந்து அசைந்துகொண்டே இருந்தது. அந்த மரத்தின் கிளைகள் எல்லாத் திசைகளிலும் விரிந்து, மனித உடலின் ரத்த நாளங்களைப் போல ஒன்றோடொன்று பின்னியிருந்தன. இயற்கை பல நேரங்களில் நம்முடைய உடலையே நகலெடுத்தது போல தோன்றுகிறது.
காற்றில் உலர்ந்த இலைகளின் மணம்.
அதனுடன் ஈரமான மண்ணின் வாசனையும் அவ்வப்போது வந்து கலந்தது.
எங்கோ ஒரு செடியியிலிருந்த பூவின் மெல்லிய வாசனை.
தெரியாத பூச்சிகளின் இடைவிடாத ரீங்காரம்.
தூரத்தில் ஒரு பறவையின் பாடல்.
நீண்டு உயர்ந்த மரங்களின் சோம்பல் முறிக்கும் சத்தம்.
சட்டென்று இமாலய மலைப்பகுதியில் மலை ஏறும் போது நான் கவனித்த ஒரு வித்தியாசம் நினைவுக்கு வந்தது. அந்தக் காடுகள் மிக அமைதியாக இருக்கும். பறவைகள் மிகக் குறைவு. அவைகளின் இருப்பை அறிவதே அபூர்வம். பூச்சிகளும் இல்லை. தனியாக செல்லும் போது சில சமயங்களில் அந்த அமைதி அச்சமூட்டும். அது வயோதிகத்தின் அமைதியை நினைவூட்டியது.
மாறாக மேற்க்கு தொடர்ச்சிமலைக் காடுகளின் இந்த உயிர்ப்பான சத்தம் இளமையின் கொண்டாட்டமாகவே தோன்றுகிறது.
ஆனால் புவியியல் தோற்றத்தின்படி இமாலயாதான் இளமையான மலைத்தொடர்!
இரண்டு கிலோமீட்டர்கள் ஏறியபின் அடர்ந்த மரங்களுக்கு இடையே திடீரென சமவெளி திறந்தது. அடர்ந்த காட்டிலிருந்து திடீரென வெளிச்சத்திற்கு வந்த உணர்வு.
முன் விரிந்திருந்தது நீலகிரியின் ஒரு சிறிய சிகரம். அதன் பின்னால் நீலநிறத்தில் அடுக்கடுக்காக மறைந்து போகும் மேற்குத் தொடர்ச்சி மலைகள். கீழே பரந்து விரிந்த சமவெளி. காற்று இப்போது வித்தியாசமாக இருந்தது. ஈரப்பதம் குறைந்து, உயரத்தின் குளிர்ச்சியை சுமந்து வந்தது.
சீக்கிரம் ரிசார்ட் செல்ல...
உச்சியை அடையும் முன் ஒரு மரத்தடியில் சிறிது நேரம் இளைப்பாரினோம். அப்போது தூரத்தில் கீழே காட்டின் நடுவில் ஒரு ரிசார்ட் போல ஏதோ ஒன்று தெரிந்தது.
“இங்க கூட ரிசார்ட் இருக்கா?” என்று எல்லோருக்கும் ஆச்சரியம்.
வனத்துறை நண்பர்கள் அது Hornbill Jungle Resort என்றனர்.
உடனே மொபைல் போனை எடுத்துப் பார்த்தோம். நெட்வொர்க் இருந்தது. விவரங்களை தேடினோம்.
இணையம் கிடைத்த இடத்தில் அந்த ரிசார்ட்டை கண்டுபிடித்தோம்.
அந்த ஹைதராபாத் நண்பர்
அது எவ்வளவு தூரத்தில் உள்ளது எப்படி செல்வது என்பதை அறிய
“Google Map-ல route போட்டுப்
பார்த்தார்
அது மிகவும் நம்பிக்கையுடன்,
“1 minute to destination.”
என்று காட்டியது.
நாங்கள் நின்றிருந்த இடத்திற்கும் அந்த ரிசார்ட்டிற்கும் நடுவில் நூற்றுக்கணக்கான அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு. சில கிலோமீட்டர்கள் தூரமும் இருந்தது.
Google சொல்படி நேராக கீழே குதித்தால்…
ஒரே நிமிடத்தில் போய்ச் சேர்ந்துவிடலாம்!
அந்தக் காட்டின் அமைதியையே குலைக்கும் அளவுக்கு சிரித்தோம்.
ரங்கசாமி பீக்
மேலும் சிறிது ஏறியவுடன் எதிரில் தெரிந்த சிகரத்தைக் காட்டி, “அதுதான் ரங்கசாமி பீக்,” என்றார் வனத்துறை நண்பர். புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
நாங்கள் ஏறிக்கொண்டிருக்கும் மலையின் உச்சியில் ஒரு அரங்கசாமி ( விஷ்ணு) கோயில் உள்ளது. அதுதான் ரங்கசாமி பீக் என நான் நினைத்திருந்தேன்.
கோயில் உச்சிக்கு இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது. இந்தக்கோயில் வருஷத்தில் சில மாதங்களில் சனிக்கிழமைகளில்
மட்டும் திறக்கப்படுமாம்.
கோயில் உச்சியிலிருந்து பிரமாண்டமான சமவெளி தெரிந்தது.
ஆங்காங்கே சிறு சிறு ஊர்கள். வளைந்து ஓடும் ஆறு. கீழ் பவானி நீர் த்தேக்கம். குன்றுகள். நீண்ட மலைகள்.
வெயில் காய்ந்து கொண்டிருந்தது.
மேக திட்டுகள் அசைவின்றி தொங்கிக்கொண்டிருப்பதைப் போல தோற்றமளித்தது.
சில பருந்துகள் அந்த சமவெளியை குறுக்கும் நெடுக்குமாக அளந்து கொண்டிருந்தன.
காலம் உறைந்து நின்றது போன்ற உணர்வு.
கீழிறங்கும்போது முனை மழுங்கிய ஒரு சிறிய கல்லை நினைவுச் சின்னமாக எடுத்துக்கொண்டேன். மலையின் ஒரு சிறிய துண்டை வீட்டிற்கு எடுத்துச் செல்வது போல இருந்தது.இப்படி செய்வது இதுவே முதன் முறை. நிஹிராவிடமிருந்து கற்றுக் கொண்டது.
சாதாரண மனிதர்கள் 02
சிவா, மணிகண்டன் - வனத்துறை கைடுகள். இருவருக்கும் இருபது வயதுதான் இருக்கும்.
சிவா சீனியர். இரண்டு வருடங்களாக இங்கு வேலை செய்கிறான். காலேஜ் வரை படித்திருக்கிறான். மணிகண்டன் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. எட்டாம் வகுப்புவரை மட்டுமே படிப்பு.
இருவரும் அருகிலுள்ள கிராமத்தை சேத்ந்தவர்கள். காடு அவர்களுக்கு வேலை செய்யும் இடம் மட்டுமல்ல; அவர்கள் வளர்ந்த உலகம். அதனால் ஒவ்வொரு மரத்தையும், ஒவ்வொரு பாதையையும், ஒவ்வொரு விலங்கின் பழக்கத்தையும் பற்றி இயல்பாகப் பேசினார்கள்.
அவர்கள் இருவரும் இரவே வந்து அந்த அலுவலகத்தில் தங்கி காலையில் எங்களுக்கான மதிய உணவை தயாரித்துவிட்டு வந்திருந்தனர்.
மதிய உணவை முடித்துக்கொண்டு விடைபெற்றேன்.
மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தேன்.
இன்று இரவு எங்கு தங்குவது? நாளை என்ன திட்டம் என எதுவும் தெரியாது.
சாலை மட்டும் முன்னால் நீண்டு இடந்தது.
இலக்கின்றி சுதந்திரமாக உணர்ந்தேன்.
( பயணம் தொடரும்)