Thursday, June 11, 2026

கிரிகையூர் - ரங்கசாமி பீக் பாகம் -1

Bike and Hike 


கிரிகையூர் - ரங்கசாமி பீக்

பாகம் -1 






பயணங்களுக்கு கூடுதல் சுவை சேர்ப்பவை நாம் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் விசித்திரமான செய்கைகளும்தான் என தோன்றுகிறது. மேலும், நாம் எவ்வளவுதான் கவனமாக திட்டமிட்டாலும் ஒவ்வொரு முறையும் தவறாமல் வரும் தடங்கல்கள் இந்த அனுபவங்களுக்கு ஒரு சாகசதன்மையை ஏற்படுத்திவிடுகின்றன.


ப்ராஞ்சலி தான் மும்பை செல்வதை அறிவித்த மறு நொடியே நான் எங்காவது மோட்டார் சைக்கிள் பயணம் செல்ல திட்டமிட்டுவிடுவேன்  என பயந்து இப்பொழுதெல்லாம் என்னிடம் முன் கூட்டியே சொல்வதை நிறுத்திவிட்டாள். இந்த முறையும் அப்படியே. அதுவும் அவள் திரும்பி வரும் பின்னிரவு நேரத்தில் என் உதவி தேவைப்படும் என்பதால் தெரிவித்தாள். 


 முதலில் என்னுடைய ஹிமாலயன் 411 மோட்டார் சைக்கிளில் கொடைக்கானல் சென்று அங்கு இரண்டு நாட்கள்  வெள்ளகாவி -கும்பகரை trek செய்ய திட்டமிட்டிருந்தேன். 


ஆனால் அதற்க்காக ஆன் லைனில் முன் பதிவு செய்யும்போது அந்த trek செய்ய குறைந்த பட்சம் மூன்று பேராவது தேவை என்றும் - அப்படி இல்லையென்றால் trek செல்ல இயலாது - பணம் திருப்பி தரப்படும் என்றும் குறிப்பு வந்தது. பயணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. என்னைத்தவிர வேறு யாரும் சேரவில்லை. மாற்று ஏற்பாடு செய்வது தவிர வேறு வழி இல்லை. 


அவசர அவசரமாக தேடி கோத்தகிரி அருகிலுள்ள கிரிகையூர் ரங்கசாமி trek  ஐ முன் பதிவு செய்தேன். நீலகிரி e pass ம் வாங்கினேன். 


சென்னையிலிருந்து பைக்கில் செல்வது கடினம் என்பதால் கோவையில் வாடகை மோட்டார் சைக்கிள் ( ஹிமாலயன் 450) தேடி அதையும் முன் பதிவு செய்தேன். கோவை செல்ல ரயில் பயண முன்பதிவு உறுதியாகவில்லை. Waiting list. கோடை விடுமுறை நேரம். தட்காலிலும் கிடைக்கவில்லை. எப்படி செல்வது? 

காரில் செல்லலாமா?

பஸ்? நிறைய ஸ்லீப்பர் கோச் வண்டிகள் உள்ளனவே? 

விமானம்? தேடிப்பார்த்ததில் ஒரு டிக்கெட் 15 000 வரை சென்றது!


பயணத்துக்கு முந்தைய நாள் ரயில் பயண வெயிட்டிங் லிஸ்ட் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி 4க்கு வந்தது நம்பிக்கையை கொடுத்தது. 


இரவு இறுதி பயண பட்டியல் (final chart) முடிவானது. எனது டிக்கெட் WL 01! 


எப்படியாவது அடுத்த நாள் மதியம் நான்கு மணிக்கு கோவையில் இருக்க வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்து unreserved- general compartment train ல் செல்வது என்ற எதிர்பாராத - சவாலான முடிவை எடுத்தேன். 


Riding gears, helmet, boots - இவையே ஒரு பெரிய  பையை அடைத்துக்கொண்டது. இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொண்டு நெரிசலில் பயணம் செய்வது? தவறு செய்கிறோமோ என்ன ஐயம் இருந்து கொண்டே இருந்தது. 


விடியற்காலை ஆறு மணிக்கு கோவை எக்ஸ்ப்பிரஸ் புறப்படும். மூன்று மணிக்கே விழித்துவிட்டேன்.குளித்து ரெடியாகி நான்கு மணிக்கு வீட்டிலிருந்து டாக்ஸி பிடித்து ஐந்து மணிக்கு ஸ்டேஷன் சென்றடைந்தேன். 


டிக்கெட் வாங்கிக்கொண்டு பதினோரோவது பிளாட்பாம் சென்ற போது, ஏற்கனவே வண்டி அங்கு நின்று கொண்டிருந்தது. மக்கள் ஓடிச் சென்று இடம் பிடித்துக்கொண்டிருந்தனர் -train அப்போழுதுதான் வந்திருக்க வேண்டும். பதட்டத்துடன் கனமான  பையை தூக்கிக்கொண்டு ஓடினேன். நல்ல வேளையாக பொருட்கள் வைக்கும் மேல் பர்த்தில் இடம் கிடைத்தது. சாமானை மேலே வைத்துவிட்டு அதற்க்கு அருகிலேயே அமர்ந்து கொண்டேன். எட்டு மணி நேர பயணம். எப்படி சமாளிக்கப்போகிறேன். இப்படி பயணம் செய்வது புதிதில்லை. நாக்பூரில் PG படிக்கும்போது இப்படி சில சமயங்களில் பயணம் செய்துள்ளேன். நீண்ட காலமாகிவிட்டது. 


நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. மூன்று பேர் அமர்ந்திருந்த இடத்தில் இப்பொழுது ஐந்து, ஆறு பேர் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருந்தோம்.பெரும்பாலானவர்கள் புலம் பெயர்ந்து கூலி வேலை செய்யும்

வட மாநிலத்தவர்கள். தமிழை விட ஹிந்தியே எங்கும் ஒலித்தது. நம்மூர் ஆட்கள் வழக்கம் போல அவர்களின் செய்கைகளை கூர்ந்து கவனித்து இளக்காரத்துடன் புன் முறுவலித்துக்கொண்டிருந்தனர். 


வண்டி புறப்பட்ட போது நிற்க்கக்கூட இடமில்லை. படியில் தொற்றிக்கொண்டும் சிலர் வந்தனர். 


வேர்த்து கொட்டியது. தண்ணீர் குடிக்க பயம். ரெஸ்ட் ரூம்

செல்ல வாய்ப்பே இல்லை. 


இந்த நெரிசலிலும் டீ, காபி விற்பனை ஜோராக நடந்தது. சிறிது நேரத்தில் மணம் கமழ சூடாக சமோசாவும் - பச்சை மிளகாயுடன் - கிடைத்தது. எனக்கு எதுவும் சாப்பிட தோன்றவில்லை. 


காலை வெயில் துண்டு துண்டாக ரெயில்

பெட்டியில் வந்து விழுந்த வண்ணம் இருந்தது. காற்றும் இதமாக வீசி சற்று இறுக்கத்தைக் குறைத்தது. 


பெரும்பாலான பயணிகள் தொடர்ச்சியாக மொபைல் போனில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு வந்தனர் - நின்றிருந்தவர்கள் கூட. என் அருகிலிருந்த வட மாநிலப் பயணி அமைதியாக ஒரு தியான மன நிலையில் இருந்தான். மூன்று பேர் அமர்ந்திருந்த இடத்தில் ஒருவர் பின் ஒருவராக ஐந்து, ஆறு பேர் உட்கார்ந்த போதும் முகம் சுளிக்காமல் நகர்ந்து இடம் ஏற்படுத்திக் கொடுத்தான். எவ்வளவு சிரமம் இருந்தாலும் பொது இடங்களில் அடுத்தவர்களுக்கு உதவுவதும் அவற்றை சகித்துக் கொள்வதும் பெரும்பாலான சாதாரண மனிதர்களின் குணங்கள் - இந்தியா முழுவதும். மாறாக எனது ஏஸி பெட்டி பயண அனுபவங்களில் இத்தகைய ஒத்துழைப்பை அரிதாகவே பார்த்திருக்கிறேன். அதுவுமில்லாமல் குடும்ப வரலாற்றையே கேள்வி கேட்டு நச்சரிப்பார்கள். சிரமங்கள் இருந்தாலும் இந்த சாதாரண மனிதர்களுடன் பயணம் செய்வது மகிழ்ச்சியாக இருந்தது. 


இப்படியாக ஒரு மூன்று மணி நேர பயணம் தொடர்ந்தது. காட்பாடி, ஜோலார்பேட்டை வந்ததும் மூச்சு விட இடம் கிடைத்தது. நெருக்கம் குறைந்து அமர்ந்திருந்த இடம் இலகுவானது. சிறிது நேரம் மொபைலில் செஸ் விளையாடினேன். உறக்கம் வந்தது. கடைசி ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. 


மதியம் இரண்டு மணிக்கு கோவை ரயில் நிலையம் சொன்றடைந்தேன். 

நல்ல வெயில். பசி வேறு. மதிய உணவை முடித்துக்கொண்டு வாடகை மோட்டார் சைக்கிள் எடுக்கச் சென்றேன். அந்த இடம் ரயில் நிலையத்திற்கு மிக அருகிலேயே இருந்தது. 


வித்தியாசமான மனிதர்கள் 01 


அங்கு கிஷோர் என்ற இளைஞன் இருந்தான். அநேகமாக அவன் தான் அந்த மோட்டார் சைக்கிள் வாடகை நிறுவனத்தின் உரிமையாளன். 


வார்த்தைக்கு வார்த்தை "அண்ணா...அண்ணா"என்று பேசினான். அந்த அண்ணாவைத் தவிர அவன் வாயிலிருந்து வந்த வேறு எந்த சொற்க்களும் மரியாதையானதாக இல்லை. 


முதலில் என்னுடைய ஒரிஜினல் ட்ரைவிங் லைசன்ஸ்ஸை வாங்கி வைத்துக்கொண்டான். இதை நான் எதிர்பார்க்கவில்லை. இந்தியா முழுக்க பல ஊர்களில் இது போன்று வாடகை வண்டி எடுத்து ஊர் சுற்றுபவன் நான். இதுவரை யாரும் இப்படி செய்ததில்லை. அதை அப்படியே அவனிடன் சொன்னேன். 


" அண்ணா நாலு இலட்சம் வண்டிய எப்படிண்ணா சும்மா குடுப்பாங்க" என்னுடைய அறியாமையை சுட்டி காட்டுபவன் போல பேசினான். 


யாராவது வழியில் பரிசோதித்தால் என்ன செய்வது - லைசென்ஸ் இல்லாமல்? என யோசித்துக்கொண்டிருந்த போது...


மேலும் அவன் சொல்லிக்கொண்டே சென்றான். அதிர்ச்சிகள் அத்துடன் முடியவில்லை.


"நீலகிரியில் வெளியில் இருந்து வரும் வாடகை வண்டிகளுக்கு அனுமதியில்லை. பிடிபட்டால் பத்தாயிரம், பதினைந்தாயிரம் அபராதம் விதிக்கப்படலாம்.             "அண்ணா ...அதெல்லாம் நீங்க தான் பாத்துக்கனும்"


"Speed Limit 80 kmph. ஒவ்வொரு முறையும் அதற்க்கு அதிகமாகும்போது எழுபது ரூபாய் அபராதம்" (ஹிமாலயன் 450 போன்ற ADV touring பைக்கள் 90-100 ல்தான் smooth ஆக செல்லும். வழக்கமாக 110 தான் limit ஆக இருக்கும்).

 

"Security deposit 2000 ரூபாய். வண்டியை ஒரு கீறலும் இல்லாமல் அப்படியே திருப்பி குடுக்க வேண்டும். இல்லையெனில் அந்தப் பணம் தரப்பட மாட்டாது"


இன்னும் ஏதோதோ சொல்லிக்கொண்டே இருந்தான். வியாபாரிக்களிக்கே உரித்தான கண்டிப்புடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதமல் பேசினான். 


ஆரம்பமே சரியாக இல்லை. கடைசி நேரத்தில் மாற்று ஏற்பாடு செய்ய இயலாது. அதுவுமில்லாமல் முன்பதிவு பணம் முழுதாக செலுத்தியாகிவிட்டது. வசமாக சிக்கிக்கொண்டது போல உணர்ந்தேன். வேறு வழியில்லை. 


பயண உடை , ஹெல்மெட் , கையுறை, ரைடிங் பூட் என்று ரெடியாகி, பையை வண்டியில் பின் வைத்துக்கட்டி - புறப்படும் போது மணி நான்கு. முழுவதுமாக வியர்வையில் நனைந்து இருந்தேன்.






மோட்டார் பைக்கை ஆன் செய்து செல்ல முயற்ச்சித்த போது வித்தியாசம் தெரிந்தது. மிக மெதுவாக சென்றது. வண்டியில் power, control, brake - எதுவுமே எதிர்ப்பார்த்தபடி இல்லை. சரியாக சர்விஸ் செய்யப்படாதது அப்பட்டமாகத் தெரிந்தது. பயணம் பற்றிய எதிர்பார்ப்பு, உற்சாகம் எல்லாம் ஏமாற்றமாய் மாறியது. நேரம் செல்ல செல்ல வண்டியில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது ஆறுதலளித்தது. 


அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு கோத்தகிரிக்கு அருகில் உள்ள கிரிகையூர் வனத்துறை அலுவலகம் செல்ல வேண்டும். அங்கிருந்துதான் மலை ஏற்றம் ஆரம்பம். 


இரவு கோத்தகிரியில் தங்குவதாக ஏற்பாடு. கோவையிலிருந்து சுமார் எழுபது கிலொ மீட்டர்கள். பாதி தூரம் மலைப்ப்பாதை. இருட்டுவதற்க்குள் சென்றடைய திட்டம்.


சென்னையில் வாழும் எனக்கு கோவை நகர நெரிசல் பெரிதாக தெரியவில்லை. அதுவும் ஒரு நீண்ட மேம்பாலத்தில் ஏறி இறங்கியவுடன் நகரத்திற்க்கு வெளியே வந்திருந்தேன். அடுத்து ஆட்கள் நடமாட்டமில்லாத சிறு சிறு கிராமங்களைக் கடந்து மேட்டுப்பாளையத்தை நெருங்கும்போது தூரத்தில் முதன் முறையாக மேற்க்கு தொடர்ச்சி மலை தெரிந்தது. நீண்ட சாலை. மழை மேகங்கள். முகத்தில் மோதும் இதமான மலைக்காற்று. பயணத்தை இரசிக்க ஆரம்பித்திருந்தேன். 


வெயிலின் தாக்கமும் குறைந்திருந்தது. புகைப்படம் எடுக்கலாமா என யோசித்து - அதுவல்ல முக்கியம் என பயணத்தை தொடர்ந்தேன்.


....பயணம் தொடரும்







No comments:

Post a Comment