Saturday, May 27, 2023

மனாலி 3

 





வாழ்வின் அற்புத கணங்களாக உணர வைப்பது நம் எதிரில் இருக்கும் காட்சிகள் மட்டுமில்லையே. நம் மன நிலையும் சேர்ந்துதானே. சலிப்பான அன்றாடத்திலிருந்து விலகிச் செல்வது அந்த மன நிலையை அடைய உதவுகிறது என நினைக்கிறேன்.


சிறிது நேரத்தில் மீண்டும் மேக மூட்டமாகி தூற ஆரம்பித்தது. ஒன்பது மணியளவில் கீர்கங்காவிலிருந்து இறங்க ஆரம்பித்தேன். பர்ஷைனியிலிருந்து இங்கு வர, போக இரண்டு பாதைகள். ஒன்று கிராமத்து மக்கள் உபயோகிக்கும் பாதை. இரண்டாவதாக ஒரு பாதை உண்டு. அதில்தான் நான் மலை ஏறிவந்தது. இறங்கும்போது அந்த கிராமத்து மக்கள் பாதையில் செல்ல முடிவெடுத்தேன்.

இறங்குவது, ஏறுவதைவிட சவாலாக இருந்தது. மழை ஈரம் சேர்ந்து வழுக்கியது. கவனமாக ஒவ்வொரு அடியையும் வைத்தேன். இந்த வழியில், மலை ஏறுபவர்கள், கிராமத்து மக்கள் என நிறைய ஆட்களைப் பார்க்க முடிந்தது. ஒரு இடத்தில், அவர்களின் நீண்ட வரிசை, ரயில் வண்டி மலை ஏறுவதைப்போல வளைந்து நெளிந்து போய்க்கொண்டிருந்தது. அதைப்பார்க்கும் போது “எவரெஸ்ட் சிகரம் ஏற வரிசையில் நிற்க்கும் மக்கள் “என்ற ஒரு பிரபலமான புகைப்படம் நினைவிற்க்கு வந்தது.

சில இடங்களில் பாதை செங்குத்தாக இருந்தது. இவ்வழியில் ஒரு கிராமமும் உண்டு. கிராமத்து வீடுகள், கற்களையும் மரக்கட்டைகளையும் மட்டுமே வைத்து கட்டப்பட்டிருந்தன. அக்கிராமத்தில் ஆட்களையே பார்க்க முடியவில்லை. எங்கும் வறுமை காட்சியளித்தது. அந்த வீதிகளில் நடக்கும் போது இனம் தெரியாத சோகமே ஏற்பட்டது.

இக்கிராமங்களைப் பற்றி வித்தியாசமான பல விஷயங்களை கேள்விப்பட்டேன். அவர்கள் வெளி ஆட்கள் யாரையும் தொட மாட்டார்கள். பொருட்களை நமக்கு தர வேண்டும் என்றால் அதை கீழே போட்டுவிடுவார்கள். நாம்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அங்கு இருக்கும் கோயிலையும் கடவுளையும் கூட யாரும் தொடக்கூடாது. சூரியன் மறையும் முன் வெளி ஆட்கள் கிராமத்து எல்லைக்கு அப்பால் போய்விட வேண்டும். அங்கு தங்க அனுமதியில்லை.

தங்கும் விடுதி சென்று சேர மாலை நான்கு மணியாகிவிட்டது. சுற்றிப்பார்க்க நாளை இன்னும் ஒரு நாள் இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் மலானா (malana),
தோஷ்( Tosh) போன்ற கிராமங்களுக்குச் செல்வதா, அல்லது மனாலிக்கு அருகில் இருக்கும் அதுல் டனல்( Atul Tunnel), சோலாங் பள்ளத்தாக்கு ( solang valley) செல்வதா என முடிவு செய்யவேண்டும். Rohtang pass பாதை அப்போது திறக்கப்படவில்லை.

மே 4ம் தேதி

திரும்பிச் செல்ல ஐந்தாம் தேதி மாலை ஏழு மணிக்கு சண்டிகரிலிருந்து விமானம். நான்காம் தேதி இரவே மானாலியிலிருந்து சண்டிகர் செல்ல HRTC பேருந்தில் முன்பதிவு செய்தேன். ஐந்தாம் தேதி காலை புறப்பட்டால், வழியில் ஏதாவது காரணத்தினால் தாமதமானால், விமானத்தை தவற விட நேரிடும், என்பதால். மலைப்பாதையில் இரவு பயணம். தவிர்க்க முடியவில்லை.

அருகிலிருக்கும் கிராமங்களுக்கு செல்ல ஆர்வமில்லாததால் மனாலி திரும்ப முடிவெடுத்தேன்.

அவசரமில்லாமல் தாமதமாக விழித்து, தயாராகி பனிரெண்டு மணி அளவில் மனாலி நோக்கிப் புறப்பட்டேன். காலையிலிருந்தே வெயிலடித்தது. வானம் மேகமில்லாமல் தெளிவாக இருந்தது.

வழியில் குலு( kullu)வுக்கு அருகில் பியாஸ் நதியில் rafting செய்தேன். Rafting செய்யும் போது நனையாமலிருக்க, அதற்க்கான உடைகளை அணிந்திருக்கவேண்டும். அப்படி செய்யாததால் முழுவதும் நனைந்து விட்டேன். ஐஸ் போன்ற நீர். குளிரில் நடுங்க ஆரம்பித்தேன்.

மனாலியைக்கடந்து அதுல் டணலை நெருங்க நெருங்க குளிர் இன்னும் அதிகரித்தது. மனாலியிலிருந்து சொலாங் ( solang) பள்ளத்தாக்கு வழியாகத்தான் அதுல் டணல் செல்லவேண்டும். சொலாங் பள்ளத்தாக்க்கில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் வண்டியை நிறுத்தவில்லை. மாலை ஐந்து மணியளவில் அதுல் டணல் சென்று சேர்ந்தேன்.

Atul Tunnel or Rohtang Tunnel

இது மனாலியிலிருந்து 28 கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது. ஒரு மணி நேரப்பயணம். கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில், rohtang pass க்கு அடியில் போடப்பட்டுள்ள டணல் இது . இதன் நீளம் ஒன்பது கிலோ மீட்டர்கள் . இது மனாலியிலிருந்து லே செல்லும் வழியில் அடிக்கடி பனி சரிவிற்க்கு ஆளாகும் rohtang pass ஐ தவிர்க்க உதவுகிறது. பயண தூரத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.

ஏற்கனவே ஈரமான உடையுடன் நடுக்கிக்கொண்டிருந்த எனக்கு அதுல் டணலில் நுழைந்ததும் குளிர் பல மடங்கு அதிகமானது. குளிர் சாதனப்பெட்டியில் நுழைந்தது போல் இருந்தது. ஒரு கிலோமீட்டருக்குள் திரும்பிவிட்டேன். டணலுக்குள் வண்டியை நிறுத்தவோ திருப்பவோ கூடாது என கட்டுப்பாடுகள் இருந்தும்.

மோட்டார் சைக்கிளை ஏழு மணியளவில் ஒப்படைத்துவிட்டு விடுதிக்கு சென்று சூட்கேஸை எடுத்துக்கொண்டு ஒன்பது மணிக்கு பேருந்தில் அமர்ந்தேன். வானம் தெளிவாக இருந்ததால் நிலவொளியில் பனிச்சிகரங்கள் மின்னின.

இரவு நேரத்தில் மலைப்பாதையில் பயணம் செய்வது சிறிது கவலை அளித்தது. பேருந்து புறப்பட்டு சிறிது நேரத்திற்க்குள் ஓட்டுனர் வண்டியின் பிரேக்கில் ஏதோ பிரச்சனை என்று ஓரங்கட்டி நிறுத்தினார். Work shop-ற்க்கு போன் செய்து பேசினார். அந்த பிரச்சனையை சரிசெய்ய work shop- ற்க்கு வண்டியை எடுத்து செல்லவேண்டும் என்றும் குலுவில் வேறு பேருந்து மாற்றி தருவதாகவும் பேசிக்கொண்டனர். வண்டி குலு வரை மிக மெதுவாகச் சென்றது. இந்த புது சிக்கலால் கவலை அதிகமானது.




குலுவில் வேறு பேருந்தில் உடைமைகளை மாற்றி வைத்துவிட்டு அதில் அமர்ந்தோம். இனி பிரச்சனை ஏதும் இருக்காது என்ற நம்பிக்கையுடன் சற்று கண்ணயர்ந்தேன். இரவு பனிரெண்டு மணி இருக்கும். மறுபடியும் ஏதோ சலசலப்பு. ஓட்டுனரும் நடத்துனரும் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். வண்டி நின்றிருந்தது. சிறிது நேரத்தில் மெதுவாக புரிய ஆரம்பித்தது. வழியில் மண் சரிந்தோ, மரம் விழுந்தோ பாதை மூடிவிட்டது. வாகனங்கள் செல்ல இயலாது. இதை ஏதோ மிகச் சாதாரணமான நிகழ்வு போல நடத்துனர் சொன்னார். காலையில் பாதை சரி செய்யப்பட்டதும் செல்லலாம் என்றார்.
மாலைதான் விமானம் என்பதால் பிரச்சனை இருக்காது என நினைத்தேன். எனக்கு பின் சீட்டில் ஒரு தமிழ்க்குடும்பம் இருந்தது. அவர்களுக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. குடும்பத்தலைவர் தனக்குத்தெரிந்த அறைகுறை இந்தியில் ஓட்டுனரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அவர்களுக்கு நான் தமிழ் என்று தெரியாது. நானும் சண்டிகரிலிருந்து விமானத்தை பிடிக்கத்தான் பேருந்தில் பயணம் செய்கிறேன் என யூகித்து என்னிடம் ஆங்கிலத்தில் பேசினர். அவர்களுக்கு காலை விமானம். அதற்க்குள் சண்டிகர் சென்றாக வேண்டிய கட்டாயம். உதவ நினைத்து, சண்டிகர் செல்ல வேறு பாதை ஏதாவது உள்ளதா என ஓட்டுனரிடம் விசாரித்தேன். கார்கள் செல்லக்கூடிய மாற்று வழி ஒன்று உள்ளதாக சொன்னார். அதில் பேருந்துகள் செல்ல இயலாது. நடத்துனரிடம் பேசி வாடகைக்கார் ஒன்றை ஏற்பாடு செய்து அந்த தமிழ் குடும்பத்தை வழி அனுப்பி வைத்தேன். மணி ஒன்றை தாண்டி இருந்தது . பாதை எப்பொழுது சரியாகும் என தெளிவாக தெரியவில்லை. நடத்துனர் காலை ஒன்பது, பத்து ஆகிவிடும் என்றார். இரவை எப்படி கழிப்பது. எங்கு உறங்குவது. பாதை சரியாகி நேரத்திற்க்கு விமான நிலையம் சென்று சேர முடியுமா என பல விடைதெரியாத கேள்விகள் எழுந்தன.

பஞ்சாபி இளைஞன் ஒருவன் பேச்சு கொடுத்தான். நாமும் வாடகைக்கார் வைத்துக்கொண்டு செல்லலாமா என கேட்டான். வாடகைக்காருக்கு எட்டாயிரம் ரூபாய் செலவாகும். நான்கு பேர் சேர்ந்து செல்லலாம் என்றான். இன்னொரு இளைஞனும் இளைஞியும் எங்களுடன் இணைந்து கொண்டனர்.
வாடகைக்கார் வந்தது. மாருதி ஆல்டோ. அதைப்பார்த்ததும், கார் வாங்கும் போது safety features, crash test results என்று ஆராய்ச்சி செய்து வாங்குகிறோம்; ஆபத்தான மலைப்பாதையில் இப்படி ஒரு பாதுகாப்பற்ற வண்டியா என பயம் அதிகரித்தது. ட்ரைவருக்குப் பக்கத்தில் அந்த பெண்ணும்
பின் சீட்டில் நாங்கள் மூவரும் அமர்தோம். ஓட்டுனரிடம் “ சகோதரா, தயவு செய்து சற்று மெதுவாக, பாதுகாப்பாக செல்லவும்” என இந்தியில் சொன்னேன். உதவி செய்ய வந்தவனிடம் கட்டளையிடுகிறானே - என்பது போல ஒரு பார்வை பார்த்தான். பின் சீட்டில் மூன்று பேருக்கு இடம் போதவில்லை. அரை சீட்டில் அமர்ந்திருப்பது போல் தோன்றியது.

ட்ரைவர், நான் சொன்னதை காதிலேயே வாங்காததுபோல் சர்ரென்று வேகத்துடன் வண்டியை கிளப்பினான். வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. புறப்பட்டு இரண்டு நிமிடத்திற்க்குள் மொபைலை எடுத்தான். வலது கையில் ஸ்டியரிங்கை இயக்கிக்கொண்டே இடது கையினால் தொடுதிரையில் மேலும் கீழும் தேடி யாருக்கோ போன் செய்தான். விடியற்காலை இரண்டு மணிக்கு யாரிடம் பேசுகிறான் என எரிச்சல் ஏற்பட்டது .பேசிக்கொண்டே, ஒரே கையில், அதே வேகத்தில் வண்டியை ஓட்டினான். அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் கால் செய்து கொண்டே இருந்தான். என்னுடைய பயம் புதிய உச்சத்தை தொட்டது. உயிரோடு சண்டிகர் சென்று சேருவோமா என சந்தேகம் வந்தது. வண்டி மலைப்பாதையில் உருண்டு முடிவு வருமா, எதிரில் வரும் வண்டியில் மோதி வருமா. எதில் வலியும் துயரமும் குறைவாக இருக்கும். அப்படி ஏதாவது நடந்தால் குடும்பத்தை எப்படி தொடர்பு கொள்வார்கள். அது அவர்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும். அவர்களின் எதிர்காலம். இப்படி மனதில் பல எண்ணங்கள் ஓடின. ஒரு கட்டத்தில் வழியில் நிறுத்தச்சொல்லி இறங்கிக் கொள்ளலாமா என்று கூட தோன்றியது. இந்த வண்டியில் பயணம் செய்ய முடிவெடுத்த முட்டாள்தனத்திற்க்காக வருந்தினேன். இதிலிருந்து தப்பித்தால் இனி இதுபோன்று தவறு செய்யக்கூடாது என நினைத்துக் கொண்டேன்.

மண்டி என்ற இடத்தில் மாற்றுப்பாதை, வழக்கமான அகலமான பாதையில் இணைந்தது. மற்ற மூவரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர். விடியற்காலை நான்கு மணி. அந்த ட்ரைவர் மொபைலில் பேசுவதை நிறுத்தியிருந்தான். அவனிடமிருந்து சுத்தமாக சத்தமே இல்லை. அவனின் அமைதியைப் பார்த்து தூங்குகிறானோ என ஐயம் தோன்றியது. இது என்ன புதுப் பிரச்சனை. தூங்குவதைவிட மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டுவது எவ்வளவோமேல் என தோன்றியது. ஒருவேளை அதனால்தான் அவன் போன் பேசிக்கொண்டே இருந்தானோ?

வேகத்தில் செல்லும் கார். எதிரில் வரும் சரக்கு லாரிகள் மற்றும் வால்வோ பேருந்துகளின் கண் கூசும் வெளிச்சம். அவைகளின் மனதைப் பதறச்செய்யும் ஒலிப்பான்களின் சத்தம். இடிப்பது போல சென்று கடைசி வினாடியில் தப்பி மீண்ட கார். இப்படி நேரம் போனது. விடியும் வரை துளியும் உறங்கவில்லை. ஐந்து மணியளவில் வெளிச்சமாக ஆரம்பித்தது. ட்ரைவர் ஆறு மணிக்கு டீ சாப்பிட வண்டியை நிறுத்தினான். அப்பொழுதான் பயம் சற்று குறைந்தது. மலைப்பாதையும் முடிவுக்கு வந்துவிட்டிருந்தது.

ஒரு வழியாக ஒன்பது மணியளவில் சண்டிகர் செக்டார் 17 ல் இறக்கி விடப்பட்டேன் - உயிருடன். வண்டியிலிருந்து இறங்கியதும் அளவற்ற ஆனந்தம் ஏற்பட்டது. அது, கீர்கங்காவில் வெண் சிகரங்களுக்கு எதிரில் நின்றபோது - அந்த அற்புத கணங்களில் - தோன்றியதைவிட பல மடங்கு அதிகமான ஒன்று.

நிறைவு

Saturday, May 20, 2023

மனாலி - 2 கசோல்(kasol), கீர்கங்கா( kheerganga) trek

 



தங்கும் விடுதிக்கு வந்த உடன், உறங்குவதற்க்கு முன், அருகிலுள்ள சுற்றுலா இடங்களைப்பற்றி இணையத்தில் படிக்க ஆரம்பித்தேன். தர வரிசையில் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் இருந்த கசோல்( kasol) என்ற இடம் பொருத்தமாக தோன்றியது. அது மனாலியிலிருந்து எண்பது கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. Kullu வழியாகச் செல்ல வேண்டும். Bhuntar விமான நிலையத்திலிருந்து முப்பது கிலோமீட்டர்கள். கசோலுக்கு அருகில் கீர்கங்கா( Kheerganga) என்ற புகழ் பெற்ற trek க்கும் உள்ளது.


மே 1ம் தேதி

காலை ஒன்பது மணிவாக்கில் வாடகை மோட்டார் சைக்கிளை எடுத்து வந்து (Royal Enfield- Meteor) சாமான்களை ஒரு பையில் வைத்து வண்டியில் கட்டினேன். சூட்கேஸை விடுதிலேயே வைத்து விட்டேன்; நான்காம் தேதி- திரும்பி போகும்போது எடுத்துக் கொள்ளலாம் என்று.



குளிர் பிரதேசங்களில் மோட்டார் சைக்கிளில் சுற்றுவது ஒரு இன்பமான அனுபவம். வானம் மேக மூட்டத்துடன் அவ்வப்போது தூறிக் கொண்டிருந்தது.
மேகங்கள் விலகும் போது மட்டும் பனி மூடிய சிகரங்கள் தெரிந்தன. இடதுபுறத்தில் பியாஸ் ( beas) நதி சாலையை ஒட்டி ஓடிக்கொண்டிருந்தது. கோடைக்கால ஆரம்பம் என்பதால் மிதமான தண்ணீரே இருந்தது. அதில், river rafting செய்ய நிறைய இடங்கள் இருந்தன. திரும்ப வரும்போது செய்துகொள்ளலாம் என நினைத்துக்கொண்டேன். ஒரு மணி நேர பயணத்திற்க்கு பிறகு டீ குடிப்பதற்க்காக குலு விற்க்கு அருகில், ஒரு சாலையோர கடையில் நிறுத்தினேன். கனமான மழை பிடித்துக் கொண்டது. அரை மணி நேரம் அந்தக் கடையிலேயே அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். மழை சற்று குறைந்ததும் மழைக்கான உடைகளை ( ரைடிங் ஜாக்கெட் மற்றும் பேண்ட்டின் மீது) அணிந்து கொண்டு, பையையும் ஒரு உறை போட்டு மூடிக்கொண்டு கிளம்பி விட்டேன். மழையில் வண்டி ஓட்டுவதும் ஒரு நல்ல அனுபவம்தான். Bhuntar ஐத் தாண்டி மலைப்பாதையில் நுழைந்ததும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் கீழிறங்கிக் கொண்டிருந்தன. அப்போது,இடது புறம் பார்வதி ஆறு ஓடிக்கொண்டிருந்தது(அது bhuntar க்கு அருகில் பியாஸ் ஆற்றுடன் கலக்கிறது). இரண்டு மணிக்கெல்லாம் கசோல் சென்று சேர்ந்தேன்.

கசோல் (Kasol)

கசோல் ஒரு நவீன வசதிகள் கொண்ட கிராமம். ஹிப்பி( hippie ) கலாச்சாரத்து பெயர் போனது. வீதிகளிலும், கபே ( cafe) க்களிலும் மேற்க்கத்திய இசை ஒலித்துக் கொண்டிருந்தது. இங்கு பல இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. வெளி நாட்டவர்கள் குறிப்பாக இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் இங்கு நீண்ட காலம் குடியேறி வாழ்ந்திருந்தனர். அதற்க்கு தாராளமாக கிடைத்த கென்னாபிஸ் , ஹாஷிஷ் ஒரு முக்கிய காரணம். அருகிலுள்ள “மலானா(malana)” கிராமத்திலிருந்து தயாரிக்கப்படும் “ malana cream” என்ற ஹாஷிஷ் (hashish)உலகின் முதல் தர கென்னாபிஸ் என்று பிரபலமாகி விட்டது. அதற்க்காகவே பல வெளி நாட்டவர் கசோலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்படி வந்தவர்களில் சுமார் இருபது பேர் காணாமல் போனதால் அரசாங்கம் தலையிட்டு இப்பொழுது அவர்கள் வருகை குறைந்துவிட்டது(High on Kasol என்ற புத்தகம் அப்படி மறைந்து போனவர்களைப்பற்றி எழுதப்பட்டது). நான், நீண்ட முடியுடன் சில ஹிப்பி ஐரோப்பியர்களை கசோலின் வீதிகளில் பார்த்தேன். சிலர் உணவகங்கள் நடத்திக் கொண்டுள்ளனர்.

கசோலில் தங்குவதற்க்கு சுமாரான வசதியுள்ள நிறைய விடுதிகள் உள்ளன. ஓய்வு எடுத்துவிட்டு நாளை கீர்கங்கா trek செல்லவேண்டும்.

மே 2ம் தேதி
கீர்கங்கா trek ( Kheerganga)

கசோலிலிருந்து பதினைந்து கிலோமீட்டர்கள் தூரத்திலிருள்ள பர்சைனி ( Barshaini) என்ற இடத்திலிருந்துதான் மலை ஏற வேண்டும். கசோல் - பர்ஷைனி பைக் பயணத்தின் போது வானம் சற்று தெளிவாக இருந்தது; பனி மூடிய சிகரங்களை தெளிவாகப்பார்க்க முடிந்தது. பர்சைனியில் வண்டியை பாதுகாப்பாக நிறுத்த நிறைய கடைகள் இருந்தன.

சுமார் பத்து மணி அளவில் மலை ஏறத்துவங்கினேன். பனிரெண்டு கிலோமீட்டர்கள் trek செய்ய வேண்டும்.
இது, Indiahikes என்ற தளத்தின்படி அனுபவமில்லாதவர்கள் கூட செல்லத்தக்க “easy to moderate difficulty”உடைய trek.





இன்னும் வானம் மேக மூட்டத்துடன் தூறிக்கொண்டுதான் இருந்தது. வானிலை தெளிவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஒரு இளைஞனும் மூன்று இளைஞிகளும் கொண்ட ஒரு குழு, கைடின்( guide) உதவியுடன் சற்று முன் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களைத்தவிர வேறு ஆட்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. நான் அவர்களைக் கடந்து செல்லும் போது அந்த கைடுடன் வந்த நாய் அவர்களை விட்டுவிட்டு என்னைத்தொடர ஆரம்பித்தது. முதலில் அருகில் வந்து நுகர்ந்து வாலாட்டி அறிமுகம் செய்துகொண்டது. அதிசயமாக எனக்கு பயம் ஏற்படவில்லை;அதன் தலையை வருடினேன். ஆளில்லா காட்டில்( சிறிது நேரத்திற்க்குப்பிறகு அந்தக் குழு தென்படவே இல்லை) அதன் துணை மனதுக்கு மகிழ்ச்சியளித்தது.

மலை ஏற்றம் சுலபமாகத்தான் இருந்தது. அடர்ந்த மரங்கள் சூழ்ந்த ஒற்றையடிப்பாதை - ஆட்கள் நடந்து உருவானது. பல இடங்களில் மரம் விழுந்தோ மண் சரிந்தோ அது பல புதிய கிளைப் பாதைகளுடன் சென்றுகொண்டிருந்தது. செங்குத்தாக ஏறாமல் மிக மெதுவாகவே உயரம் அதிகரித்தது. மழையினால் பாதை வழுக்கலாக இருந்தது. சில இடங்களில் பாதுகாப்பு இல்லாமல் இடது பக்கம் மிக ஆழமாக - சரிவுடன் இருந்தது. அந்த ஆழத்தில் பார்வதி ஆற்றின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது.
ஒரு இடத்தில் “இந்த இடத்தில்தான் என் நண்பன் கவனக்குறைவால் இறந்தான். குறுக்கு வழிகளை தவிருங்கள்” என ஒரு தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது.



வழியில் சில சிற்றுண்டி கடைகள் இருந்தன. மழை அதிகரிக்கும் போது அவற்றில் தஞ்சம் புகுந்தேன்.

தனியாக காட்டில் நீண்ட நேரம் நடப்பது ஒரு தியான நிலையை உருவாக்கியது. பல கவிதைகள் மனதில் தோன்றிக்கொண்டேயிருந்தன. அவ்வப்பொழுது அதை மொபைல் நோட்டில் குறித்துக்கொண்டே நடந்தேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்வாழும்  தேவதாரு மரங்கள் ( deodar cedar) நிறைந்த வனம் அது. அதன் பாசி படிந்த வேர்கள் அதில் வெளிர் பச்சையாக துளிர்கள் - அதன் மக்கிய இலைகள் - சேற்றுடன் கலந்த பாதை - இவை அனைத்தும் சேர்ந்து ஒரு நவீன ஓவியமாகக் காட்சியளித்தது.

சட்டென்று மழை கனமாக பெய்ய ஆரம்பித்தது. அப்பொழுது காற்றில், மரத்தில், இலையில் ஒரு சிறு அசைவைக்கூட பார்க்கமுடியவில்லை. மழை பெய்யும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

மழையின்
சிம்பொனியில்
உறைந்து நின்றன
இலைகள்
மரங்கள்
வனம்
காற்று
காலம்

***
பாறை
சிலிர்த்துக் கொண்டது.
தழுவும் மேகம்

***
நீண்ட நாட்களுக்குப் பிறகு
பிடித்த நண்பனுடன்
நீண்ட நேரம் உரையாடினேன்
மெளனமாக.
தனிமை

****
தலையறுபட்ட
சோகத்தின்
விசும்பல்களைச்
சொல்லிக் கொண்டுதானிருக்கின்றன
மாடி வீடுகளில் வீற்றிருக்கும்
நாற்காலிகள்

***

நான்கு மணியளவில் உச்சியை சென்றடைந்தேன். தங்குவதற்க்கு ஏராளமான tents - camps இருந்தன.
நடப்பதை நிறுத்தியவுடன் குளிர் அதிகமாகத் தெரிந்தது. பனி மூடிய சிகரங்களின் அருகாமையும் ஒரு காரணம். மழை, ஈரம் இவையும் சேர்ந்து உடலை நடுங்க வைத்தன.
அங்கு ஒரு வெந்நீர் ஊற்று ( hot springs) உள்ளது. பயணிகள் உச்சியை அடைந்தவுடன் அந்த வெந்நீர் தொட்டியில் அமர்ந்து இளைப்பாறுவது வழக்கம். மழை ,குளிர் காரணமாக எவரும் தண்ணீரில் இறங்க துணியவில்லை. உணவருந்திவிட்டு சிறிது நேரம் கணப்படுப்பு ( fireplace) அருகில் அமர்ந்திருந்தோம்.

டென்ட்டில் இருந்த படுக்கை மற்றும் போர்வை எல்லாமே ஈரமாக இருப்பதாக தோன்றியது. குளிரில் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது,நீண்ட நேரம். விடியற்காலை வானம் தெளிவாகும் என நம்பிக்கை இருந்தது. விரைவில் தூங்கி விட்டேன். பக்கத்து டென்டிலிருந்த பெண்களின்( திருமண விழாவிற்க்காக ஏதோ கிராமத்தை சேர்ந்த ஒரு குழு அங்கு தங்கியிருந்தது) பேச்சுக் குரலால் கண் விழித்தேன். காலை ஐந்து மணி. வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. தூறல் இல்லை. மேகமும் குறைவு. வெளியே வந்து பார்த்த போது, காலை அமைதியில் வெண் சிகரங்கள் பிரமாண்டமாக மிக அருகில் தெரிந்தன. அதன் முன், உலகம் மறந்து சிறிது நேரம் நின்றேன். இது போன்ற ஒரு சில அற்புத கணங்களுக்காகத்தானே வாழ்க்கை, என்று தோன்றிது.

பயணம் தொடரும்…

Wednesday, May 17, 2023

மனாலி-1




வருடத்திற்க்கு இரண்டு மூன்று முறையாவது வீட்டுச்சிறையிலிருந்து விடுபடத் தவிக்கும் மனது சரியான தருணத்திற்க்காக காத்திருந்தது. அப்படிக் கிடைத்த ஐந்து நாட்களில் செய்த பயணம்தான் இது.


திட்டம் உருவான போது, மே மாதம் பதினைந்தாம் தேதியளவில் நண்பர்களுடன் சேர்ந்து செல்லலாம் என்பதே எண்ணம். என்னுடைய விடுமுறை நாட்கள் என் கட்டுபாட்டில் இல்லாததால் அது நிறைவேறவில்லை. அதனால் இம்முறையும் வழக்கம் போல தனியனாகவே பயணம்.

விடுப்பு, பயணம் என்றதுமே இமாலயாதான் நினைவுக்கு வருகிறது. Himalaya is calling! முதலில் Dharamsala செல்வதாகத்தான் திட்டமிட்டேன். அங்குள்ள triund trek ஐ முடித்துவிட்டு அருகிலுள்ள உலகிலேயே அபாயகரமான சாலைகளில் முதல் இடத்தில் இருக்கும் “killar -kishtwar” ஐ மோட்டார் சைக்கிளில் கடக்கலாம் என ஆசைப்பட்டேன். அதைப்பற்றி படிக்க ஆரம்பித்த போதுதான் தெரிந்தது அந்த சாலை ஆறு மாதங்கள் பனியில் மூடி இருக்கும் - மே மாதம் இறுதியில்தான் திறக்கப்படும் என்று. அடுத்து, ஹிமாச்சல்மாநிலத்தில் வேறு எங்கு செல்லலாம் என்று இணையத்தில் ஆராய்ந்தேன். மனாலி பற்றிய விபரங்கள் வந்தது. வருடம் முழுதும் செல்லக்கூடிய இடம். அருகில் பல இடங்கள் trekks செல்லவும் மோட்டார் சைக்கிளில் சுற்றுவதற்க்கும் இருந்தன. மனாலிக்கு அருகில் beas Kund trek ( மனாலியில் ஓடும் பியாஸ் நதியின் மூல ஊற்றை அடையும் இடம்) மிகப்பிரபலமானது. முதல் இரண்டு நாட்கள் அங்கு சென்றுவிட்டு மீதம் இரண்டு நாட்கள் spiti or lahaul valley செல்லலாம் என்று முடிவு செய்தேன்.

விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் போதுதான் அதிலுள்ள சிக்கல் புரிந்தது. விமான நிலையம் மனாலியிலிருந்து 50 கிலோமீட்டர்கள் தொலைவில் குலுவிற்க்கு( kullu) அருகில் உள்ளது - Bhuntar விமான நிலையம். சுற்றிலும் உயரமான மலைகள் சூழ்ந்தது. அதில் விமானங்கள் தரை இறங்க நிறைய சவால்கள் உள்ளன - ஒரு கிலோமீட்டரே தூரமுள்ள ஓடுகளம் உட்பட. அதனால் டிக்கெட் விலை அதிகமாக இருந்தது. நடுத்தர வர்க்க சுற்றுலாப்பயணிகள் சண்டிகர் அல்லது டெல்லியில் இருந்து சாலை வழியாகவே மனாலி செல்வர். நாங்கள் லே லடாக் சென்றபோதும் டெல்லியிலிருந்து மனாலி சென்றது நினைவிற்க்கு வந்தது.
நான் சண்டிகர் வழியை தேர்வு செய்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தேன். சண்டிகரிலிருந்து HRTC volvo பேருந்து. தூரம் முன்னூறு கிலோமீட்டர்கள். பெரும்பாலும் மலைப்பாதை என்பதால் எட்டு மணி நேர பயணம். இரவுப் பேருந்துகள் இருந்தன. மலைப்பாதை என்பதால் பகல் நேரத்தில் முன்பதிவு செய்தேன்.

29 ம் தேதி ஏப்ரல் - சனிக்கிழமை

உத்ராகண்ட் பயணத்தின் போது செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள முயற்ச்சித்தேன். குளிருக்கான உடைகளையும் சேர்த்து சூட்கேஸில் திணித்தேன். மோட்டார் சைக்கிளில் சுற்றும்போது அதில் வைத்து கட்டுவதற்க்கு ஏற்ற ஒரு பையையும் எடுத்துக் கொண்டேன்( அப்படி போகும்போது சூட்கேஸை விடுதியிலேயே வைத்துவிடலாம்). மோட்டார் பைக் ரைடிங் கியர்ஸ் மற்றும் ஹெல்மட் இவைகளே பெரும்பகுதி இடத்தை அடைத்துக் கொண்டன. இந்த முறை சாமான்கள் அதிகம் இருந்தாலும் சூட்கேஸில் எடுத்துச் செல்வதால் சுலபமாக இருந்தது. சென்ற முறை saddle bag ( செக் இன் போது அது ஒரு பையா இரண்டு பையா என்று விசாரணை வேறு !) ஐ வைத்துக் கொண்டு சிரமப்பட்டேன்.

இரவு ஒன்பது மணிக்கு சென்னை- சண்டிகர் விமானம்.
சென்னையிலிருந்து நேரடி விமானம் இல்லை. புனேயில் நான்கு மணி நேரம் லே ஓவர். ஓய்வு அறையில் சோபாவில் காலை நீட்டி தூங்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன். புனே- சண்டிகர் விமானத்தில் அமர்ந்ததும் நன்றாக தூக்கம் வந்தது. காலை ஆறு மணிக்கு சண்டிகர் சென்று சேர்ந்தேன்.

30ம் தேதி ஏப்ரல்

எட்டு மணிக்கு மனாலி செல்ல பேருந்து. செக்டர் 43 செல்லவேண்டும். சண்டிகருக்கு வருவது இதுதான் முதல் முறை. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம்; பல செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி இல்லாமல் தாராளமான இடத்துடன் வீதிகள் தென்பட்டன. நேர் கோட்டில் நீளமான சாலைகள். போக்குவரத்து நெரிசல் இல்லை. நிறைய மரங்கள். சில இடங்கள் காடு போல காட்சியளித்தன. அழகான நகரம்.



பேருந்து நிலையம் பழைய நாட்களை நினைவிற்க்கு கொண்டுவந்தது. காலை சிற்றுண்டிக்கு உணவகத்தில் அமர்ந்திருக்கும் போகு ஒரு வித்தியாசமான நிகழ்வைக் கண்டேன். எல்லாக்கடைகளும் lays போன்ற நொறுக்குத்தீனிகளாலும் pepsi, coca cola போன்ற பானங்களாலும் நிரம்பி வழிந்தது. வருபர்கள் அனைவரும் அவைகளை மட்டுமே வாங்கிச் சென்றனர். பெரும்பாலான இள வயதினர் சற்று பருமனாக  இருந்தது ஆச்சரியமளிக்கவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்தில் பயணம். ஜன்னலோர இடம் கிடைக்கவில்லை. இருக்கையில் சீட் பெல்ட் வசதி இருந்தது ஆச்சரியமளித்தது. அதை அணிந்து கொள்ளலாம் என முயற்ச்சிக்கும் போது தான் தெரிந்தது - அதை சீட்டிற்க்கு பின் நுழைத்து வைத்திருந்தனர் -வெளியே எடுக்க முடியாத படி. உயரமான volvo பேருந்து மலைப்பாதைகளில் பயணிக்கும் போது சாய்ந்து சாய்ந்து இருபுறமும் அலைந்து semicircular canals ஐ தூண்டியது . சிறிது நேர சிரமத்திற்க்கு பின் பழகிவிட்டது. பிலாஸ்புர், மண்டி, குலு என்று தூரங்களைக் கடந்து பேருந்து சென்று கொண்டிருந்தது. பகல் நேர மலைப் பாதை பயணத்தை அனுபவிக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் அப்படி ஒரு அனுபவம் ஏற்படவில்லை. மேக மூட்டம் மலைத்தொடர்களை மறைத்திருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். மனாலி சென்று சேர மாலை ஆறறை மணி ஆகி விட்டது.

மனாலி பற்றி…

இந்து புராண கதைகளின் படி மனுவின் வீடே( Manu - Alaya ) மனாலி. வரலாற்றில் பெரும் வெள்ளம் அல்லது ஊழி வெள்ளத்தின் போது( great deluge or flood) மக்களையும் மற்ற உயிரினங்களையும் தன்னுடைய பெரிய படகு போன்ற ஒன்றில் காப்பாற்றி மனு கரையேரிய இடம்தான் மனாலி ( இதே போன்ற புராணக் கதைகள் உலகின் எல்லா முக்கியமான நாகரிகத்திலும் இருப்பதால் அப்படி ஒரு நிகழ்வு வரலாற்றில் உண்மையில் நிகழ்திருக்க வாய்ப்புள்ளதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். Netflix ல் இதைப்பற்றி ஒரு தொடர் உள்ளது).

மனாலி , குலு இரண்டும் குலு பள்ளத்தாக்கில் ( Kullu Valley) அமைந்துள்ளது. பியாஸ் ( beas ) நதிக்கரையில் அமைந்துள்ள மனாலி பழங்காலத்தில் வணிகத்திற்க்காக திபெத் செல்லும் பாதையில் சிறிய கிராமமாக இருந்துள்ளது. மனாலி கடல் மட்டத்திலிருந்து 2050 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதற்க்கு வடக்கில் பிர் பாஞ்சல்( pir panjal) இமய மலைத்தொடரும் தெற்க்கில் தெளலாதர் (Dhauladhar) மலைத்தொடரும் உள்ளது.



பேருந்தை விட்டு இறங்கியதும் வாடகைக் கார் ஓட்டுனர்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். ஒருவனிடம் நான் முன்பதிவு செய்திருந்த தங்குமிடத்தின் விலாசத்தை சொல்லி வண்டியில் ஏறிக்கொண்டேன். அவன் மெதுவாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். எங்கிருந்து வருகிறேன். என்ன திட்டம். சுற்றி பார்க்க வாடகைக் கார் வேண்டுமா? என்று. நான் beaus kund trek பற்றி சொன்னவுடன் அது பனியால் மூடி உள்ளதாகவும் பனி உருகி பாதை சரியாக இன்னும் பத்து பதினைந்து நாட்கள் ஆகும் என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தான். நான் சென்னையிலிருந்தே ஒரு trek guide உடன் பேசி வைத்திருந்தேன். அவன் இந்த மாதிரி பிரச்சனைகள் எதுவும் சொல்லவில்லை. ஒரு வேளை அந்த டாக்ஸி ஓட்டுனர் என்னை வேறு இடத்திற்க்கு தன்னுடைய டாக்ஸியில் அழைத்துச் செல்ல பொய் சொல்கிறானோ என்ற ஐயம் எழுந்தது. உடனே Trek guide ஐ போனில் அழைத்து பனி மூடிய பாதை பற்றி விசாரித்தேன். அவன் அது உண்மைதான் எனவும் இருந்தாலும் மலை ஏற முடியும் என்றும் தெரிவித்தான். குழப்பமாக இருந்தது. பனிமூடிய வழியில் மலை ஏறுவது உயிருக்கு ஆபத்து - சறிக்கிவிடும் -என்று டாக்ஸி ஓட்டுனர் சொன்னான். சிக்கலிலிருந்து காப்பாற்றிய அவனுக்கு ஒரு நன்றியை தெரிவித்துவிட்டு அந்த trek திட்டத்தை ரத்து செய்தேன்.
புதிதாக இன்னொரு பிரச்சனை முளைத்தது. முன் பதிவு செய்திருந்த தங்குமிடம் எனக்குப் பிடிக்கவில்லை. நகரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்தது. அறைகள் உபயோகிக்கப்படாமல் இருந்தால் வரும் பூஞ்சை மணத்துடன் இருந்தன. வேறு இடம் - மால் ரோடிற்க்கு( அதுதான் மனாலியின் மையப்பகுதி) அருகில் தேட ஆரம்பித்தோம். ஒரு மணி நேரம் அலைந்து, நாலைந்து இடம் ஏறி இறங்கி, முடிவில் ஒரு சுமாரான இடத்தில் தஞ்சம் புகுந்தேன். கூகுளில் தேடி Biker Point என்ற இடத்தில் வாடகை மோட்டர் சைக்கிளை முன்பதிவு செய்தேன்.

இருக்கும் குழப்பத்தை எல்லாம் தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு மால் ரோடில் உலவச் சென்றேன்.சுகமான குளிர். சூடான சுவையான உணவு பறிமாறும் பல வீதிக் கடைகள் மற்றும் உணவகங்கள். சென்னை உணவகங்களின் சுவையற்ற உணவை உண்டு சலித்த எனக்கு இந்த பகுதிகளுக்கு வரும்போது பெரிய விருந்துதான். குறிப்பாக பஞ்சாபி உணவு வகைகள் சிறப்பு ( என்னைப்பொறுத்த வரை சென்னை உணவகங்களின் உணவுதான் இந்தியாவிலேயே மிக மோசம். சுவையும் இருக்காது. சாப்பிட்டால் வயிறு கெட்டுப்போவதும் உறுதி). இரவு உணவை முடித்து விட்டு இலக்கின்றி சுற்றினேன். ஏதோ பண்டிகை. கடவுள் உருவத்தை தோளில் சுமந்து ஊர்வலமாகச் சென்றனர்.
அந்த சாலை - மால் ரோட்- முழுதும் மகிழ்ச்சியான மக்கள் திரளால் நிறைந்திருந்தது.அவர்களின் சந்தோசமும் உற்ச்சாகமும் எனக்கும் தொற்றிக்கொண்டது.மனாலியில் முதன் முதலாக night club என்று ஒரு ஹோட்டலில் பேனர்
வைக்கப்பட்டிருந்தது. சுற்றி முடித்துபிட்டு பதினோரு மணி வாக்கில் அறைக்குத்திரும்பினேன். நாளை எங்கு செல்லலாம், என்ன செய்யலாம் என்பதை இனிதான் முடிவு செய்ய வேண்டும்.

பயணம் தொடரும்…