Saturday, July 18, 2026

கிரிகையூர் - ரங்கசாமி பீக் பாகம் - 3





மலையேற்றம் முடிந்து கோத்தகிரி நோக்கி வந்து கொண்டிருந்தேன். 

செங்குத்தான ஹேர்பின் வளைவுகளில் ஏறும் போது மிகக்கவனமாக மெதுவாக ஏறினேன். சவாலாகவே இருந்தது. 


தரையில் படுத்து வானத்தை பார்த்தல்!


பைக்கில் ஒரு சிறு பிரச்சனை இருந்தது. இரண்டாவது கியரிலிருந்து முதலுக்கு மாற்றும்போது நியூட்ரல் விழுந்து கொண்டிருந்தது. 

ஒரு ஏற்றமான வளைவில் ஏறும்போது

அப்படி நியூட் ரல் விழுந்து விட்டது. வண்டி முன்னே நகரவில்லை. அப்படியே நின்று பின்னுக்கு வர ஆரம்பிக்க பயத்தில் பிரேக்கை அழுத்தினேன். காலை தரையில் ஊன்ற முயலும் பொழுது சரிவு என்பதால் வண்டி வலது பக்கம் சாய்ந்தது. கிட்டத்தட்ட இரு நூறு கிலோ; வலது கை பெரு விரல் மீது மொத்தமும் அழுத்துவது போல் வலி. தாங்காமல் வண்டியை கீழே விட்டு விட்டேன். மெதுவாக சரிந்து தரையை தொட்டது. இது எல்லாமே சில வினாடிகளுக்குள் -என்னவென்று புரியும்முன் - நடந்துவிட்டது. பைக்கும் நானும் தரையில். 


இந்த பைக்கை தனியாக தூக்குவது இயலாத காரியம்.


உதவிக்கு யாராவது வருவார்களா என பார்த்துக்கொண்டிருந்தேன். 


நல்ல வேளையாக ஸ்கூட்டரில் ஒருவர் வந்தார். மோட்டார் சைக்கிளை தரையில் பார்த்ததும் பதறிவிட்டார். 


நான் ஒன்றுமில்லை என நடந்ததை விவரித்தேன். இரண்டு பேரும் சிரமப்பட்டு வண்டியை தூக்கி நிறுத்தினோம் ;சம தளத்திற்க்கு கொண்டு வந்தோம். 


அவருக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு பயணத்தை தொடர்ந்தேன். வலது கை பெருவிரலின் கீழ்பகுதி வீங்கிவிட்டது. தொடர்ந்து வலி. 


கோத்தகிரியை மூன்று மணியளவில் சென்றடைந்தேன். 


வேறு எங்காவது அறை தேடும் மன நிலையில் இல்லை. அந்த லாட்ஜ்ஜிலும் அறைகள் இல்லை. 


சாதாரண மனிதன் 


அந்த விடுதியில் மேனேஜராக வேலை செய்யும் ஒரு இளைஞன் என்னுடைய பைக் மற்றும் ரைடிங் கியர்ஸ்ஸை பாத்துவிட்டு 


" அண்ணா இதெல்லாம் வாங்க எவ்வளவு செலவாகும்?" என்றான். 


இந்த அண்ணாவில் ( கோவை அண்ணா போல் இல்லாமல்) ஏக்கமும் மரியாதையும் இருந்தது. 


"எனக்கும் இப்படி பைக்ல போனும்னு ரொம்ப நாள் ஆசை" தொடர்ந்தான். 


அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தங்குமிடத்திற்க்கு ஆலோசனை கேட்டேன். 


அவனே பக்கத்தில் ஒரு நல்ல விடுதியில் இடம் பார்த்து கொடுத்தான்! ஹரி மெஸ் என்ற ஒரு கேரள பாணி நான் வெஜ் உணவகத்தையும் அறிமுகப்படுத்தினான். 


அடுத்த நாள் மீண்டும் ஒரு மலையேற்றம் செல்லலாமா அல்லது - மசினாங்குடி வனத்தின் வழியாக பயணித்து மைசூர் செல்லலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். 


காலையில் முதல் வேலையாக  மறக்காமல் கோவையிலிருந்து சென்னை செல்ல தட்கால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். 


Premium தட்கால்


அடுத்த நாள் IRTC app ல் 9:50 மணிக்கே விவரங்களை பூர்த்தி செய்து விட்டு சரியாக 10 மணிக்கு முன்பதிவு செய்ய முயன்றேன். எதிர்பார்த்தபடியே சைட் ஹேங் ஆகிவிட்டது. 


திரும்ப ..திரும்ப...திரும்ப முயன்றேன். 


பத்து நிமிடம் ஆனது. 


ம்ஹூம்...


Tatkal premium என்று ஒன்று இருந்தது. இதில் போட்டி அதிகரிக்க கட்டணமும் அதிகரிக்கும். 3 ac யில் சற்று கூடுதல் விலையில் கிடைத்துவிட்டது. மனதிலிருந்த ஒரு பெரும் சுமை இறங்கியது.


மசினாங்குடி வழியாக மைசூர் செல்ல முடிவெடுத்து கிளம்பினேன். 


கோத்தகிரி - ஊட்டி பாதை வழக்கமான மலைப்பயணம். இதமான குளிர். ஆனால் ஊட்டியை நெருங்கும்போது போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்துவிட்டது. 

வெயிலும் உரைக்க ஆரம்பித்தது. வியர்வை. பசி. சீக்கிரம் நெரிசலிலிருந்து விடுபடவே மனம் துடித்தது. 



இத ஏம்ப்பா முதல்லயே சொல்லல?!


ஊட்டியை விட்டு சற்று வெளியே வந்ததும் ஒரு இடத்தில் தலச்சேரி உணவகம் கண்ணில் பட்டது. சரியான இடம் பார்த்து வண்டியை நிறுத்தினேன். 


மோட்டார் சைக்கிள் பயணம் செல்லும்போது வண்டியை நிறுத்துவது என்பது ஒரு நிமிட வேலை அல்ல. 


முதலில் கையுறைகளை மெதுவாகக் கழற்றி முன்பையில் வைத்தேன். பிறகு மூக்குக் கண்ணாடியைக் கழற்றி பாதுகாப்பாக பைக்கின் மீது வைத்தேன்.அடுத்து ஹெல்மெட்டை கழற்றினேன்.அதை லாக் செய்தேன்.பிறகு முதுகுப்பையை தளர்த்தி கீழே வைத்துவிட்டு ரைடிங் ஜாக்கெட்டை கழற்றினேன்.


குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்கள் ஆனது. இதையெல்லாம் சிலர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அதில் ஹோட்டல் சீருடை அணிந்திருந்த ஒருவனும் இருந்தான்.


முதுகுப்பையை எடுத்துக்கொண்டு உணவகத்துக்கு செல்ல படியேறியபோது அந்த சீருடை அணிந்த இளைஞன் மெதுவாக அருகில் வந்து எந்த உணர்ச்சியும் இல்லாமல் 


"Hotel closed, sir… cleaning time.” என்றான்.


அவனுக்கு தமிழ் தெரியவில்லையா, இல்லை எனக்கு தமிழ் தெரியாது என நினைத்தானா என்று தெரியவில்லை.


ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை.நான் பைக்கை நிறுத்தி, கையுறை, ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் என்று ஒவ்வொன்றாகக் கழற்றிக்கொண்டிருந்த அந்த ஐந்து நிமிடமும் அவன் அங்கேயேதான் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஏன் சொல்லவில்லை?


அவனை நன்றாக முறைத்துவிட்டு

வேறு வழியின்றி காலை உணவாக பக்கத்திலிருந்த பெட்டி கடையில் பிஸ்கட் , கடலை மிட்டாய் வாங்கி தின்று தண்ணீர் குடித்து பசியாறினேன். 


நான்-வெஜ் சாப்பிட நினைத்தவனை பிஸ்கட் சாப்பிட வைத்த அந்த உணவகத்தை மீண்டும் ஒருமுறை முறைத்துவிட்டு கிளம்பினேன். 


ஊட்டியிலிருந்து மைசூர் செல்ல இரண்டு பாதைகள். ஒன்று 36 ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சிகூர்- கல்லட்டி மலைப்பாதை. இதில் கீழிறங்கும்போது செங்குத்தான பாதையில் ப்ரேக் பெயிலாகி விபத்துகள் நிகழ்வதால் - அதில் செல்ல உள்ளூர் (TN 43) வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. 


இன்னொரு பாதை - கூடலூர் வழி. இது சுற்று வழி. பாதுகாப்பானது. 

ஆனால் இந்த வழியில் சுற்றுலா வாகனங்களின் நெரிசல் அதிகம். பயணத்தை ரசிக்க முடியவில்லை. 


பைக் திருடனா நான்? 


கூடலூர் தாண்டியதும் வனத்துறை சோதனைச்சாவடி வந்தது. பாதுகாக்கப்பட்ட முதுமலை - பந்திப்பூர் புலிகள் சரணாலயம் ஆரம்பம். 


இங்கு வாகனம் சம்மந்தப்பட்ட பத்திரங்கள், ட் ரைவிங் லைசன்ஸ்ஸை பரிசோதிப்பார்கள். 


அதனால் முன் தினமே வண்டிக்கான பேப்பர்ஸ் உள்ளதா என தேடினேன். வழக்கமாக வாடகை வண்டிகளில் பைக் பின்சீட்டின் அடியில் வைத்திருப்பார்கள்.


அவை இல்லை. 


பிஷோரிடம் கேட்டபோது - அப்படி வைத்ததால்தான் யாரோ பைக்கை திருடிக்கொண்டு போய்விடார்கள். அதனால் இப்போதெல்லாம் அந்த தவறை செய்வதில்லை...


" யாராவது பரிசோதித்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்" என்றான்!!


பைக் பெப்பர்ஸ் இல்லை.


Driving License இல்லை.


பிடிபட்டால் போலிஸ்காரன் என்ன நினைப்பான்? 


கவலையோடுதான் சோதனை சாவடியை நெருங்கினேன். 

என் நல்ல நேரம் - யாரும் என்னை நிறுத்தவில்லை. பெரிய நாடகம் தவிர்க்கப்பட்டது. 


முதுமலை - பந்திப்பூர் சாலைப் பயணம்


சோதனைச்சாவடியை தாண்டியதும் முதுமலை - பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தின் அமைதி ஆரம்பித்தது. 


பராமரிக்கப்பட்ட வனப்பகுதி என்பதற்க்கான அறிகுறிகள் ஏராளம் தென்பட்டன.

பாதையின் இருபுறமுன் சீரான இடைவளியில் தேக்கு மரங்கள். ஆங்காங்கே செயற்க்கையாக உருவாக்கப்பட்ட நீர் நிலைகள் இருந்தன. 


பயணிகளுக்கு இந்த வனப்பகுதியில் சில கட்டுப்பாடுகள் உண்டு. 


ஹார்ன் அடிக்கக் கூடாது. வண்டியை நிறுத்தக் கூடாது. வேகமாகச் செல்லக் கூடாது.


மழை பெய்து சில நாட்கள்தான் ஆகியிருந்தது. சாலையின் இருபுறமும் துடைத்து வைத்ததுபோல தூய்மையான பச்சை நிறம். இடையிடையே தேக்கு மரங்கள். அவற்றைப் பார்த்தபோது இயற்கையாக வளர்ந்த காடு போலத் தோன்றவில்லை. பிறகு இணையத்தில் தேடியபோதுதான் தெரிந்தது. பிரிட்டிஷார் கப்பல் கட்டவும், ரயில்வே கோச்கள் தயாரிக்கவும் பழைய காட்டை அழித்து இந்த தேக்கு மரங்களை பெருமளவில் நட்டிருந்தார்கள் என்று. 


ஒவ்வொரு சில நூறு மீட்டருக்கும் வேகத்தடை. அதனால் வேகமாக ஓட்ட முடியவில்லை. ஆனால் அதுவே அந்தக் காட்டை மெதுவாக ரசிக்க வைத்தது.


மரங்களின் இடைவெளியில் திடீரென்று ஒரு புள்ளிமான். இன்னும் கொஞ்சம் சென்றால் மூன்று நான்கு. சில இடங்களில் முழுக் கூட்டமே. பயணிகளை கவனிக்காதது போல அமைதியாக புல் மேய்ந்துகொண்டிருந்தன. மனிதர்களுக்கும் வாகனங்களுக்கும் பழகிவிட்டனவோ? 


ஒரு வளைவைத் தாண்டியதும் சாலையோரத்தில் ஒரு ஒற்றை யானை. காதுகளை மெதுவாக அசைத்தபடி அசையாமல் நின்றிருந்தது. அதன் அருகே செல்லும்போதுதான் அதன் உண்மையான பிரமாண்டம் புரிந்தது. வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த சிலரை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தது. 


ஒற்றை யானை ஆபத்து. எப்பொழுது துரத்தும் என்றே தெரியாது. 

நான் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினேன். 


சற்று தூரத்தில் ஒரு யானைக் கூட்டம்- குடும்பம். வழக்கம்போல சிலர் வண்டியை நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். 


பத்து வருடங்களுக்கு முன்னால் இந்தச்சாலையில் பயணித்தது நினைவுக்கு வந்தது. அப்போது இந்த வனம் இவ்வளவு நேர்த்தியாக பாதுகாக்கப்படவில்லை. விலங்குகளைப்பார்ப்பதே அரிது. இப்பொழுது கணிசமாக அதிகரித்திருக்கிறது குறிப்பாக யானைகளின் என்ணிக்கை. 


இந்தச் சாலையில் ஒரு விசித்திரமான முரண்பாடு இருந்தது. ஒருபுறம் காடு. மறுபுறம் சுற்றுலா. சில சுற்றுலா வாகனங்கள் ஹார்னை அடித்தபடியும், கரும்புகையை கக்கியபடியும் சென்றன. அந்தச் சத்தம் காட்டுக்குப் பொருந்தாத ஒன்றாகத் தோன்றியது.


சுமார் ஒரு மணி நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்தேன்.


திறந்த சமவெளிக்கு வந்ததும் கட்டுப்பாட்டிருந்து வெளிவந்த ஒரு சுதந்திர உணர்ச்சி ஏற்பட்டது. 


பத்தே நிமிடத்தில் சுவையான உணவு!



மணி நான்கை நெருங்கியது. காலையிலிருந்து இன்னும் சாப்பிடவில்லை. பந்திப்பூரை தாண்டியதும் "உடுபி சத்க்கார் - பத்து நிமிடத்தில்" என்ற விளம்பர பலகை தெரிந்தது. அதில் தெரிந்த சுவையான உணவு வகைகளைப் பார்த்ததும் பசி இரண்டு மடங்கானது. ஆர்வத்துடன் வேகத்தைக் கூட்டினேன். 

பத்து நிமிடங்கள் ஆனது. 


ம்ஹீம்...


உணவகம் கண்ணில்படவில்லை. 


அதன்பிறகு இன்னும் ஒரு பத்து நிமிடம் கழித்து " உடுப்பி சத்கார் - ஐந்து நிமிடத்தில்"

என்ற பலகை தெரிந்தது!


ஆஹா! நமக்கு காலையிலிருந்து இன்றைக்கு சாப்பாட்டு ராசி இல்லை என நினைத்துக்கொண்டேன். தூரத்தை சொல்லாமல் அதை நிமிடத்தில் சொல்லி ஏமாற்றுகிறார்களே? - என்ன ஒரு விளம்பர உத்தி! 


நடுவில் சில உணவங்கள் தென்பட்டன. ஆனால் நான் அந்த விளம்பரத்தில் பார்த்த உணவால் மயக்கப்பட்டு அங்குதான் செல்வேன் என பிடிவாதமாக சென்று கொண்டிருந்தேன். 


அடுத்து 15 நிமிடத்தில் குடல்பேட் என்ற ஊர் வந்தது. ஊரை தாண்டியதும் இடது புறத்தில் நான் தேடிய உணவகம் - " உடுப்பி சத்க்கார்"!


நான்கு மணியானதால் மீல்ஸ் முடியும் தருவாய். அதிர்ஷ்டவசமாக கடைசி மீல்ஸ் எனக்குக் கிடைத்தது. நல்ல சுவையான உணவு. 


மாலைப் பயணம் 


இதமான வெயில். உண்ட மயக்கம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நேர் கோட்டில் பாதை. இரு புறமும் வாழைத்தோட்டங்கள். பாக்குமரங்கள். நல்ல வளமான பகுதி.

குடல்பேட் கர் நாடகாவின் பூத்தொட்டி - பூத்தோட்டங்களுக்கு பேர் போன பகுதி. நான் பயணித்தது மே மாதம் என்பதால் அவைகளைப் பார்க்க முடியவில்லை. 


மைசூர் விடுதி 


மாலை ஆறு மணிக்கு தங்கும் விடுதியை சென்றடைந்தேன். பைக்கை ஏதோ தீண்டத்தகாத வாகனம் போல ஒரு குறுகலான சந்தில் பார்க் செய்யச் சொன்னார்கள். கோபத்தை மறைத்துக்கொண்டு கார் பார்க்கிங்கில் ஓரமாக நிறுத்திக்கொள்ள அனுமதி வாங்கினேன். 





அடுத்த நாள் காலை கிளம்பி கோவை செல்ல வேண்டும். வேறு எதுவும் வேலை இல்லை. மைசூர் ஏற்கனவே பார்த்த ஊர்தான். 


பச்சை பெயிண்ட் தூறல்


காலை வண்டியை எடுக்க வந்த எனக்கு அதிர்ச்சி. பச்சை பெயிண்ட் தூறலில் நனைந்த மாதிரி - பைக்கின் மேல் சின்ன சின்ன இளம் பச்சைத் துளிகள். எப்படி வந்தது என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது முதல் மாடி பால்கனி இரும்பு கம்பிகளுக்கு புதிதாக பச்சை பெயிண்ட் அடித்திருந்தார்கள். இலவச இணைப்பாக என் பைக்கிற்க்கும். என் சொந்த வண்டியாக இருந்திருந்தால் ..."சரி புது டிஸைன் நல்லா இருக்கே"

என கண்டுகொள்ளாமல் சென்றிருப்பேன். 


வாடகை வண்டி. ஓனர் பிஷோர் வேறு கண்டிப்பான ஆள். 


பெயிண்ட்டரை பிடித்து தின்னரை(thinner) வைத்து துடைக்கச் செய்து பச்சை துளிகளை நீக்கினேன். 


வித்தியாசமான பைக்கர் 


மைசூர் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த மாதிரியே இருந்தது. அகலமான சாலைகள். நிழல் தரும் மரங்கள். குறைந்த போக்குவரத்து ( ஞாயிறு என்பதாலோ?). 


சிக்னலில் நின்றபோது பக்கத்தில் ஒரு வயதானவர் ; ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணியாமல். அவர் அவருக்கு இடது பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஸ்கூல்

படிக்கும் ஒரு பையனுக்கும் பெண்ணுக்கும் " அறிவுரை "

சொல்லிக்கொண்டிருந்தார். இடது புறம் செல்லும் வண்டிகளுக்கு இடம் விட்டு நிற்க்க வேண்டும் - இல்லையெனில் இடித்து விடுவார்கள் ...என்று. 


அடுத்து வலது பக்கம் திரும்பி என்னைப்பார்த்ததும் ஏதோ கேட்டார். 

புரியவில்லை. அனேகமாக கன்னடத்தில். பின்பு அவரே இந்தியில் கேட்டார் 


"காடிகி கீமத் கித்னா" (வண்டியின் விலை என்ன?) 


"four lakhs" 


" ஓ" அவ்வளவா என்பது போல புருவத்தை உயர்த்தினார்.


சிறிது யோசித்துவிட்டு...


"ஆப்னே மெக்ஸிமம் கித்னி ஸ்பீட் பர் சலாயா ஹை?" ( அதிகபட்சமாக எவ்வளவு வேகம் சென்றீர்கள்?)


"110 " ( என் முந்தைய Himalayan 450 பயணத்தின் போது நான் சென்ற வேகம்.  80 என்று சொன்னால் கரடி காரி துப்பிய மாதிரி ஏதாவது சொல்லிவிடுவாரோ என்ற பயம்) 


பச்சை சிக்னல் விழுந்ததும் பெரிய வாகனங்களின் மத்தியில் பயந்தவேறே ஸ்கூட்டியை தடுமாற்றத்துடன் கிளப்பி சென்றார். 


ஒரு பைக்கர் கனவு அவருக்குள்ளும் இருந்திருக்க வேண்டும். 


"ஆப்னே இத்னா ஜோர்ஸே தபாதியா... இஸ்லியே நீச்சேஸே ஆகையா"


மைசூரின் புற நகர் பகுதி. கை வலிக்கு Diclofenac Gel வாங்கலாம் என ஒரு மெடிக்கல் ஷாப்பை பார்த்து நிறுத்தின்னேன். அவர் தந்த brand மைசூரிலேயே தயாரிக்கப்பட்டது. நம்பிக்கை இல்லாமல் வேறு கேட்டேன். அவர் அந்த கம்பனியின் அருமை பெருமைகளை சொல்ல ஆரம்பித்ததும் சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டேன். 


பைக்கை கிளப்பும் முன் தடவிக் கொள்ளலாம் என அதன் மூடியை திறந்து அமுக்கினேன். ஒன்றுமே வெளியே வரவில்லை. புரியாமல் நன்றாக அழுத்தினேன். 

காலின் மேல் ஏதோ விழுந்த மாதிரி இருந்தது. குனிந்து பார்த்தால் வெள்ளையாக ஏதோ. அந்த cream தான் அது. கடைக்காரர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மன்னிப்பு கேட்டுவிட்டு வேறு தருவார் என எண்ணினேன். 


ஆனால் அவர் அனைத்து வெண்பற்களும் நன்றாக தெரியுமாறு சிரித்துக்கொண்டே 


" ஆப்னே இத்னா ஜோர்ஸே தபாதியா... இஸ்லியே நீச்சேஸே ஆகையா" 

(நீங்கள் அதிகமான விசையுடன் அழுத்தியதால் கீழிருந்து மருந்து வந்துவிட்டது) என்றார்.


இதற்க்கு பதிலலிக்கும் திறன் இல்லாத காரணத்தால் - பின் பக்கம் வந்த மருந்தை எடுத்து தடவிக்கொண்டு - அமைதியாக வண்டியை கிளப்பினேன். 


( பயணம் தொடரும்....)