Sunday, February 14, 2021

Love at third or fourth sight !

 




ஞாயிற்று கிழமைகளில் ஓட்ட பயிற்ச்சிக்காக பெசண்ட் நகர் செல்வது வழக்கம்.
துரைப்பாக்கத்திலிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள அங்கு செல்வதற்க்கு பல காரணங்கள். சென்னையிலேயே பசுமையான மரங்கள் அடர்ந்த பகுதி. அங்கிருந்து மெரினா வரை செல்லும் பாதை கடற்கரைக்கு அருகில் இருப்பதால் கடல் காற்றுடன் புத்துணர்ச்சியாக இருக்கும். இந்த பாதையில் ஓடுவதற்க்கு துணைக்கு நிறைய நபர்கள் இருப்பதால் உற்சாக மாகவும் இருக்கும். இருந்தாலும் இதையெல்லாம் விட முக்கியமான காரணம் - “அங்கு ஓடினால் நாய்கள் துரத்த வாய்ப்பு குறைவு” - என்பதே. நிறைய பேர் ஓடுவதை பார்த்து நாய்களுக்கு பழகி இருக்கும் - துரத்தாது ,கடிக்காது என ஒரு நம்பிக்கை. விடியற்க்காலை ஐந்து மணிக்கு ஆட்கள் அரவமற்ற - நாய்கள் நிறைந்த - வீதிகளில் ஓட ஒரு தனி தைரியம் வேண்டும். நம் ஊர்களில் ஒவ்வொரு தெருக்களிலும் குறைந்த பட்சம் பத்து பதினைந்து நாய்களாவது உள்ளன.
எங்கள் அடுக்கு மாடி குடியிருப்புக்கு எதிரில் எப்பொழுதும் ஐந்து நாய்களாவது ரோந்து பணியில் இருக்கும். மவனே ஒரு நாள் எங்கிட்ட மாட்டாமயா போய்டுவே என்று அவை நம்மை பார்த்து குரோதத்துடன் சொல்வதாக தோன்றும்.




நாய்கள் என்றாலே ஒரு அச்சம். சிறு வயதில் உறவினர் ஒருவரின் நாய் துரத்தியது மனதில் வடுவாக நிலைத்து விட்டது. சில வருடங்களுக்கு முன் நடந்த இன்னொரு நிகழ்ச்சி அதற்க்கு மேலும் வலு சேர்த்து விட்டது. வார நாட்களில் எங்கள் குடியிருப்புக்குள்ளேயே ஓடுவது வழக்கம். அப்படி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள், புலி அளவுக்கு உயரமும் ஆக்ரோஷமும் உள்ள ஒரு கருப்பு நாய் அதன் உரிமையாளரின் கையிலிருந்து கயிரை விடுவித்துகொண்டு என் மீது பாய்ந்து விட்டது. மில்லி மீட்டர் இடை வெளியில் அதன் கூர்மையான கோரை பற்கள் மின்னியது இன்றும் மனதை நடுக்குகிறது. மயிரிழையில் தப்பினேன்.

“ஓடும் நாயை பாத்தால் துரத்தும் நாய்க்கு சந்தோசஷம்னு” சொல்வது உண்மைதான்.
நாய் துரத்தும் போது ஓடக் கூடாது. எதிர்த்து நின்று அதை நாம் கடிக்க போவது போல - குறைந்த பட்சம் நடிக்கவாவது வேண்டும்.

நான் தான் இப்படி என்றால் பிராஞ்சலி இதற்க்கு ஒரு படி மேல். அவளுக்கு நாய்களை மட்டுமின்றி அதை வளப்பவர்களையும் சுத்தமாக பிடிக்காது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வளர்ப்பு பிராணிகளை அனுமதிக்க கூடாது. அடுத்தவர்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறார்கள் - என கன்னா பின்னாவென்று திட்டுவாள். ஒன்றரை வயது மகளும் விளையாடும் போது பார்க்கில் யாராவது நாய்களுடன் வந்தால் பயந்து ஓடி வந்து நம்மிடம் தஞ்சமடைவாள். இப்படி குடும்பமே காட்டு மிராண்டியாக - வாயில்லா ஜீவன்களிடத்தில் பகைமை பாராட்டுவது மனதை வருத்தவே செய்கிறது.

அவைகள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணம் சில வருடங்களாகவே மனதின் ஓரத்தில் துளிர்விட தொடங்கி விட்டது. வாய் பேசமுடியாத ஒரு மனிதனுக்கும் நாய்க்குமான அன்பை சொல்லும் துர்கனேவ்வின் முமு( mumu) கதையை படித்து கண்ணீர் விட்டு அழுதது அந்த எண்ணத்தை மேலும் வளர்த்து விட்டது. மேலும் வளர்ப்பு பிராணிகளைப் பற்றி சாரு, ஜெயமோகன் போன்றோர்களின் பதிவும் மனதை மெல்ல மாற்றத் தொடங்கியது.

இவையெல்லாம் இப்படி இருக்கும் போது
சில வாரங்களாகவே - ஒரு அதிசயம் - ஒவ்வொரு ஞாயிறன்றும் நிகழ்கிறது. இன்றைக்குத்தான் எனக்கு உரைத்தது.

காலை ஐந்து மணிக்கு வழக்கம் போல ராஜாஜி பவனுக்கு அருகிலுள்ள ஒரு மரத்தடியில் காரை நிறுத்திவிட்டு ஓட்டத்தை ஆரம்பிக்கும் போது, ஒரு நாய், நூறு மீட்டர் தூரத்திலிருந்து மெதுவாக ஓடி வந்து வாலை ஆட்டிக்கொண்டு என்னை சுற்றியது. ஓடினால் துரத்துமோ என பயந்து சிறு கல்லை எடுத்து விரட்டினேன். பயந்து சிறிது தூரம் விலகி மீண்டும் என்னருகில் வந்து பாசத்துடன் வாலை ஆட்டியது. அப்பொழுதான் இதே போன்று தொடர்ந்து சில வாரங்களாக நடப்பது நினைவுக்கு வந்தது. அதே நாய். வெளிறிய பழுப்பும் வெள்ளையும் சேர்ந்த நிறம்.
ஓடும் போது சிறிது இடைவெளி விட்டு பாது காவலன் போல சில கிலோ மீட்டர்கள் வரை தொடரும். அதற்க்கப்புறம் காணாமல் போய்விடும். காட்டு விலங்குகளுக்கு இருப்பது போல நாய்களுக்கும் எல்லைகள் உண்டா என தெரியவில்லை. மெதுவாக ஓட ஆரம்பித்தேன். அது வழக்கம் போல இடைவெளி விட்டு தொடந்தது. மனதுக்குள் சிறு கலக்கம் இருந்தாலும் இரக்க உணர்வே மேலிட்டது. சிறிது தூரம் சென்றவுடன் வழக்கம் போல காணாமல் போனது. ஓட்டப் பயிற்ச்சி முழுவதும் அதன் நினைவு திரும்ப திரும்ப வந்தது. எத்தனையோ பேர் அந்த பாதையில் ஓடும்போது என்னை மட்டும் தேடி வந்து வாலாட்டியது. பின் தொடந்து வருகிறது. மனது நெகிழ்ந்தது. போன ஜன்மத்து விட்ட குறை தொட்ட குறையோ என்னவோ.
ஓட்டத்தை முடித்து விட்டு காரை நெருங்கும் போது மீண்டும் அருகிலிருந்து வாலாட்டிக் கொண்டு ஓடி வந்தது. அதன் கண்களில் கருணை, அன்பு மிளிர்ந்தது. அது சொல்ல வந்தது புரிந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அதன் கண்களை அன்புடன் நோக்கினேன். என்னுடைய செய்கைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடை பெற்றேன். அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கும் போது ஏதாவது வாங்கி செல்ல வேண்டும். ஏதாவது யோசனை சொல்லுங்கள்.

Mind you- today is feb 14 th !



Wednesday, July 22, 2020

வாசிப்பு சவால்


சரியாக இரண்டு மாதங்கள் - அதாவது எட்டு வாரங்கள் - ஆகிவிட்டது. இப்படி ஒரு சவாலை எனக்கு நானே போட்டுக்கொண்டு. இது வழக்கமான impulsive( இதற்க்கு சரியான தமிழ் வார்த்தை என்ன?) முடிவு அன்று. நீண்ட காலமாக- சரியாக சொல்ல வேண்டுமானால் சுமார் முப்பது ஆண்டுகளாக - விட்டுப்போன ஒன்றை மீட்டெடுப்பதற்க்கான முயற்ச்சி.




இந்த புத்தகம் படிக்கும் வழக்கம் எப்படி ஆரம்பித்தது என யோசிக்கும் போது தெளிவில்லாமல் - மங்கலாக நினைவிற்க்கு  வருவது:

இந்த ஆர்வம் முதலில் எல்லாரையும் போல காமிக்ஸ் படிப்பதில்தான் ஆரம்பித்தது. பிறகு பி டி சாமியின் பேய் கதைகள் மற்றும் ஏழு கடல் , ஏழு மலை தாண்டும் இளவரசி, இளவரசன் சாகசக் கதைகள். அப்புறம் அம்மா எங்கள் ஊர் கிளை நூலகத்திலிருந்து எங்களை எடுத்து வர சொல்லி படிக்கும் வாஸந்தி, சிவசங்கரி, இந்துமதி , லக்‌ஷ்மி போன்ற பெண் எழுத்தாளர்களின் அறிமுகம். இந்துமதியின் தரை இறங்கும் விமானங்கள் மற்றும் சக்தி என்ற புரட்சிகரமான பெண்ணிய பாத்திர படைப்பும் இதை எழுதும்போது நினைவுக்கு வருகிறது.பின்பு நண்பர்கள் படிக்கும் ராஜேஷ்குமாரின் பாக்கெட் நாவல்கள் மீது பைத்தியமாக சில வருடங்கள். அடுத்து பருவ வயதின் தூண்டலால் ரகசியமாக ராஜேந்திர குமார், புஷ்பாதங்கதுரை மற்றும் பாலகுமாரன் போன்றவர்களின் எழுத்து.பின்னர் எப்படி என்று தெரியாமலேயே ஆதவன், அசோகமித்திரன், தி ஜானகிராமன், லா சா ரா என தீவிர இலக்கியம் மீது ஆர்வம் ஏற்பட்டு வாசிப்பு முதிர்ச்சி அடைந்தது. பத்தாம் வகுப்பிற்குள் படித்த புத்தகங்களை நினைத்தால் இன்றும் ஆச்சரியமாக உள்ளது. அந்த ஐந்து ஆண்களில் படித்ததைவிட அதற்க்கப்புறம் முப்பது ஆண்டுகளில் படித்தது குறைவோ என்ற ஐயம் ஏற்படுகிறது. மருத்துவ படிப்பில் நுழைந்த பின் அதை சரியாக தொடர முடியவில்லை. எவ்வளவோ முயன்றும். அது ஒரு குற்ற உணர்ச்சியாகவே மனதின் மூலையில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தது. வெளியில் சொல்லாமல் பல முறை இதைப்போன்ற சவால்களை எனக்கு நானே இட்டுக் கொண்டும் பயனில்லை. இதுதான் இரண்டு மாதத்திற்க்கு முன் ஒரு நாள் சட்டென்று நடு ஜாமத்தில் அப்படி ஒரு வாட்ஸ் அப் பதிவிட்டதற்க்கான பிண்ணனி.

இந்த இரண்டு மாதத்தில் படித்தவை.
India after Gandhi, Heat and dust,கரம்சோவ் சகோதரர்கள்- 2nd volume,Papillon, Motorcycle diaries- Che, விசாரணை - காப்கா ,நண்பனின் தந்தை - அசோகமித்ரன். My name is Red ஐ படித்துக் கொண்டிருக்கிறேன்.

இரண்டு மாதமாக வாசிப்பில் ஏற்பட்ட முன்னேற்றத்தில் மிகவும் திருப்த்திகரமாக உணர்கிறேன். தினமும் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் படிக்கிறேன். தமிழ் நாவல்களை மிக வேகமாக படிக்க முடிகிறது. சராசரியாக ஒரு நிமிடம் ஒரு பக்கத்திற்க்கு. ஆங்கில புத்தகங்களுக்கு இது இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வரை ஆகிறது. ஆரம்பத்தில் புரியாத வார்த்தைகள் அனைத்திற்க்கும் அர்த்தம் தேடியதில் நேரம் விரயமானது. இப்போது கதையோட்டத்தின் முக்கியமான வார்த்தையில் சந்தேகம் இருந்தால் மட்டுமே அகராதியை நாடுகிறேன்.பொதுவான நம்பிக்கைக்கு எதிராக, மெதுவாக படிப்பதை விட வேகமாக படிக்கும் பொழுதே மனது சிதறாமல் ஒரு முகத்துடன் கதையை சரியாக உள் வாங்கிக் கொள்ள முடிகிறது.

“நண்பனின் தந்தை”யில் ஒரு கதையை - பப்பாய் 1944- படித்துவிட்டு மனது இரண்டு நாட்களாக நிலையில்லாமல் தவித்தது. அப்பொழுதுதான் இந்த யோசனை தோன்றியது. நாம் ஏன் ஒரு மாதம் முழுவதும் ஒரு எழுத்தாளரின் ஆக்கங்களை மட்டுமே படிக்கக் கூடாது. தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரின் அனைத்து எழுத்தையும் ஒரு மாதத்திற்க்குள் முழுவதுமாக படித்துவிட இயலும். படித்தபின் அவர்களைப் பற்றி எழுதவும் ஆசை. பார்ப்போம்.
ஆகஸ்ட் மாதம் முதல் எனக்கு மிக பிடித்த அசோகமித்திரனிலிருந்து ஆரம்பிக்கலாம் என எண்ணம்.

இந்த மாதிரி ஆராய்ச்சி - ஆர்வம் பாடப்புத்தகங்களை படிக்கும் போகு ஏன் தோன்றவில்லை?


22 ஜூலை 2020,
சென்னை. 











Monday, June 15, 2020

ஆண்களின் WA பரிதாபங்கள்!



முரளிக்கு நன்றி. இப்படி ஒரு தலைப்பை கொடுத்து கற்பனையை தூண்டியதற்க்காக.

மேலோட்டமாக பார்த்தால் பெண்களுக்குத்தானே பாதிப்பு அதிகம் என்று தோன்றும். நிச்சயம் இந்த பதிவை படித்தபின்பு உங்கள் முடிவில் மாற்றம் இருக்கும்😜😀.






மன்மத பஞ்சுவை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு நேர்ந்த கண்ணீர் கதையை கேளுங்கள், முதலில்.

பெயருக்கு ஏற்ற மாதிரி அவருக்கு பல நண்பிகள்
( அல்லது அதனால்தான் அவருக்கு அப்படி ஒரு பெயரே வைக்கப் பட்டதோ!). அவர்களுடன் விடிய விடிய ... (நீங்க நினைப்பது மாதிரி தவறாக ஒன்றுமில்ல - dirty mind )...WA, FB என்று குறுஞ்செய்தி பறிமாரிக்கொள்வார்கள். அப்படி ஒரு நாள் இரவு முழுதும் கண் முழித்து பின் காலையில் உறக்கம் விழித்தார் நம் பஞ்சு. வழக்கம் போல முதல் வேலையாக தன் கைப்பேசியில் உள்ள குறுஞ்செய்திகளை ஆராய்ந்தார். 
அவரின் special gf இடமிருந்து ஒரு குறுஞ்செய்தி.

“Hi Darling, என்னோட புது DP எப்படியிருக்கு” என்று.

அண்ணன் சளைத்தவரா?

சினிமா போஸ்டர்களை பார்த்தே reviews எழுதும் வல்லமை படைத்தவராயிற்றே.

“Super .... சூப்பரோ சூப்பர் 👌🏽👌🏽👌🏽👌🏽”

என்று dp யை பார்க்காமலேயே அடித்து விட்டார்.

நம்மைப்போல அவரின் gfக்கும் அவரைப்பற்றி தெரிந்திருந்ததால்

“ 😡😡😡 என்னோட புது புடவை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ”

என்று சிணுங்கினார்.

அடச்சே இது என்ன பிரச்சனை என்று முதல் முறையாக dp யை பார்த்து அவசர அவசரமாக

“ sivappu selLai nallaaga irjukkudhu” ( இதை தமிழ் மொழி பெயர்பாளர் இல்லாமலேயே சரியாக புரிந்துகொண்டிருந்தால் நீங்கள் அவரின் ஜிக்ரி தோஸ்த் என்ற தகுதியை அடைந்து விட்டீர்கள்😜) என்று தட்டி விட்டார்.

அடுத்து அரை மணி நேரம் தொடர்ந்து special gf இடமிருந்து - lipstick, ear rings, necklace, watch , அடிச்ச perfume, கால்ல போட்டிருக்கற sandal - ( passport size photoல) என்று ஒவ்வொன்றாக துருவி துருவி கேட்டு குறுஞ்சய்திகள் அவரை அம்புகள் போல தாக்கி துளைத்தன.

பல் துலக்காமல், காலைக்கடன்களை கூட முடிக்காமல் - இந்த எதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்து பொத்தலாகிப் போனார் நம் பாவப்பட்ட பஞ்சு.

கெஞ்சி கூத்தாடி ஒரு அரை மணி நேரம் அனுமதி வாங்கி horlicks, boost எல்லாம் போட்டு குடித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் திரும்ப வந்தமர்ந்தார்.

மீண்டும்  அதே special gf இடமிருந்து மற்றும் ஒரு குறுஞ்செய்தி

“ என்னோட புது dp - ஜீன்ஸ் , டி சர்ட் ல எப்படி?” என்று.

புஸ்ஸ்... என்று பஞ்சராகி விட்டார் பஞ்சு.

அப்புறம் என்ன மன நல மருத்துவனைதான் ;கீழ்பாக்கம்தான்; Dedicated DP block ல் அனுமதிக்கப்பட்டு விட்டார்.








குரு நாதனின் கதை இப்படி என்றால் அவரின் சிஷ்யன் மட்டும் சளைத்தவரா என்ன...

அவரை DP2 ( DPXDP) எப்படி தாக்கியது என்று பாருங்கள்.

அவர் பெயர் வெப்படை சல்மான் துரை. 
வயது 27( என்று நினைப்பு ; 27 ல் எடுத்த புகைப்படமே DP யிலும்), 
திருமணமாகாதவர்( இதுவும் நினைப்பு மட்டுமே ).

நேரில் தன் முறுக்கான சல்மான் பாடியை பார்த்து பயந்து ஓடி விடுகிறார்கள் என்பதால் பார்க்காமலேயே WA ல் ஒரு பெண்ணுடன் நட்பாகிவிட்டார். அதுதான் இப்பொழுது சுலபமாயிற்றே. எண்ணிலடங்கா WA குழுக்கள். வீட்டுக்கொன்று, வீதிக்கொன்று, corona வந்தவர்களுக்கு ஒன்று, வரப்போகிறவர்களுக்கு ஒன்று - என்று. 

பெண்ணின் பெயரும் DP Deepika Padukone.


அப்புறம் என்ன - இரவு பகலாக ஒரே கொஞ்சல் , கெஞ்சல்கள்தான். வாலிப வயதின் ஏக்கத்தில் DP யின் முகத்தை DP யிலாவது பார்க்கலாமே என்று பார்த்தார் நம் சல்மான். அப்படியே அதிர்ந்துவிட்டார். அதில், ஒரே பூக்கள் படம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூக்களாக. நம்முடைய சீகே யின் IOK யில் வருவதைப் போன்று பெயர் தெரியாத பூக்கள் எல்லாமே. மனம் கவர்ந்தவளின் முகம் காண முடியாத அதிர்ச்சியில் இவருக்கும் மனது பாதித்துவிட்டது. இப்பொழுது இவரும் அதே DP block ல் - குரு நாதருக்கு துணையாக; நீ வானம், நான் பறவை , நீ பூ, நான் முள் - என்று பிதற்றிக்கொண்டு உள்ளார்.

ஆனால் அவருக்கு DP யைப் பற்றிய உண்மை தெரிந்திருந்தால் மனது மட்டுமல்ல உயிருக்கே ஆபத்து விளைந்திருக்கும். நல்ல வேளை உயிர் தப்பித்துவிட்டார்.

ஆமாம் DP பேரன் பேத்தி எடுத்த ஒரு அறுபது வயதாகிய பாட்டி!!!

அடுத்து ...

இவரின் பெயரை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். இப்போதைக்கு மிஸ்டர் எக்ஸ் என்று வைத்துக்கொள்வோம். இவர் status மற்றும் dp யில் ஒரு நாளின் பெரும் பகுதியை செலவிடுபவர். அவருக்கும் வந்ததே சோதனை. அவரின் மனைவி புது பழக்கமாக dp , status போட ஆரம்பித்து இருந்தார். அது அவருக்கு தெரியவில்லை - மனைவின் DP யை அவர் பார்ப்பதில்லை என்பதை தனியாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திருமணமாகி பத்து வருடங்களுக்கு மேலாகியும் அப்படி ஒரு கெட்ட பழக்கம் உள்ள எந்த ஆணும் இப்பூவுலகில் இல்லை என்று சமீபத்திய lancet ஆராய்ச்சியே சொல்கிறது. இத்தோடு இருந்திருந்தால் பரவாயில்லை.

ஆனால் சம்பவத்தன்று “என்னோட status , dp பார்த்தீர்களா” என்று கேட்ட மனைவியின் குறுஞ்செய்தியையும் அவர் பார்க்கவில்லை.இது கொஞ்சம் அதிகம்தானே.

அன்று ஆபீஸ் முடிந்து வீட்டிற்க்கு சென்றபோது அங்கு நிலவிய மயான அமைதி எதையோ உணர்த்தியது எக்ஸ்க்கு. உடனே பொறி தட்டியது. சட்டென்று முதலில் குறுஞ்செய்தியையும் பின்னர் dp,status களையும் பார்த்தார்.

Dp யில் அவர்கள் திருமண படம்.
Status ல்- “Celebrating Wedding Anniversary”!

அடச்சே எப்படி மறந்தேன் என்ற குற்ற உணர்ச்சியுடன் மரண தண்டனை பெற்ற கைதி போல பயத்துடன் எதிர்காலமே சூன்யமாகி திகைத்து நின்றார். சமாளிப்பதை தவிர வேறு வழி?

“சர்ப்ரைஸ் dinner ஏற்பாடு செய்து இருக்கிறேன் அன்பே - ஆபீசில் கொஞ்சம் வேலை அதிகம் அதான் பதில் தர முடியவில்லை “ என தன் பொய்யில் தனக்கே நம்பிக்கை இல்லாமல் தயங்கி தயங்கி கருணை மனு போட்டார்.

இதை கேட்டவுடன் பறக்கும் தட்டு ஒன்று அவரை குறிவைத்து தாக்கும் நோக்கத்துடன் மின்னல் வேகத்தில் வந்து மயிரிழையில் திசை மாறி பெரும் சத்தத்துடன் தரை இறங்கியது.

“ என்னோட தங்கச்சியோட dp, status எல்லாம் பாத்து லைக் பண்ணிட்டுதான் ஆபீஸில் பிஸியா இருந்தீங்களோ?” என்று அவளின் குரல் கோபம் மற்றும் வெடிக்கும் அழுகையும் கலந்து மூர்க்கத்துடன் அமைதியை கிழித்தது.

ஆஹா அவளின் தங்கைக்காரிதான் போட்டு கொடுத்திருக்கிறாள். இந்த தவறை செய்தவன் கடவுளே ஆனாலும் அவன் தன் மனைவியிடமிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்து உறைந்து போனார் மிஸ்டர் எக்ஸ்.

கருணை மனுவும் நிராகரிக்கப்
பட்டு மரண தண்டனை உறுதியான சோகத்தில் அவர் ஊமை ஆகி விட்டார்.

இப்போது மூன்றாவதாக இவரும் அந்த dp block ல்.

ஆமாம் யார் அந்த மிஸ்டர் எக்ஸ் ? 🤔

(அநேகமாக தொடரும் .....)

பின்குறிப்பு : இந்த பதிவில் வரும் பெயர்களும் சம்பவங்களும் வெறும் கற்பனை மட்டுமல்ல 😉😉😉!




புத்தன்  ராஜரத்தினம்,
15-06-2020.

Wednesday, November 21, 2018

Google ராஜா



என்னுடைய பிறந்த நாளுக்கு ஒரு கைக்கடிகாரம் பரிசளிப்பது என இணையாள் முடிவெடுத்தாள். ஷாப்பிங் போகும் போதெல்லாம் உயர்தர கைக்கடிகாரங்களை வெறித்து பார்த்ததன் விளைவு. திருமணத்திற்கு பரிசாக வந்த  கடிகாரம் பன்னிரெண்டு வருடங்களாக இன்னும் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் மனசுதான் மாற்றம் வேண்டி அடம்பிடிக்கிறது. சாகும் வரை இதையே கட்டிக்க கொண்டு அழப் போகிறாயா என தத்துவார்த்தமான கேள்வி வேறு.


சென்னையில் ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு செல்வது, நாக்கினால் மூக்கை தொடுவதை விட பெரிய வேலை. கழுத்தை நெருக்கி மூச்சை திணரடிக்கும் போக்கு வரத்து நெரிசலே முக்கிய காரணம். விடுமுறை நாட்களில் -அதுவும் பகல் வேளைகளில் மட்டும் சாலைகள் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளும். அதன்காரணமாகவே வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை பகலை மட்டுமே ஷாப்பிங் செல்ல தேர்ந்தெடுப்போம்.


அன்றும் அப்படித்தான். 


வேளச்சேரியில் உள்ள phoenix mall செல்ல வேண்டும்.


காரை ஸ்டார்ட்  செய்யும் முன்னர் google navigation ஐ தட்டினேன். கூகிள் சுலபமான, விரைவான வழியை - போக்கு வரத்து நெரிசல் உட்பட எல்லா விவரங்களுடன்  உடனுக்குடன் தருவதால் , எப்பொழுதுமே அதன் துணை இல்லாமல் பயணம் இல்லை. இது மட்டுமல்ல எந்த ஐயம் தோன்றினாலும் மனம் உடனே google ன்  துணையை நாடுவதை தவிர்க்க முடியவில்லை.



இப்படி எதற்க்கெடுத்தாலும் கூகுளை  நம்புவதைப்  பார்த்து  சிலர் நக்கலாக சிரிப்பது ஓரக் கண்ணில் தெரிந்தாலும் அதை அலட்சியப் படுத்த கற்றுக் கொண்டேன். 

நீங்கள் நினைப்பது புரிகிறது. இது ஒரு மன நோயல்ல. முற்றிலும் நார்மல்!!!


வேண்டுமானால் நீங்களும் சோதித்துப் பாருங்கள்.


உங்களுக்கு நீங்களே யாரென்று சந்தேகம் தோன்றினாலோ ,உங்களுக்கு எதிரில் செல்லும் சிவப்பு சுடிதாரின் பெயர் மற்றும் விவரம் தேவைப் பட்டாலோ அல்லது மனைவின் மூட் பற்றிய  விவரங்கள் தேவைப் பட்டாலோ- எதை வேண்டுமானாலும்  கேட்டுப் பாருங்கள்.

சரியான பதிலுக்கு நான் உத்திரவாதம்.

Google ன் துணையுடன் பயணம் இனிதாக சென்று கொண்டிருந்தது. வேளச்சேரியை நெருங்கிக் கொண்டிருந்தோம்.


கடிகாரம் எங்கு வாங்குவது?


மனைவியுடன் கலந்தாலோசித்து Titan showroomக்கு  செல்வது என முடிவானது.


Phoenix ல் Titan showroom எங்குள்ளது என சரியாக நினைவில்லை.



நீங்கள் நினைப்பது சரி. உடனே Googleஐ  ஆன் செய்தேன். அதற்க்கு Titan showroom Phoenix mall என்று தேட உத்தரவிட்டேன். விலாசமும் , தொலைபேசி எண்ணும் வந்தது. காரை ஓட்டிக் கொண்டே ப்ளூ டூத் speaker மூலம் call செய்து அந்த கடையை தொடர்பு கொண்டேன்.


“ஹலோ”



“ஹலோ”



“Is it phoenix mall... Titan show room?”



“Yes Sir , How can I help you ” ஒரு இளம் பெண்ணின் கவர்ச்சிக் குரல்.



“ Could you tell me your shop number or nearby landmark please ...so that....”



“ Sure sir. It is in the basement of the mall. Opposite to coffee day cafe”



“ Oh  okey ..Thank you”



Mall ஐ அடைந்து basement வந்து சேர்ந்தோம்.



"See எவ்வளவு சுலபமாக கடையை கண்டு பிடித்துவிட்டோம். 

Google இல்லையென்றால் அலைந்திருப்போம்" - என ஓரக் கண்ணால் 
பார்த்த நக்கல் சிரிப்புக்கு  பதிலடி கொடுத்துக்கொண்டு வந்தேன்.


Coffee day எங்கே ? தேடினோம். பத்து நிமிடங்களாகியும் தென்படவில்லை.



ச்ச்சே இந்த mall களின் உள்ளே கடையை கண்ணுபிடிக்க ஏன் navigation ஏதும் இல்லை என சலித்துக் கொண்டேன்.



சீருடை அணிந்த ஒரு security ஐ அணுகினோம்.



“ coffee day மூன்றாவது தளத்தில்தானே உள்ளது” என்றார்.



“Titan showroom?” என்றோம்.



“ அது முதல் மாடியில் , funky monkey கடைக்கு எதிரில் உள்ளது” என்றார்.



குழப்பமாகிவிட்டது.



முகம் தெரியாத அந்த இளம் பெண்ணின் மீது கோபம் வந்தது. மறுபடியும் அதே எண்ணை தொடர்பு கொண்டேன்.



“ஹலோ”



“Hi sir. How can I help you?” இப்பொழுது ஒரு ஆணின் குரல்.



“We are searching your showroom since last 15 minutes. Few minutes back a lady from your shop told us, it  is  opposite to coffee day. Is that correct?”சற்று கடுமையான குரலில் வினவினேன்.



“Yes sir. It is bang opposite to coffee day.” என்றான் - வியாபார பணியாளர்களுக்கே  உரித்தான போலி மரியாதை மற்றும் போலி பணிவுடன்.



சுர்ரென்னு கோபம் தலைக்கேறியது.



“There is no coffee day shop  in the basement. Security person  says it is in the third floor. And Titan showroom is in the first floor.எங்கள என்ன லூசுங்கன்னு  நினைச்சிட்டீங்களா”



கோபம் அதிகமானாதால் தமிழ் தானாக வந்தது.



“ Sir I don’t understand  kannada. I will give the phone to my colleague - he will help you” என்று தப்பித்து ஓடினான்.


 வட இந்தியனாக இருக்கும். தமிழுக்கும் கன்னடத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என நினைத்துக் கொண்டே அடுத்தவனுடன் பேச்சை 

தொடர்ந்தேன். 


அவர் கன்னடத்தில் ஏதோ சொல்ல வர...



“ Sir could you speak in English or Tamil ” என்றேன் பள்ளி வாத்தியார் போன்ற கறாரான குரலில்.



  தமிழ் நாட்டில் கன்னட காரர்களின் தொல்லை தாங்கல என்ற எரிச்சலுடன்.



“ Tamil? .....Sir which phoenix mall you are talking about. This is Bangalore Phoenix”



என்றான் மறுமுனையில்.


                                                   ***************************
                                 
   புத்தன் ராஜரத்தினம் ,
   21/11/2018.