Monday, June 15, 2020

ஆண்களின் WA பரிதாபங்கள்!



முரளிக்கு நன்றி. இப்படி ஒரு தலைப்பை கொடுத்து கற்பனையை தூண்டியதற்க்காக.

மேலோட்டமாக பார்த்தால் பெண்களுக்குத்தானே பாதிப்பு அதிகம் என்று தோன்றும். நிச்சயம் இந்த பதிவை படித்தபின்பு உங்கள் முடிவில் மாற்றம் இருக்கும்😜😀.






மன்மத பஞ்சுவை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு நேர்ந்த கண்ணீர் கதையை கேளுங்கள், முதலில்.

பெயருக்கு ஏற்ற மாதிரி அவருக்கு பல நண்பிகள்
( அல்லது அதனால்தான் அவருக்கு அப்படி ஒரு பெயரே வைக்கப் பட்டதோ!). அவர்களுடன் விடிய விடிய ... (நீங்க நினைப்பது மாதிரி தவறாக ஒன்றுமில்ல - dirty mind )...WA, FB என்று குறுஞ்செய்தி பறிமாரிக்கொள்வார்கள். அப்படி ஒரு நாள் இரவு முழுதும் கண் முழித்து பின் காலையில் உறக்கம் விழித்தார் நம் பஞ்சு. வழக்கம் போல முதல் வேலையாக தன் கைப்பேசியில் உள்ள குறுஞ்செய்திகளை ஆராய்ந்தார். 
அவரின் special gf இடமிருந்து ஒரு குறுஞ்செய்தி.

“Hi Darling, என்னோட புது DP எப்படியிருக்கு” என்று.

அண்ணன் சளைத்தவரா?

சினிமா போஸ்டர்களை பார்த்தே reviews எழுதும் வல்லமை படைத்தவராயிற்றே.

“Super .... சூப்பரோ சூப்பர் 👌🏽👌🏽👌🏽👌🏽”

என்று dp யை பார்க்காமலேயே அடித்து விட்டார்.

நம்மைப்போல அவரின் gfக்கும் அவரைப்பற்றி தெரிந்திருந்ததால்

“ 😡😡😡 என்னோட புது புடவை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ”

என்று சிணுங்கினார்.

அடச்சே இது என்ன பிரச்சனை என்று முதல் முறையாக dp யை பார்த்து அவசர அவசரமாக

“ sivappu selLai nallaaga irjukkudhu” ( இதை தமிழ் மொழி பெயர்பாளர் இல்லாமலேயே சரியாக புரிந்துகொண்டிருந்தால் நீங்கள் அவரின் ஜிக்ரி தோஸ்த் என்ற தகுதியை அடைந்து விட்டீர்கள்😜) என்று தட்டி விட்டார்.

அடுத்து அரை மணி நேரம் தொடர்ந்து special gf இடமிருந்து - lipstick, ear rings, necklace, watch , அடிச்ச perfume, கால்ல போட்டிருக்கற sandal - ( passport size photoல) என்று ஒவ்வொன்றாக துருவி துருவி கேட்டு குறுஞ்சய்திகள் அவரை அம்புகள் போல தாக்கி துளைத்தன.

பல் துலக்காமல், காலைக்கடன்களை கூட முடிக்காமல் - இந்த எதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்து பொத்தலாகிப் போனார் நம் பாவப்பட்ட பஞ்சு.

கெஞ்சி கூத்தாடி ஒரு அரை மணி நேரம் அனுமதி வாங்கி horlicks, boost எல்லாம் போட்டு குடித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் திரும்ப வந்தமர்ந்தார்.

மீண்டும்  அதே special gf இடமிருந்து மற்றும் ஒரு குறுஞ்செய்தி

“ என்னோட புது dp - ஜீன்ஸ் , டி சர்ட் ல எப்படி?” என்று.

புஸ்ஸ்... என்று பஞ்சராகி விட்டார் பஞ்சு.

அப்புறம் என்ன மன நல மருத்துவனைதான் ;கீழ்பாக்கம்தான்; Dedicated DP block ல் அனுமதிக்கப்பட்டு விட்டார்.








குரு நாதனின் கதை இப்படி என்றால் அவரின் சிஷ்யன் மட்டும் சளைத்தவரா என்ன...

அவரை DP2 ( DPXDP) எப்படி தாக்கியது என்று பாருங்கள்.

அவர் பெயர் வெப்படை சல்மான் துரை. 
வயது 27( என்று நினைப்பு ; 27 ல் எடுத்த புகைப்படமே DP யிலும்), 
திருமணமாகாதவர்( இதுவும் நினைப்பு மட்டுமே ).

நேரில் தன் முறுக்கான சல்மான் பாடியை பார்த்து பயந்து ஓடி விடுகிறார்கள் என்பதால் பார்க்காமலேயே WA ல் ஒரு பெண்ணுடன் நட்பாகிவிட்டார். அதுதான் இப்பொழுது சுலபமாயிற்றே. எண்ணிலடங்கா WA குழுக்கள். வீட்டுக்கொன்று, வீதிக்கொன்று, corona வந்தவர்களுக்கு ஒன்று, வரப்போகிறவர்களுக்கு ஒன்று - என்று. 

பெண்ணின் பெயரும் DP Deepika Padukone.


அப்புறம் என்ன - இரவு பகலாக ஒரே கொஞ்சல் , கெஞ்சல்கள்தான். வாலிப வயதின் ஏக்கத்தில் DP யின் முகத்தை DP யிலாவது பார்க்கலாமே என்று பார்த்தார் நம் சல்மான். அப்படியே அதிர்ந்துவிட்டார். அதில், ஒரே பூக்கள் படம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூக்களாக. நம்முடைய சீகே யின் IOK யில் வருவதைப் போன்று பெயர் தெரியாத பூக்கள் எல்லாமே. மனம் கவர்ந்தவளின் முகம் காண முடியாத அதிர்ச்சியில் இவருக்கும் மனது பாதித்துவிட்டது. இப்பொழுது இவரும் அதே DP block ல் - குரு நாதருக்கு துணையாக; நீ வானம், நான் பறவை , நீ பூ, நான் முள் - என்று பிதற்றிக்கொண்டு உள்ளார்.

ஆனால் அவருக்கு DP யைப் பற்றிய உண்மை தெரிந்திருந்தால் மனது மட்டுமல்ல உயிருக்கே ஆபத்து விளைந்திருக்கும். நல்ல வேளை உயிர் தப்பித்துவிட்டார்.

ஆமாம் DP பேரன் பேத்தி எடுத்த ஒரு அறுபது வயதாகிய பாட்டி!!!

அடுத்து ...

இவரின் பெயரை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். இப்போதைக்கு மிஸ்டர் எக்ஸ் என்று வைத்துக்கொள்வோம். இவர் status மற்றும் dp யில் ஒரு நாளின் பெரும் பகுதியை செலவிடுபவர். அவருக்கும் வந்ததே சோதனை. அவரின் மனைவி புது பழக்கமாக dp , status போட ஆரம்பித்து இருந்தார். அது அவருக்கு தெரியவில்லை - மனைவின் DP யை அவர் பார்ப்பதில்லை என்பதை தனியாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திருமணமாகி பத்து வருடங்களுக்கு மேலாகியும் அப்படி ஒரு கெட்ட பழக்கம் உள்ள எந்த ஆணும் இப்பூவுலகில் இல்லை என்று சமீபத்திய lancet ஆராய்ச்சியே சொல்கிறது. இத்தோடு இருந்திருந்தால் பரவாயில்லை.

ஆனால் சம்பவத்தன்று “என்னோட status , dp பார்த்தீர்களா” என்று கேட்ட மனைவியின் குறுஞ்செய்தியையும் அவர் பார்க்கவில்லை.இது கொஞ்சம் அதிகம்தானே.

அன்று ஆபீஸ் முடிந்து வீட்டிற்க்கு சென்றபோது அங்கு நிலவிய மயான அமைதி எதையோ உணர்த்தியது எக்ஸ்க்கு. உடனே பொறி தட்டியது. சட்டென்று முதலில் குறுஞ்செய்தியையும் பின்னர் dp,status களையும் பார்த்தார்.

Dp யில் அவர்கள் திருமண படம்.
Status ல்- “Celebrating Wedding Anniversary”!

அடச்சே எப்படி மறந்தேன் என்ற குற்ற உணர்ச்சியுடன் மரண தண்டனை பெற்ற கைதி போல பயத்துடன் எதிர்காலமே சூன்யமாகி திகைத்து நின்றார். சமாளிப்பதை தவிர வேறு வழி?

“சர்ப்ரைஸ் dinner ஏற்பாடு செய்து இருக்கிறேன் அன்பே - ஆபீசில் கொஞ்சம் வேலை அதிகம் அதான் பதில் தர முடியவில்லை “ என தன் பொய்யில் தனக்கே நம்பிக்கை இல்லாமல் தயங்கி தயங்கி கருணை மனு போட்டார்.

இதை கேட்டவுடன் பறக்கும் தட்டு ஒன்று அவரை குறிவைத்து தாக்கும் நோக்கத்துடன் மின்னல் வேகத்தில் வந்து மயிரிழையில் திசை மாறி பெரும் சத்தத்துடன் தரை இறங்கியது.

“ என்னோட தங்கச்சியோட dp, status எல்லாம் பாத்து லைக் பண்ணிட்டுதான் ஆபீஸில் பிஸியா இருந்தீங்களோ?” என்று அவளின் குரல் கோபம் மற்றும் வெடிக்கும் அழுகையும் கலந்து மூர்க்கத்துடன் அமைதியை கிழித்தது.

ஆஹா அவளின் தங்கைக்காரிதான் போட்டு கொடுத்திருக்கிறாள். இந்த தவறை செய்தவன் கடவுளே ஆனாலும் அவன் தன் மனைவியிடமிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்து உறைந்து போனார் மிஸ்டர் எக்ஸ்.

கருணை மனுவும் நிராகரிக்கப்
பட்டு மரண தண்டனை உறுதியான சோகத்தில் அவர் ஊமை ஆகி விட்டார்.

இப்போது மூன்றாவதாக இவரும் அந்த dp block ல்.

ஆமாம் யார் அந்த மிஸ்டர் எக்ஸ் ? 🤔

(அநேகமாக தொடரும் .....)

பின்குறிப்பு : இந்த பதிவில் வரும் பெயர்களும் சம்பவங்களும் வெறும் கற்பனை மட்டுமல்ல 😉😉😉!




புத்தன்  ராஜரத்தினம்,
15-06-2020.

Wednesday, November 21, 2018

Google ராஜா



என்னுடைய பிறந்த நாளுக்கு ஒரு கைக்கடிகாரம் பரிசளிப்பது என இணையாள் முடிவெடுத்தாள். ஷாப்பிங் போகும் போதெல்லாம் உயர்தர கைக்கடிகாரங்களை வெறித்து பார்த்ததன் விளைவு. திருமணத்திற்கு பரிசாக வந்த  கடிகாரம் பன்னிரெண்டு வருடங்களாக இன்னும் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் மனசுதான் மாற்றம் வேண்டி அடம்பிடிக்கிறது. சாகும் வரை இதையே கட்டிக்க கொண்டு அழப் போகிறாயா என தத்துவார்த்தமான கேள்வி வேறு.


சென்னையில் ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு செல்வது, நாக்கினால் மூக்கை தொடுவதை விட பெரிய வேலை. கழுத்தை நெருக்கி மூச்சை திணரடிக்கும் போக்கு வரத்து நெரிசலே முக்கிய காரணம். விடுமுறை நாட்களில் -அதுவும் பகல் வேளைகளில் மட்டும் சாலைகள் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளும். அதன்காரணமாகவே வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை பகலை மட்டுமே ஷாப்பிங் செல்ல தேர்ந்தெடுப்போம்.


அன்றும் அப்படித்தான். 


வேளச்சேரியில் உள்ள phoenix mall செல்ல வேண்டும்.


காரை ஸ்டார்ட்  செய்யும் முன்னர் google navigation ஐ தட்டினேன். கூகிள் சுலபமான, விரைவான வழியை - போக்கு வரத்து நெரிசல் உட்பட எல்லா விவரங்களுடன்  உடனுக்குடன் தருவதால் , எப்பொழுதுமே அதன் துணை இல்லாமல் பயணம் இல்லை. இது மட்டுமல்ல எந்த ஐயம் தோன்றினாலும் மனம் உடனே google ன்  துணையை நாடுவதை தவிர்க்க முடியவில்லை.



இப்படி எதற்க்கெடுத்தாலும் கூகுளை  நம்புவதைப்  பார்த்து  சிலர் நக்கலாக சிரிப்பது ஓரக் கண்ணில் தெரிந்தாலும் அதை அலட்சியப் படுத்த கற்றுக் கொண்டேன். 

நீங்கள் நினைப்பது புரிகிறது. இது ஒரு மன நோயல்ல. முற்றிலும் நார்மல்!!!


வேண்டுமானால் நீங்களும் சோதித்துப் பாருங்கள்.


உங்களுக்கு நீங்களே யாரென்று சந்தேகம் தோன்றினாலோ ,உங்களுக்கு எதிரில் செல்லும் சிவப்பு சுடிதாரின் பெயர் மற்றும் விவரம் தேவைப் பட்டாலோ அல்லது மனைவின் மூட் பற்றிய  விவரங்கள் தேவைப் பட்டாலோ- எதை வேண்டுமானாலும்  கேட்டுப் பாருங்கள்.

சரியான பதிலுக்கு நான் உத்திரவாதம்.

Google ன் துணையுடன் பயணம் இனிதாக சென்று கொண்டிருந்தது. வேளச்சேரியை நெருங்கிக் கொண்டிருந்தோம்.


கடிகாரம் எங்கு வாங்குவது?


மனைவியுடன் கலந்தாலோசித்து Titan showroomக்கு  செல்வது என முடிவானது.


Phoenix ல் Titan showroom எங்குள்ளது என சரியாக நினைவில்லை.



நீங்கள் நினைப்பது சரி. உடனே Googleஐ  ஆன் செய்தேன். அதற்க்கு Titan showroom Phoenix mall என்று தேட உத்தரவிட்டேன். விலாசமும் , தொலைபேசி எண்ணும் வந்தது. காரை ஓட்டிக் கொண்டே ப்ளூ டூத் speaker மூலம் call செய்து அந்த கடையை தொடர்பு கொண்டேன்.


“ஹலோ”



“ஹலோ”



“Is it phoenix mall... Titan show room?”



“Yes Sir , How can I help you ” ஒரு இளம் பெண்ணின் கவர்ச்சிக் குரல்.



“ Could you tell me your shop number or nearby landmark please ...so that....”



“ Sure sir. It is in the basement of the mall. Opposite to coffee day cafe”



“ Oh  okey ..Thank you”



Mall ஐ அடைந்து basement வந்து சேர்ந்தோம்.



"See எவ்வளவு சுலபமாக கடையை கண்டு பிடித்துவிட்டோம். 

Google இல்லையென்றால் அலைந்திருப்போம்" - என ஓரக் கண்ணால் 
பார்த்த நக்கல் சிரிப்புக்கு  பதிலடி கொடுத்துக்கொண்டு வந்தேன்.


Coffee day எங்கே ? தேடினோம். பத்து நிமிடங்களாகியும் தென்படவில்லை.



ச்ச்சே இந்த mall களின் உள்ளே கடையை கண்ணுபிடிக்க ஏன் navigation ஏதும் இல்லை என சலித்துக் கொண்டேன்.



சீருடை அணிந்த ஒரு security ஐ அணுகினோம்.



“ coffee day மூன்றாவது தளத்தில்தானே உள்ளது” என்றார்.



“Titan showroom?” என்றோம்.



“ அது முதல் மாடியில் , funky monkey கடைக்கு எதிரில் உள்ளது” என்றார்.



குழப்பமாகிவிட்டது.



முகம் தெரியாத அந்த இளம் பெண்ணின் மீது கோபம் வந்தது. மறுபடியும் அதே எண்ணை தொடர்பு கொண்டேன்.



“ஹலோ”



“Hi sir. How can I help you?” இப்பொழுது ஒரு ஆணின் குரல்.



“We are searching your showroom since last 15 minutes. Few minutes back a lady from your shop told us, it  is  opposite to coffee day. Is that correct?”சற்று கடுமையான குரலில் வினவினேன்.



“Yes sir. It is bang opposite to coffee day.” என்றான் - வியாபார பணியாளர்களுக்கே  உரித்தான போலி மரியாதை மற்றும் போலி பணிவுடன்.



சுர்ரென்னு கோபம் தலைக்கேறியது.



“There is no coffee day shop  in the basement. Security person  says it is in the third floor. And Titan showroom is in the first floor.எங்கள என்ன லூசுங்கன்னு  நினைச்சிட்டீங்களா”



கோபம் அதிகமானாதால் தமிழ் தானாக வந்தது.



“ Sir I don’t understand  kannada. I will give the phone to my colleague - he will help you” என்று தப்பித்து ஓடினான்.


 வட இந்தியனாக இருக்கும். தமிழுக்கும் கன்னடத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என நினைத்துக் கொண்டே அடுத்தவனுடன் பேச்சை 

தொடர்ந்தேன். 


அவர் கன்னடத்தில் ஏதோ சொல்ல வர...



“ Sir could you speak in English or Tamil ” என்றேன் பள்ளி வாத்தியார் போன்ற கறாரான குரலில்.



  தமிழ் நாட்டில் கன்னட காரர்களின் தொல்லை தாங்கல என்ற எரிச்சலுடன்.



“ Tamil? .....Sir which phoenix mall you are talking about. This is Bangalore Phoenix”



என்றான் மறுமுனையில்.


                                                   ***************************
                                 
   புத்தன் ராஜரத்தினம் ,
   21/11/2018.                                  

Monday, April 9, 2018

இந்தியாவை லிப்டு கரா தே !



என்னடா இது தமிழ் இணையத்தில் நமக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் ஹிந்தியில் ஏதோ சொல்கிரானே என்று பார்க்கிறீர்களா.

அட்னன் சாமியின் பிரபலமான ஹிந்தி பாப் பாடலைப் பற்றி ஏதாவது சொல்கிறானோ என சிலர் நினைத்திருக்கக் கூடும்.

இந்தியாவை லிஃப்டு செய்யரேன்னு ஒரு ஜி ஊர ஏமாத்திட்டு இருக்கே - அதைப் பற்றியா என சலிப்பாக சிலர் பெரு மூசசு விடுவதும் கேட்கிறது .

இல்லை.

நான் சொல்லப் போவது சாதாரணமான, தினமும் நாம் பார்க்கக்  கூடிய - lift -மின் தூக்கியைப் பற்றியது .

இந்தியர்கள் மொழியாலும் , மதத்தாலும் , இனத்தாலும் வேண்டுமானால்  வேறுபட்டிருக்கலாம் . அனால் உடல் மொழி  , பழக்க வழக்கங்கள் , சுய ஒழுக்கம் இவை எல்லாவற்றாலும் பின்னி பிணைந்து ஒருவருடன் ஒருவர்  பிரிக்க இயலா வண்ணம் கலந்து - ஒரே மாதிரி உள்ளனர்- கஷ்மீர் முதல் கன்னியாக குமரி வரை.

                                                   ****************************


                                          

                                            

மின் தூக்கியை  நிறுத்த உள்ள மேலே , கீழே குறியீடு எப்படி செயல்படுகிறது என்று பலருக்கும்  ஒரு சந்தேகம். அது மின் தூக்கியை வரவழைக்கவா , இல்லை நாம் போகும் திசையைக்  குறிக்கவா ? எதற்கு குழப்பம் என்று இரண்டையும் அமுக்குபவர்களே அதிகம். அமுக்கிவிட்டு ரகசியமாக யாரும் பாக்க வில்லையே என்று உறுதி செய்து கமுக்கமாக சிரிப்பு வேறு .

அப்படி என்ன அவசரமோ , மின் தூக்கிக்கு காத்திருக்கும் போதே அதை சுற்றி வளைத்து  முற்றுகையிட்டு விடுவார்கள். உள்ளிருப்பவர் வெளியே வர விடாமல் உள்ளே செல்ல முயற்சசித்து ஒரு போராடடம். முட்டி மோதி  ஒரு வழியாக வெளியே வருவதற்குள் - ஏன் இந்த சனியனில் ஏறினோம் என்றாகிவிடும்.

வெளியில்தான் இந்த கலவரம் என்றால் மின் தூக்கியில் ஏறியவுடன் உள்ளே செல்லாமல் வழியை அடைத்துக்கொண்டு நிற்பார்கள். "நான் வசதியாக நிற்கிறேன் - நீ செத்தா என்ன பொழசசா  எனக்கு என்ன" என்பதாக ஒரு எக்காளப்பார்வை.

நெரிசலில்தான் இப்படி  என்றால் , குறைவான நபர்கள் உள்ள போது வேறு விதமான பிரசனை. எங்கே பார்ப்பது எப்படி பார்ப்பது என்ற நாகரிகம் சுத்தமாக கிடையாது. காரணமில்லாமல் எதோ தொலைத்துவிடத்தை தேடுவது போல் நம்மையே உற்று உற்று பார்ப்பார்கள், சிலர் .  தர்மசங்கடம்.


                                          


அடுத்து லிப்ட் உதவியாளர் .

 சார் அங்க ஒரு மில்லி மீடடர் இடம் காலியா   இருக்கே , சேர்ந்து நில்லுங்க என்று புளியை  மூட்டையில் அடைப்பது போல நெருக்குவார்.

உடலுடன் உடல் ஒட்டி , மூசசு காற்று மேலே படடாலும் ஒன்றுமே தவறில்லாதது போல் கையில் உள்ள மொபைலை நொண்டிக் கொண்டிருப்பர்.

பர்சனல் bubble space அல்லது proxemics பற்றி இவர்களிடம் பேச முடியுமா ? நீங்களே சொல்லுங்கள்.

சில சமயங்களில் இப்படி நேரும் போது , ஆளை விடுங்கள், படியிலேயே வருகிறேன் என்று தப்பித்து ஓடும்போது , ஏதோ விசித்திர ஜந்துவைப்  போல நம்மை பார்ப்பார்கள்.

அடுத்து, சில அதி புத்திசாலிகள் மேலே செல்ல வேண்டியிருந்தாலும் கீழே செல்லும் போதே ஏறிக் கொண்டு - நான் கீழே போய்ட்டு மேலே போய்க்கிறேன் என்பார்கள் . அதாவது இப்போதே இடம் பிடிக்கிறார்களாம் . அங்கேயே காத்திருந்தால் கீழே சென்று மேலே வரும்போது இடம் கிடைக்காதாம். நாங்கெல்லாம் யாரு . டேய் சாமிகளா உங்கள எல்லாம் ஆர்டர் குடுத்து செய்வாங்களா ஸ்ஸ் ஸ்ஸ் அப்ப்பா.

நம் நாட்டில் ஒன்று இல்லை ஓராயிரம் கடவுள் கள்  உண்டு .
அவர்களைப்பார்த்து நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று  " ஆண்டவா, தயவு செய்து இந்தியர்களை லிப்ட் கரா தே !

ஆண்டவன் இல்லாட்டி at least அட்னன் சாமி பையா, நீ யாவது லிப்ட் கரா தே!!




                     "Teri Oonchi Shaan Hai Maula
                       Meri Arzi Maan Le Maula
                       Tu Hai Sab Kuch Jaanne Waala
                       Main Hoon Tera Maanne Waala
                        Mujhko Bhi Toh Lift Kara De
                        Thodi Si Toh Lift Kara De"





புத்தன் ராஜரத்தினம்
8th April ,2018



Thursday, August 17, 2017

இசைக் கிளர்ச்சி




ஊதுவத்தியிலிருந்து வரும்
வெண்புகை போல
மெதுவாக
வளைந்து நெளிந்து
அந்த அறையை நிரப்பியது ( ராஜாவின்) இசை


நிசப்தத்தின் மேல்
ஒரு வாஞ்சையுடன்
மெல்லிய போர்வையாக படர்ந்தது அந்த இசை


அது இதுவரை கண்டுபிடிக்கப் படாத ஒரு
புது வாசனையுடன் இருந்தது


அதன் ஸ்பரிசம்
பெண் ஆரத்தழுவுவதைப் போலவும்
ஆயிரமாயிரம் நாக்குகள்
சரீரத்தை நிர்வாணமாக்கி தீண்டுவதைப் போலவும்
உடலின் ஒவ்வொரு செல்லையும்
ஆர்கசம் அடையச் செய்தது


சம்மட்டியால் கண்ணாடிக் குவளை ஒன்று
நொறுக்கப் படும் தீவிரத்துடன்
என்னை சுக்கு நூறாக்கியது அந்த இசை


அந்த அமில இசையில்
உலோகமாய் கரைந்து கொண்டும்

அந்த எண்ணெய் திரவ இசையில்
பாம்பாய் நெளிந்து கொண்டும்

நான்



- புத்தன் ராஜரத்தினம்